அன்று முதல் நாள்.
மனதில் எழுந்த உற்சாகத்தோடு தன் பள்ளியில் கால் வைத்தாள் வசீ.
செல்வத்தின் உதவியோடு வேலைக்கு உத்திரவாத கடிதத்தை இரண்டு நாட்கள் முன் வாங்கி இருக்க அவளின் பணியின் முதல் நாளை வெகுவாக ரசித்த வண்ணம் வந்து கொண்டிருந்தாள்.
அதுவரை அவளை மாணவியாக மட்டுமே பார்த்திருந்த அந்த பள்ளி அன்றிலிருந்து ஆசிரியையாக கண்டது.
மெலிதாய் படபடப்பு வந்து ஒட்டி கொண்டது அவளுக்கு.
'என்ன என்ன சமாளிக்க வேண்டி வருமோ?' என்ற திடீர் உணர்வு…
பரீட்சை எழுத போகும் மாணவனாய் அவள் கைகளும் கால்களும் தந்தியடிக்க மானசீகமாக தலைக்கு ஒரு கொட்டு வைத்தாள்.
'இங்கே எனக்கென்ன பிரச்சினை வந்துட போகுது?
அப்பா சொன்ன மாதிரி உன்கிட்ட படிக்க போற பசங்க நிலைமையை நினைச்சா பாவமா தான் இருக்கு வசீ’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
எதிர் பட்ட பியூனிடம்,
“அண்ணா செல்வம் சார் வந்தாச்சா?” என்க அவன்,
“இன்னும் இல்லை மேடம்… நீங்க??” என்றான்.
“நான் இங்க புதுசா வேலைக்கு வந்து இருக்கேன்.”
“ஓஹ் அப்படியா? சரிங்க மேடம், இன்னும் ஸ்டாப் ரூம் ஓபன் பண்ணல… நீங்க வேணும்னா கேன்டீன்ல வெயிட் பண்ணுங்க… ரூம் ஓப்பன் ஆனதும் நானே வந்து சொல்றேன்..” அவன் கூற
“சரி” என்று தலையாட்டிவிட்டு கேன்டீன் சென்றாள்.
‘இங்கும் யாரும் இல்லை போல..’
வெற்றறையே வரவேற்க உள்ளிருந்து ஓர் இளைஞன் மட்டுமே வெளியே வந்தான்.
“வாங்க மேடம், என்ன வேணும்?” என்க
“மேடம் எல்லாம் வேண்டாம்… என் பெயர் வசந்த நிலா. நீ வசீன்னு கூட கூப்பிடலாம்…” என்று கூறி புன்னகைக்க அவன் சிரித்துக் கொண்டான்.
“சரி என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்க அவள்,
“எனக்கு சூடான சுக்கு காபி வேணும்… கிடைக்குமா?” என்றாள் குழந்தையாக.
“வெயிட் பண்ணுங்க மேடம்” என்று கூறிவிட்டு ஐந்து நிமிடத்தில் தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தான்.
புன்னகையோடு வாங்கிக் கொண்டவள் ஒரு சிப் பருகி அதன் சுவையை ரசித்தவள்,
“முனியப்பா!! முனியப்பா பண்ற காபி மாதிரி இருக்கு!!” என்றாள்.
முனியப்பன் வசீயின் பள்ளி பிராயத்தில் இதே பள்ளியில் இரண்டு சிறு டின்களில் டீ காபியும் கொறிக்க சில தின்பண்டங்களும் வைத்து கேன்டீன் நடத்தி வந்தவர்.
பல சமயங்களில் வசீக்கு அவரின் நினைவும் அவர் போடும் காபியின் மனமும் ஏக்கம் வர வைக்கும்.
எத்தனை வருடங்கள் கடந்தாலும் வசீ சொல்வது,
"உலகத்துல எந்த மூளைக்கு போய் யாரோட காபி குடிச்சாலும் அது முனியப்பா போடற காபி மாதிரி வரவே வராது…" என்று.
அனைவரும் அவரை “முனி” என்று அழைக்க அவள் மட்டும் அவரை ஒரு தந்தையாக எண்ணி “முனியப்பா” என்றே அழைப்பாள்.
அவளின் அதீத படிப்பு சுமையை பாதி இறக்கி வைக்கும் பொறுப்பு அவரின் காபிக்கு உண்டு.
அதே சுவை இன்று ஒரு சிப் அருந்தியதும் தெரிந்து விட அவளின் குஷியில் மெல்ல சிரித்தவன்,
அவன், “எங்க அப்பாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்றான்.
“என்ன? வாட் அ சர்ப்ரைஸ் முனியப்பாவோட பையனா நீ? அப்பா எப்படி இருக்காங்க? நான் நலம் விசாரிச்சேன்னு சொல்லு?” என்றாள் மகிழ்வோடு.
அவரின் குடும்ப பிழைப்பிற்கு அவரும் அவரின் மனைவியும் சேர்த்தே இந்த கடையை நடத்த அவ்வப்போது கிடைக்கும் களை எடுக்கும் வேலைக்கு அவர் மனைவி சென்று விட்டால் குழந்தை ஒன்றை தோளில் கிடத்தி வைத்து தன் வேலையை பார்ப்பார் முனி.
நீண்ட வருடங்கள் காத்திருந்து கிடைத்த வரம்… என்று அவளிடமும் அவளின் நட்பிடமும் கூறியதுண்டு.
‘அந்த கொழு கொழு குட்டி பையனா இதோ இந்த வளர்ந்த ஆண் மகன்…’
அவள் விழிகள் வியப்பில் விரிந்தது.
“அதுக்கு அப்ப நான் சொர்க்கம் போகணுமே??” என்றான் சிரிப்போடு.
அந்த சிரிப்பில் தன் சிரிப்பை தொலைத்து,
“என்ன சொல்ற நீ? எப்படி??” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
“மூணு வருஷத்துக்கு முன்னாடி… ஹார்ட் அட்டாக்..” என்றான்.
அவள் அமைதியாக “சாரி” என்று தயங்க,
“பரவாயில்லை, இதுக்கு போய் எதுக்கு சாரி எல்லாம்…” என்று அவன் கூறவும் இவள் சிறிது நேரம் அமைதியானாள்.
அவளால் தாங்க முடியவில்லை…
“சரி, உன் பேர் என்ன? நீ படிக்கலையா? இங்கதான் வேலை பார்க்கிறயா?” என்று கேட்க
“என் பேர் எழில்.. ரகு சார் காலேஜ் சேர்த்துவிடறேன் தான் சொன்னாங்க… நான் தான் இங்க வேலை பார்த்துட்டு… அப்படியே ஈவினிங் காலேஜ்ல சேர்ந்துக்கிறேன் சொல்லிட்டேன்… வீட்டுக்கு ப்ரயோஜனமா இருக்கும்னு அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க…” என்று கூறினான்.
“சரி எழில், எப்போ என்ன தேவைனாலும் நீ என்னை கேட்கணும்… உனக்கு ஒரு அக்கா இருக்கன்றதை மறந்துடாதே?” என்று கூறினாள்.
அக்கணம் முதலே அவனை தம்பியாக எண்ணி கொண்டபடி.
அவன் கண்கள் அவனையுமறியாமல் கண்ணீரை சிந்தியது.
“நிச்சயமாக்கா” என்று கூறினான்.
அவனின் அழைப்பு அவளுக்குள் புன்னகையை உண்டாக்கியது.
அடுத்து வந்த 15 நிமிடங்களும் அவரவரின் விருப்பங்கள் படிப்பு விளையாட்டு என்று கூறி கழிய பியூன் வந்து,
“மேடம், சார் வந்தாச்சு” என்று அழைக்கவும் தான் முற்றுப்பெற்றது.
“சரி எழில், லன்ச்ல பார்க்கலாம்” என்று கூறிவிட்டு அலுவலக அறைக்கு சென்றாள்.
அங்கு செல்வம் அல்லாமல் ரகு அமர்ந்திருப்பதை கண்டவள் ஒரு நொடி தயங்கினாலும்,
“மே ஐ கமின்..” என்று குரல் கொடுக்க
“ம்ம்” என்ற முனகல் மட்டுமே பதிலாக வந்தது.
சார் அவ்வளவு பிஸியாக பைலை பார்த்திருக்க அவளை நிமிர்ந்து பார்க்காமல் இருக்கவே
சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தவள்,
‘என்ன செய்ய வேண்டும்? அவனிடம் என்ன கேட்க வேண்டும்?’ என்று புரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தவளுக்கு மெலிதாய் சலிப்புடன் கோபமும் வரவே வெளியே செல்ல திரும்பினாள்.
“இந்த பார்ம்லயும் அட்டனன்ஸ் நோட்லையும் சைன் பண்ணிட்டு போங்க” என்று அவன் குரலில் நின்றவள்,
‘அட கம்ப்யூட்டர்..
கடவுச்சொல்லை
கக்கி விட்டது…’ என்று மொக்கை கவிதையை தனக்குள் கூறிக்கொண்டு
அதற்கு தனக்குத்தானே ‘கவிதை கவிதை’ என்றும் மெச்சி கொண்டாள்.
அவள் சைன் பண்ணி நிமிரவும் செல்வம் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“வா வசீ, சைன் பண்ணிட்டியா?
எங்க லேட் ஆகிடுமோன்னு அவசர அவசரமா வந்தேன். நல்ல வேலை சீக்கிரமே வந்துட்டேன்…" என்றார்.
'அது சரி நான் வந்து அரை மணிக்கு மேல ஆகுது.. அது போக இந்த மெஷின் பக்கத்துல எவ்ளோ நேரம் கால் கடுக்க நின்னேன் என்றதே கணக்கில் வரல'
மனதில் ஓடியதை சத்தமாய் சொல்லி விட ஆசை தான் ஆனால் வந்த முதல் நாளே எதிரில் இருப்பவனிடம் முட்டிக்கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் எண்ணத்தை அள்ளி விழுங்கி கொண்டாள்.
அவள் அமைதியாக நிற்க செல்வமே தொடர்ந்தார்.
"XI -A க்கு நீ கம்ப்யூட்டர் மிஸ் மட்டுமில்லை கிளாஸ் மிஸ்ஸும் கூட. இன்னைக்கு முதல் நாள் அதனால ஸ்டுடென்ட்ஸ நல்ல அப்சர்வ் பண்ணிக்கோ.. நாளைக்கு கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்று அவர் கூற
இவள் “சரி சார்” என்று தலையாட்டினாள்.
“ரகு, நீ என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட? ஹாஸ்பிடல் போற வேலை இல்லையா?” என்று அவனிடம் திரும்பி கேட்க
“11’o clock மேல தான் அங்கிள்… அது இருக்கட்டும் மேடமை நம்ம ஸ்கூல் ரூல்ஸ் படி நடக்க சொல்லிருங்க… ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணனும் மறக்காமல் சொல்லிடுங்க… எனக்கு வேலை இருக்கு நான் வரேன்” என்று எழுந்து சென்றான்
“ம்ஹம்” என்று வாய்க்குள் சிரிப்பை மறைத்தாள் வசீ.
‘சென்றவன் திரும்பி பார்த்தால் வீணான வாக்குவாதம் ஏற்படும்’ என்பதால் செல்வம் அவளை வாயில் கை வைத்து மிரட்ட அவளும் வாயை கைகளால் மறைத்துக் கொண்டாள்.
அவன் தலை மறையவும்,
“வசீ, அவன் ரொம்ப கோபக்காரன்… உன் குரங்கு சேட்டைய அவன் கிட்ட காட்டி வீணா அவன் கிட்ட திட்டு வாங்காத… அவ்ளோ தான் நான் சொல்வேன்”
“ஹா ஹா, சாரி சார்… ஆனா நான் படிக்கும்போதே ரூல்ஸ் பாலோ பண்ணதா எங்களுக்கு ஞாபகம் இல்ல!! அது தெரியாம என்னை போய்…” அதென்ன பெருசா ரூல்ஸ் எல்லாம்… அதுவும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்ன்ற ஆடர் வேற… என்னால ஏத்துக்க முடியாத ரூல்ஸ் எல்லாம் நாம் எப்பவுமே செய்ய மாட்டேன் அது உங்களுக்கே தெரியும் தானே சார்…" என்றாள்.
அவர் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருக்க
"நம்ம ஸ்கூல் நாங்க படிச்சப்ப இருந்த மாதிரியே இல்லை சார்… ரொம்ப மாறிடுச்சு… மாற்றம் சிக நல்லதாவும் சிலது நல்ல இல்லாத மாதிரியும் இருக்கு…" என்று கூறினாள்.
அருகில் அவன் இல்லை என்பதால் இப்போது
வாய்க்குள் இல்லாமல் சத்தமாக சிரிக்க அவளை முறைக்க முயன்று செல்வமும் தோற்று அந்த சிரிப்போடு இணைந்து கொண்டார்.
“எனக்கும் அதுதான் வேணும் வசீ, நீங்களாம் படிக்கும்போது நம்ம ஸ்கூல் எப்படி இருந்ததோ?? அதே மாதிரி எனக்கு திரும்ப வேணும்… நான் ரிடையர்ட் ஆகுறதுக்கு முன்னாடி அப்டி ஒரு நாளையாவது பார்க்கணும்” என்று கூற
அவரின் பேச்சை புரியாமல் பார்த்தாள்.
“என்ன சார் சொல்றீங்க? புரியல…” என்று கூற
“எல்லாத்தையும் உனக்கு இன்னொரு நாள் விளக்குறேன்.
இப்போ நீ கிளாசுக்கு போ” என்று கூற அவளும் தலையாட்டிவிட்டு சென்றாள்.
அன்றைய தின முடிவிலேயே அவர் கூறியதன் அர்த்தம் விளங்கி போவது அறியாமல்.
நடக்கும் விந்தைகள் தான் என்ன? விந்தையை மாற்ற வந்த தேவதை இவள் இனி என்ன செய்ய காத்திருக்கிறாள்??
காத்திருப்போம் இனி வரும் அத்தியாயங்களில்.
0 Comments