24. என் உள்ளம் உன் வசம்

 


வீட்டில் புடவை கட்டி கொண்டு வலம் வந்த மித்ராவின் மேலேயே சுற்றி வந்த சாவித்திரியின் பார்வை கீர்த்தனாவின் மேல் நிலை கொள்ள,

“ஏன் அம்மாடி நீ புடவை கட்டல?” என்றார்.

“ ஏன் அத்தை. இந்த சுடி நல்ல இல்லையா?” என்று கீர்த்தனா கேட்டாள்.

“ நல்லா இருக்குடா… ஆனா எனக்கு உன்னை சேலையில் பார்க்கணும்னு ஆசை அதான் கேட்டேன்?”

“ சரி அத்தை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மாத்திட்டு வரேன்.” என்று நகர போனவளின் கால்கள் அடுத்து அவர் சொன்ன செய்தியில் பின்னியது.

“ நிச்சயத்தப்போ கட்டுனியே அந்த பட்டு சேலையை கட்டுடாமா…” என்று.

அவரின் முகம் ' இன்னும் முழுதும் சரியாகவில்லையோ ' என்று வாட,

மித்ரா பதில் கூறினாள்.

“ அத்தை அவளுக்கு பட்டு சேலை கட்ட வராது. இருங்க நான் போய் கட்டி விட்டு கூட்டி வரேன்” என்று கீர்த்தனாவை உடன் அழைத்து சென்றாள்.

போன முறை வந்த போது ஜானகி அந்த பட்டு புடவையை கொண்டு வந்து இருந்ததால் வசதியானது.

இருபது நிமிடத்தில் தேவதை போல தயாராகி வந்த கீர்த்தனாவை நெற்றி முறித்தார்.

நீண்ட நேரம் அவர்களோடு கழித்து விட்டு மனமே இல்லாமல் விடை பெற்று கிளம்பினர் சாவித்திரி மற்றும் விக்கி.

நேரம் பத்தை கடந்து நகர்ந்து கொண்டிருக்க, அன்றைய தினம் தந்த சுகந்த நினைவை எண்ணி களிப்புற்று கொண்டிருந்த கீர்த்தனா அதை தன் மாமாவிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி செல்லில் அவனை அழைத்தாள்.

“ ஹலோ மாமா”

“ ம்ம்ம்” ஒரு மாதிரியாக ஒலித்தது அவன் குரல்.

“ இன்னக்கி நான் எவ்வளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா?”

“ ஓஹோ”

அப்போது தான் அவனின் குரல் வேறுபாட்டை உணர்ந்தாள் கீர்த்தனா.

“ என்ன மாமா பிஸியா இருக்கியா?”

“ ம்ம்ம்” என்ற ஒரு பதிலே கிடைத்தது.

“ எதுக்கு சந்தோசம்ன்னு கேக்க மாட்டியா?”

அவன் பிடித்து வைத்து கொண்டிருந்த பொறுமை காற்றில் பறந்தது.

“ எதுக்கு கேக்கணும்?. நான் தான் பார்த்தேனே. நீங்க எல்லாரும் சந்தோசமா பேசிட்டு இருந்தத.

இல்லை தெரியாம தான் கேக்குறேன். நான் அப்படி என்னடி தப்பு பண்ணிட்டேன்? ஒரு கட்டத்துல கோவ பட்டுட்டேன். அதும் தப்புன்னு சொல்ல முடியாது அந்த சமயத்துல. அதுக்கு அப்புறம் நடந்தது தெரிஞ்சு உங்க கிட்ட பேச நெருங்குனா… என்னை வேண்டாம்னு ஒதுக்கி வச்சிட்டீங்க. இன்னக்கி எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எனக்குன்னு இந்த உலகத்துல யாரும் இல்லாத மாறி ஒரு ஃபீல்”

விட்டால் அவன் இன்னும் என்னென்ன உலறியிருப்பானோ.. மறுமுனையில் பீப் சத்தம் ஒலிக்க , செல்லை தூக்கி சோபாவின் மேல் எறிந்தவன் அதிலேயே அமர்ந்து கொண்டான்.

அவன் மனம், மாலையில் கோவிலில் சாவித்திரி, விக்கி, கீர்த்தனாவின் சிரித்த முகம் கண்டு நெருப்பில் காய்ந்தது. அவர்களோடு ஒன்ற இயலாத தன் நிலையை கண்டு தன்னிரக்கம் கொண்டது.

அது கோபமாக கீர்த்தனாவின் மேல் திரும்பியது. அவள் செல்லில் அழைக்கவும் முதலில் எடுக்க வேண்டாம் என்று எண்ணி கொண்டவன் , பின் மனம் கேளாமல் எடுத்து தொலைத்தான். அப்படியும் பொறுமை கடை பிடித்தவனுக்கு கீர்த்தனா மீண்டும் மீண்டும் கேட்ட ' சந்தோசம் ' அவனின் பொறுமையை சோதிக்க வைத்தது. அவன் இல்லாத அவளுக்கு சந்தோசமா??? என்று கோவம் வந்தது.

நீண்ட நேரம் ஆகியும் கோவம் குறையாமல் அமர்ந்தவனின் உள் மனம் உந்த தலையை நிமிர்த்தி பார்த்தான்.

கதவின் விளிம்பில் உடல் சாய்த்து மார்பு குறுக்கே கை கட்டி கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.

போனில் அவன் உலற ஆரம்பித்த கணமே மித்ராவிடம் சொல்லி விட்டு வந்திருந்தாள்.

“என்னமோ போன்ல சொன்னியே? சரியா கேக்கல, அதான் என்னனு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்.”

அவனை நோக்கி இரண்டடி எட்டி வைத்து கொண்டே கேட்டாள்.

“ ஏய்? அங்கே நில்லு. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ என் மனசு சரியில்ல. தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பு” அதட்ட தொடங்கியவன் கெஞ்சலில் முடித்தான். அவன் மனம் எங்கே நிலைமை கை மீறி விடுமோ என்று பயந்து கொண்டு இருப்பது அவனுக்குத் தானே தெரியும்.

“ ஹான், நியாபகம் வந்துடுச்சு. என்ன சொன்ன? உனக்குன்னு யாரும் இல்லாத மாறியா தோணுச்சு…”

ஒரு முறை தன்னை குனிந்து பார்த்து கொண்டவள்,

“ ஏன் மாமா? நான் உயிரோட தானே இருக்கேன்.” சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்க, அவன் புரியாமல் முழித்தான்.

“ இல்லை, உன்னோட வாழ்க்கையில எப்படியும் உனக்குன்னு யாரும் இல்லை என்ற நிலைமை நிச்சயம் வரும்.”

உதடு கடித்து தன் உணர்வுகளை அடக்கியவள்,

“அப்படி ஒரு நிலை வரும் போது நான் உயிரோட இருந்திருக்க மாட்டேன். ஒரு வேலை உனக்கு இப்போ அப்படி ஒரு எண்ணம் வந்து இருக்குமேயானால் அப்போ நான் செத்து போயிட்டே…..”

“ ரோஜா ” என்ற கர்ஜிப்போடு அவளை அறைந்தவன், அவளை இழுத்து தன்னுள் இறுக்கி அணைத்து கொண்டான்.

“ என்ன வார்த்தை சொல்லிட்ட ரோஜா?” என்ற அதிர்வோடே அவளின் முகம் நிமிர்த்தி அதில் தன் இதழ் பதித்து கொண்டிருந்தான்.

ஆனால் அவளோ அவன் நெஞ்சில் பட் பட்டென்று அடி வைத்து கொண்டு இருந்தாள்…

“ சொல்லுவியா... இனிமே அப்படி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வருமா?... என்ன நினைச்சுட்டு இருக்க நீ என்னை பத்தி?.. இன்னக்கி நான் உன் பக்கதுல இல்லைனாலும்… எங்க பேச்சு உன்ன பத்தினது தானே… எப்படி நீ அப்படி சொல்லலாம்?”

அவள் கோவம் கொஞ்சமும் குறையாமல் எகிறி கொண்டே செல்ல… அவன் தான் அதற்கு மேலும் அவளை பேச விடாமல் அவளின் செவ்விதழ்களை சிறை பிடித்தான்.

நெடு நேரம் திமிறி கொண்டு இருந்தவள் மெல்ல அவனுள் அடங்கினாள்.

“கோவம் போச்சா… இல்ல மகாராணி கிட்ட இன்னும் மன்னிப்பு வேண்டனுமா?”

அவன் கண்ணடித்து கேட்க… இவள் அவன் தோளில் செல்லமாய் தட்டினாள்.

“சரி, ரொம்ப லேட் ஆயிடுச்சு மாமா.. அங்க மித்ரா தனியா இருப்பா… நா போயிட்டு வரேன்.” என்று நகர போனவளை புடவையின் நுனியைப் பிடித்து நிறுத்தினான்.

“ ஏய் அங்க மித்ரா தனியா இருப்பான்னு யோசிச்சியே இங்க மாமாவும் தனியா தானே இருக்கேன். ப்ளீஸ் ப்ளீஸ் இன்னக்கி நைட் மட்டும் இங்க ஸ்டே பண்ணேன்… காலைல நானே கொண்டு போய் விடுரேன்”

நாடி தாங்கி கெஞ்சுபவனிடம் எப்படி மறுப்பு சொல்ல… சிரித்து கொண்டே சம்மதித்தாள்.

செல்லில் மித்ராவிற்கு தகவலை சொல்லிவிட்டு வந்தவளை குழந்தை போல் கையில் தூக்கி தட்டாமலை சுற்றினான்.

“ஹேய் ஜாலி இன்னக்கி மட்டுமாவது தலகாணியை கட்டி பிடிச்சு தூங்காம உன்ன கட்டி பிடிச்சுட்டு தூங்கலாம்…”

அவளை கட்டிலில் கிடத்தியவன் அவள் அருகில் சென்று நெருங்கி படுத்து கொண்டு அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.

“அச்சோ கைய கால வச்சுட்டு அமைதியா இரு மாமா… ஏன் புழு புழுண்ட்டு வர?”

“ ஏய் நீ பக்கத்துல படுத்து இருக்கும் போது எப்படிடி என்னால அமைதியா இருக்க முடியும்?”

“ இதுக்கு தான் நான் அப்போவே கிளம்புறேன் சொன்னேன். கேட்டியா?”

“ சரி சரி… கோவிச்சுக்காத… உன்ன பக்கத்துல வச்சி கிட்டு என்னால ரொம்ப நேரம் நல்லவனா நடிக்க முடியாது… சோ சீக்கிரம் தூங்கு…”

தட்டி கொடுத்து கொண்டே அவனும்… தட்டல் வாங்கி கொண்டே அவளும் உறங்கி போயினர்.

அவர்களின் மோகனம் கண்ட நிலவும் முகிலின் பின் மெல்லமாய் இறங்கியது.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கண் விழித்து கொண்டான் கார்த்திக்.

தன் கை வளைவில் மான் குட்டியாக சுருங்கி படுத்து கொண்டிருந்த கீர்த்தனாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளின் அழகு நெற்றியில் முத்தம் வைத்தான். தூக்கம் கலைய விலகி படுத்தவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டான்.

நேரம் செல்வது புரிய மனமே இல்லாமல் அவளை விடுவித்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.

குளித்து தயாராகி வந்தவனை ,

“ அய்யோ தப்பு பண்ணிட்டேனே… எல்லாம் உன்னால தான் மாமா…”

என்ற கீர்த்தனாவின் அழுகுரலே வரவேற்றது.

அவள் சொன்ன செய்தியில் ஸ்தம்பித்து நின்றான் கார்த்திக்.


Post a Comment

0 Comments