25. என் உள்ளம் உன் வசம்



காலையில் கண் விழித்த கீர்த்தனாவுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் முழித்தாள்.

மெல்ல முந்தைய இரவின் இனிமை நினைவுக்கு வர முகம் சிவந்தாள்.

குளியலறையில் இருந்து வந்த சத்தம் அவன் அங்கு இருப்பதை தெரிய படுத்தியது.

கைகளை கோர்த்து நீட்டி சோம்பல் முறித்தவளுக்கு சட்டென்று ஏதோ நினைவு வர தன் மேனியை ஏறிட்டாள்.

அவளின் பட்டு புடவை கலைந்து கிடந்தது.

' அச்சோ, நான் இப்போ என்ன செய்வேன்? எனக்கு மாத்து டிரஸ் கூட இல்லையே.. இப்போ என்ன பண்ண…? எனக்கு இத கட்டவும் வராதே. கடவுளே மித்ரா வேற நம்மள தேடிட்டு இருப்பா… இப்போ எப்படி வீட்டுக்கு போக? நைட் தப்பு பண்ணிட்டேன். பட்டு சாரிய கலையாம தூங்கி இருக்கணும். இந்த மாமா தான் கட்டி புடிச்சிட்டு தூங்கிரேனு பேர் பண்ணி இப்படி கலைச்சு விட்டுறுச்சு….இப்போ என்ன பண்ண….?'

அதி முக்கிய கவலை அவளை ஆட்கொண்டது.

நெடு நேரம் உலன்றவளுக்கு கண்ணீரே வந்து தொலைத்தது.

“ அய்யோ தப்பு பண்ணிட்டேன். எல்லாமே உன்னால தான்” என்று கண்ணீருடன் குளியலறை விட்டு வெளி வந்த கார்த்திக்கை சாடினாள்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அவசரமாய் அவள் அருகில் சென்றவன்,

“ ஏய் ரோஜா, இங்க பாறுமா… அழாத, இப்போ வருத்த படுற அளவுக்கு என்ன நடந்து போச்சு. கல்யாணத்துக்கு முன்னாடி ஒன்னா தப்பு பண்ண தான் கூடாது. நாம கட்டி பிடிச்சுகிட்டு தூங்க தானே செஞ்சோம். இதுலாம் தப்பு கிடையாதுடா. இங்க பாரு அழாத…”

குழந்தையாய் மாறி அவன் விளக்கம் கொடுக்க, முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் விழித்தவள் அவன் சொன்ன செய்தியும் அதை அவன் விளக்கிய லட்சணமும் அவளுக்கு சிரிப்பை வரவைக்க, விழுந்து விழுந்து சிரித்தாள்.

சில நொடிகளுக்கு பின் சிரிப்பை அடக்கியவள் அவளின் சிரிப்பை புரியாமல் பார்த்து கொண்டு இருந்த கார்த்திக்கை தன் விழியால் அழைத்தாள்.

அவனும் அவளை நெருங்கி அவள் கைகளை பற்றி கொண்டான். கட்டி பிடித்தால் எங்கே மறுபடியும் அழுவாலோ என்ற பயம் அவனுக்கு.

பற்றிய கையை மெல்ல அழுத்தி முந்தைய இரவின் இனிமையில் அவளுக்கு எந்த சுணக்கமும் இல்லை என்பதை அவனுக்கு புரிய வைத்தாள்.

அதன் பின்பே அவனுக்கு மெல்ல நிம்மதி.

“ அப்போ என்ன பிரச்சினை ரோஜா? ஏன் அழுத?”

மீண்டும் கவலை தலை தூக்க தன் நிலையை எடுத்து கூறினாள்.

அவளின் தலையாய கவலையில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவன் சிரிப்பதை கண்டவள் அவன் தோளில் நான்கு அடி வைத்தாள்.

“ லூசு மாமா, நான் எவ்ளோ சீரியஸா பேசுறேன். நீ சிரிக்குற” என்று கூறி கொண்டே மேலும் சில அடிகள் வைத்தாள்.

அவள் அடிப்பதை தடுத்தவன்,

“ இது தான் உன் கவலையா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். இப்போ என்ன ? உனக்கு பட்டு சேலை கட்ட வராது அவ்ளோ தான, சரி நீ போய் குளிச்சிட்டு வா. நான் கட்டி விடுறேன்” என்று முடிவு கூறினான்

“ அய், மாமா உனக்கு பட்டு சேலை கட்ட தெரியுமா?” குழந்தை போல் துள்ளி குதித்தவள், அவன் தலை இடதும் வலதுமாய் அசைவதை கண்டு முகம் சுருங்கினாள்.

“ அப்புறம் எப்படி?”

“ அதான் உனக்கு சாதா சேரி கட்ட வரும்ல. எப்படி சொல்லி கொடு. நான் அதை பட்டு சேலை வச்சு ட்ரை பண்றேன்” என்று அவளை சம்மதிக்க வைத்து அனுப்புவதற்குள் அவனுக்கு தலையே சுற்றியது.

அவள் குளித்து வருவதற்குள் இருவருக்குமான தேநீரை தயாரித்து கொண்டு வந்தான்.

இருவரும் சேர்ந்து டீ அருந்தி விட்டு அவளுக்கு புடவை கட்ட தயாராகினர்.

“ இப்படியே மடிப்பு கலையாம இங்க வரைக்கும் கொண்டு வா மாமா”

அவள் எடுத்து கொடுத்த மடிப்புகளை மெல்ல மெல்ல நகர்த்தி அவள் கை வைத்த இடத்தில் கொண்டு வந்து முடித்தவன் அவளின் தோளில் அதை சரித்தான்.

“ ஹப்பா, ஒரு வழியா மேல் பிளீட்ஸ் முடிஞ்சது. இப்போ கீழ”

அவள் எடுத்து கொடுக்க கொடுக்க கவனமாக அதை எடுத்து வந்தவன்,

“ பாட்டம் வரை நல்ல ப்ரஸ் பண்ணி விடு மாமா, அப்போ தான் நல்லா இருக்கும்” என்று அவள் கூறவும் அதையும் குத்து காலிட்டு அமர்ந்தவாறு செய்து முடித்தான்.

அவன் தீவிர முக பாவத்துடன் ஒவ்வொன்றையும் செய்ய, அவனின் முகம் பார்த்தவளுக்கு உதட்டில் புன்னகை தவழ செய்தது.

பெரு மூச்சு விட்டு நிமிர்ந்தவன் அவளிடம் கட்டை விரலை தூக்கி “ நல்ல இருக்கா?” என வினவ,

அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்தவள், அதிசய பட்டு போனாள். அவள் மேனியில் அந்த புடவை பாந்தமாய் படர்ந்து இருந்தது.

“ சூப்பர் மாமா” அவனின் தோளில் கை போட்டு கூறியவள்,

“ இனிமே எனக்கு கவலை இல்லை மாமா, எப்பவும் எனக்கு புடவை கட்டி விட நீ இருக்க … அது போதும்”

அவளின் தலையை முட்டி சிரித்தவன்,

அவளையும் அழைத்து கொண்டு கீர்த்தனாவின் வீடு நோக்கி சென்றான்.

கார்த்திக்கும் கீர்த்தனாவும் ஒன்றாக வருவதை பார்த்த மித்ராவுக்கு கால் தரையில் பாவவில்லை.

“வாங்க கார்த்திக் சார், உக்காருங்க சூடா டீ கொண்டு வரேன்”

முகம் கொள்ளா சந்தோஷத்தோடு அவனை வரவேற்றாள்.

“ டீ வேணாம் மித்ரா, டிபனே ரெடி பண்ணு.. இன்னக்கி இங்க தான் டேரா” என்று கூறி விட்டு சோபாவில் சாய்ந்தான்.

கீர்த்தனாவும் மித்ராவும் சேர்ந்தே காலை உணவு தயாரிக்க சென்றனர். சிறிது நேரத்தில் அங்கு சாவித்திரி வர அவரை பார்த்த கார்த்திக்கின் கண்கள் அசையாமல் அவரிடம் மன்னிப்பை வேண்டின.

நேற்றைய இரவில் இருந்தே எப்போதடா விடியும் என்று தேவுடு காத்தவர், விடியலை நெருங்கிய வேலையில் விக்கியை கிளப்பி விட்டு அவசரமாக காலை உணவு தயார் செய்து விட்டு ஓடி வந்திருந்தார். தன் மருமக்களை காண,

“ அம்மாடி , நைட் டெல்லம் தூக்கமே இல்லை. எப்போடா விடியும்னு கிளம்பி வந்துட்டேன்…” என்று கூறி கொண்டே வந்தவர், சிலையானார்.

அவர் அந்த நேரத்தில் கார்த்திக் அங்கு இருப்பான் என்று எண்ணவில்லை.

ஓர் நொடி அவனை கண்ட சாவித்திரி பின் முந்தைய நாளில் தனக்கு தெரிய வந்த ' கார்த்திக்கு உடல் நலமில்லை ' என்ற வாக்கியம் அவரை அவனிடம் ஓடி போய் கட்டி கொள்ள செய்தது.

“ அம்மா” என்ற கேவலோடு அவனும் அவரோடு ஒன்றினான்.

“ அம்மா, என்னை மன்னிச்சுடுமா, இப்போவாது என் கிட்ட பேசுமா”

“ ராஜா, எப்படி இருக்கடா” தன் கண்ணீர் வழிய அதை சட்டை செய்யாமல் அவனின் கண்ணீரை துடைத்து விட்டார்.

“ ம்ம்ம், நல்ல இருக்கேன்மா… இப்போ என் மேல உனக்கு கோவம் இல்லை தானே”

“ கோவம் இருந்தது உண்மை தான்டா… ஆனா எப்போ உனக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்வி பட்டேனோ அப்போவே கோவம் என்னை விட்டு போய்… என் மகன் சிறு குழந்தை போல நடந்துகிட்டாலும்… அவனுக்கு எந்த ஆபத்தும் வர கூடாது நினைக்க தொடங்கி ரொம்ப மணி நேரம் ஆகுதுப்பா…”

என்னதான் கீர்த்தனா கார்த்திக்கு இப்போ பரவா இல்லை என்று சொல்லி இருந்தாலும்… அந்த தாயுள்ளம் தன் மகனை நேரில் கண்ட பின்பே கொஞ்சமேனும் ஆசுவாசம் அடைந்தது எனலாம்.

“ சரி சரி நீங்க உங்க படத்தை ஓட்டுங்க , இந்த அம்மா வேற சீக்கிரமே எழுப்பி விட்டுருச்சு.. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். மிது செல்லம்… மாமனுக்கு கஞ்சி ரெடி பண்ணிட்டு எழுப்பு சரியா?” என்று விட்டு அங்கிருந்த சோபாவில் தன் உடலை குறுக்கி தூங்க தொடங்கினான் விக்கி.

அத்தனை நேரம் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து எல்லோரும் மென் நகையுடன் விட்ட வேலையை தொடர்ந்தனர்.

கார்த்திக் வெளியே சென்று விட்டு வருவதாய் கூறி நகர, சாவித்திரி மருமக்களுக்கு சமையலில் உதவி செய்ய சென்றார்.

நேரம் பத்தை அடைந்தது.

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க சென்றாள் மித்ரா.

சிவராமன் மற்றும் ஜானகியை பார்த்த மித்ரா மிகுந்த சந்தோசத்தோடு உள் பக்கம் திரும்பி குரல் கொடுத்தாள்.

“ அய், அப்பா அம்மா வாங்க வாங்க… கீர்த்து அப்பாம்மா வந்து இருக்காங்க”

கீர்த்தனாவும் மித்ரா குரல் கேட்டு வாயிலுக்கு ஓடி வந்தாள்.

“ அப்பா வாங்கப்பா, அம்மா வா… என்ன ரெண்டு பேரும் போன் கூட பண்ணாம வந்திருக்கீங்க”

அவர்களின் பயண பையை கையில் வாங்கியவாறே கேட்டாள்.

இங்கு சாவித்திரியோ மித்ராவின் குரலில் கையில் இருந்த பாத்திரம் நழுவ அருகில் இருந்த சமையல் மேடையை பிடிமாணதிற்கு பற்றி கொண்டவராய் அங்கிருந்த படியே தன் அண்ணனை பார்வையால் தொடர்ந்தார்.

“ நேத்து சாயந்தரத்தில் இருந்து மனசு ஒரு மாதிரி சரியில்லாம இருந்ததுமா… அதான் அப்படியே கிளம்பி வந்துட்டேன். அம்மாவும் உங்களை பாக்கணும்ன்னு ரொம்ப நாளாக சொல்லிட்டு இருந்தா… அதான் கிளம்பி வந்துட்டோம்” என்று கூறி கொண்டே வந்தவர் பார்வை, சமையல் அறையின் நிலை சுவற்றில் பிடிமானம் இன்றி நிற்க கூட முடியாது தள்ளாடிய படியே நின்ற சாவித்திரியின் மேல் விழுந்தது.

ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றார். ஆனால் மறு நொடி கீழ விழப்போன சாவித்திரியிடம் ஓடினார்.

“ சாவித்திரி………”

நீண்டதோர் வருடங்கள் கடந்து தன் அண்ணனை கண்ட சாவித்திரி அத்தனை காலமும் தன்னுள் அடக்கிய உணர்வுகளால் செய்வதறியாது திகைத்து நின்றவர், தமையனின் பார்வை தன்னை அடைந்ததும் அதில் தெரிந்த பாச உணர்வில் தன்னை மறந்து கீழே விழப்போனார். அப்போது தான் அவரை தாக்கியது சிவராமனின் கரங்கள்.

சில நொடிகளில் தன்னை மீட்டவர்,

“ அண்ணா எப்படி இருக்கீங்க அண்ணா” என்றார் குரல் உடைய,

“ நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க?”

“ இத்தனை நாள்ல ஒரு தடவயும் கூட என்னை பாக்கணும்ன்னு தோணலையா அண்ணா, அண்ணி நீங்களும் கூடவா நான் வேண்டாதவளா போய்ட்டேன்? ” ஆற்றாமையோடு கேட்டார்.

“ சாவித்திரி என்ன பேச்சுமா இது.? நாம என்ன தான் தொலைவில் இருந்தாலும் நம்ம உறவு இல்லைனு ஆய்டுமா சொல்லு… என்ன? இப்போ கொஞ்சம் நேரம் சரி இல்லை.. அதான் இப்படி நடக்குது. எல்லாமே ஒரு நாள் சரி ஆய்டும்மா கவலை படாதே” என்று எடுத்து கூறினார்.

நீண்ட கண்ணீர் பொழிவுகளுக்கு பின் ஒருவாராய் சமாதானம் அடைந்தனர் உடன் பிறப்புகள்.

சுற்றி உள்ளவர்களின் உணர்வு பிளம்பில் தத்தளித்து கொண்டிருந்த மித்ரா வின் கண்களில் அப்போதும் உறங்கி கொண்டிருந்த விக்கி பட, பல்லை கடித்துக்கொண்டு மேசையின் மேல் இருந்த ஜக்கில் உள்ள தண்ணீரை அவன் முகத்தில் விசிறினாள்.

“ அய்யோ flood flood காப்பாத்துங்க காப்பாத்துங்க…” என்று அலறி அடித்து கொண்டு எழுந்தான்.

அவனை கண்டு சுற்றி உள்ளவர்களின் சிரிப்பும் விரிந்தது.

எல்லோரையும் ஒரு இளிப்பு பார்வை பார்த்து கொண்டு வந்தவன் அங்கே சிவராமனயும் ஜானகியையும் கண்டு அதிசயத்தில் வாயை பிளந்தான்.

“ வாங்க மாமா அத்தை… எப்போ வந்தீங்க.? நல்லா இருக்கீங்களா?”

“ நாங்க நல்லா இருக்கோம் விக்னேஷ். நீ எப்படி இருக்க?” என்று இருவரும் கேட்டனர்.

“ நல்லா இருக்கேன் அத்தை”

அதன் பிறகு நேரம் அமைதியாய் கழிய இருபது நிமடங்களுக்கு பிறகு கார்த்திக்கும் வந்து சேர்ந்தான்.

உள்ளே நுழையும் போதே சிவராமனை கண்டு தயங்கி நிற்க, அவரே எழுந்து சென்று அவனை அழைத்து வந்தார்.

“ வாங்க மாப்பிள்ளை, என்ன அங்கயே நின்னுடீங்க? உள்ள வாங்க”

“ ம்ம்ம்” தயங்கிய படியே உள்ளே வந்தவன் கைகளை கீர்த்தனா பற்றி கொண்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன் மனதில்,

' இனியொரு தரம் இவளை எக்காரணம் கொண்டும் இழந்து விட கூடாது… மற்றுமொரு பிரிவை நாங்கள் இருவரும் தாங்க மாட்டோம்.' என்று எண்ணியவாறு,

மெல்ல அவரிடம் தன் வருத்தத்தை தெரிவித்தான்.

“ மாமா, நீங்க என்னை மன்னிக்கணும். நான் அன்னக்கி அப்படி நடந்துகிட்டதுக்கு.”

சட்டென்று இவர்களின் விழி சம்பாஷனை புரிய… அவரும் தன் பங்குக்கு ,

“ அய்யோ என்ன மாப்பிள்ளை இது இப்படிலாம் பேசிக்கிட்டு… என் கிட்ட யாருக்கு அப்படி பேச உரிமை இருக்கு உங்களை தவிர… அதோட எனக்கும் உங்க மேல எந்த கோபமும் இல்லையே. அன்னக்கி நான் தான் தப்பு பண்ணிட்டேன். என்னதான் சாவித்திரி என் தங்கைன்னாலும் அவரோட மனைவி தானே. அவர் மனைவி கிட்ட அவர் எப்படி வேணும்னாலும் நடந்துக்கலாம். புருஷன் பொண்டாட்டி சண்டைல நடுவுல போனது என்னோட தப்பு தானே. அதை பார்த்துட்டு ஒரு அப்பாவுக்கு புள்ளையா எந்த மகனும் செய்ய கூடிய ஒன்றை தானே நீங்களும் செஞ்சீங்க. அதனால நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.”

“ அய்யோ மாமா, நீங்க பெரியவங்க உங்க கிட்ட இருந்த எங்களுக்கு வேண்டியது ஆசிர்வாதம் தானே தவிர மன்னிப்பு இல்லை… தயவு செஞ்சு இப்படி பேசாதீங்க…” என்று அவன் தடுத்து கூறி கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒரு குரல்,

“ அப்போ எங்களை மன்னிக்க முடியுமா… நாங்க அதுக்கு தகுதியானவங்க தானா!!!”

என்று கேட்க அனைவரும் திரும்பினர் அங்கு ,

சதாசிவமும் வாசுகி பாட்டியும் நின்று கொண்டிருந்தனர்.


Post a Comment

0 Comments