10. நீல இரவில் நின் முகம்

 



எதிரில் இருப்பவன் தன்னை “ஸ்ரீ நந்தன்” என்று அறிமுகப்படுத்தியதும் வசீக்கு முதலில் தோன்றியது இதுதான்.

‘அப்படின்னா இவன் ரகுவோட தம்பியா?’ என்று. 


மனதில் எண்ணியதையே எதிரில் இருப்பவனிடம் கேட்டாள். 

“அப்ப நீ.. நீங்க ரகுவோட தம்பியா?” என்று. 


அவனோ பதில் ஏதும் கூறாமல் வெறும் புன்னகை மட்டும் சிந்தி,

“ஆமா அக்கா, இவன்தான் ரகு சாரோட தம்பி.. என்னோட பெஸ்ட் பிரண்ட்.. அவனுக்கும் என் வயசு தான் அதனால இந்த மரியாதை எல்லாம் கொடுக்க தேவை இல்லை.. என்ன மச்சான்?” என்று எழில் அங்கு வர


“அப்படியா நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிக்கிறீங்களா?” என்றாள் வசி.


“ஆமாக்கா… ஸ்ரீ உன் கிட்ட சொல்லி இருக்கன்ல இவங்க தான் வசீக்கா இங்க புதுசா வேலைக்கு வந்தவங்க…” என்றான். 


அவளும் மரியாதை நிமித்தம் ஸ்ரீயை கண்டு புன்னகைக்க அவனும் பதிலுக்கு புன்னகைத்தான். 


“நீயும் எப்படி உங்க அண்ணன் போல தானா?” என்றாள் வசீ.

“என்ன கேட்கிறீங்க? எனக்கு” என்றான் ஸ்ரீ.


“இல்ல… நீயும் உங்கண்ணனை மாதிரி அளந்து பேசுவியா? அளவோடதான் சிரிப்பியானு கேட்டேன்..” என்றாள்.


“ஹா ஹா ஹா…. உங்களுக்கு இருந்தாலும் ரொம்ப தைரியம் தாங்க அவன்கிட்டயே வேலை பார்த்துகிட்டு அவன் கிட்டயே சம்பளமும் வாங்கி அவனையே கலாய்க்கிறீங்க பாத்தீங்களா!!!” 


“உண்மையை உரக்க சொல்லணும் அதான் என்னோட கொள்கை… அப்புறம் நிச்சயமா நீங்க உங்க அண்ணன மாதிரி இல்ல… பக்கத்துக்கு பத்து வார்த்தை பேசுற உங்க அண்ணன் எங்க? பதறாம பக்கம் பக்கமா பேசுறே நீங்க எங்க?” சூரியவம்சம் ராதிகா பாணியில் அவள் கூறிட இருவரும் சிரித்தனர். 

பழகிய சில நொடிகளில் சினேகமாய் பேசும் அவளின் குணம் ஸ்ரீக்கும் பிடித்திருந்தது.


அதன் பின் வந்த சில நிமிடங்கள் ஆயிரம் கதைகள் பேசி கழிந்தாலும் தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்பதும் அவள் ரகுவை பற்றியே கேட்டிட அவனும் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் பதில் கூறினான். 


கணப்பொழுதில் கண்டுகொண்டாள்.

ரகுவை பற்றிய பேச்சுக்கெல்லாம் அவனின் பதில் ‘ஆம் இல்லை’ என்பதோடு நிறுத்திக் கொள்வதை.  


விந்தையாய் விழி சுருக்கியவள் மனதில்,

‘ஏன் இப்படி? என்னவாயிருக்கும்?’ என்று யோசித்தாலும் அவளால் விடை காண முடியவில்லை. 


“சரிங்க வசீ… நாம இன்னொரு நாள் பார்க்கலாம் வரேன்டா” என்று இருவரிடமும் கூறி விடை பெற்றுக்கொண்டான் ஸ்ரீ.


அவன் சென்று முடித்த அடுத்த சில நிமிடங்களில் கேட்டிருந்தாள் எழிலிடம்,

“எழில் ஸ்ரீக்கும் ரகுவுக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள். 


 அவளின் சாதுரியத்தை எண்ணி சிலிர்த்தாலும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.


“என்னடா உன் கிட்ட தானே கேக்குறேன்? ஏதாவது பிரச்சனையா நான் ரகுவ பத்தி கேட்கும் போதெல்லாம் அவனுக்கு முகமே சரியில்ல… இத பார்க்கும்போது ரகுவ பிடிக்கவே பிடிக்காது அப்படின்ற மாதிரி இருந்துச்சு… என்ன பிரச்சினை ரெண்டு பேருக்கும்…” என்று கேட்டாள்.


அவன் மெலிதாய் தயங்கவும், 

“என் கிட்ட சொல்லலாம்னா சொல்லு… இல்லைன்னா வேண்டாம்..” 


பெரிதாய் ஒன்றும் இல்லை கண்ணில் பட்டு கருத்தில் கவர்ந்தது பற்றி அறிய ஆவல் அவ்வளவே அவளுக்கு.. 


“ஐயோ அப்படியெல்லாம் இல்லக்கா.. அது வந்து?” என்று தயங்கினான். 


“ரொம்ப பர்சனல் விஷயம்னா சொல்ல வேண்டாம் எழில்..” 

அவன் தயக்கம் புரிய அவள் கூறினாள்.   


ஆனாலும் ‘ஏதோ சரியில்லை’ என்பதை மட்டும் புரிய அது தெரிந்தாலும் தனக்கு எதுவும் ஆக போவதில்லை என்று எண்ணிக்கொண்டாள். 


ஒரு நொடி நண்பனின் தனிப்பட்ட விஷயம் என்று தயங்கினாலும் பின் கூறுவது வேறு யாரிடமும் இல்லை.. தன் அக்காவிடம் தான் என்பது புரிய

மொத்தத்தையும் கூறியிருந்தான் எழில்.


அமைதியாக கேட்டுக் கொண்டவள்,


“ஆனா இதுக்காக எதுக்கு இவன் ரகு சார் கூட பேசாம இருக்கணும்? சார் மேல இதுல என்ன தப்பு இருக்கு?” என்று கேட்டாள்.


“அவங்க மேல தப்புன்னு சொல்ல முடியாது தான். 

ஆனாலும் தன்னுடைய பொருள் அப்படின்னு பார்க்கும்போது அவனோட கோபமும் நியாயம் தானே..” என்று நண்பனுக்கு பரிந்து கொண்டு வந்தான் எழில். 


 அவனை முறைத்தாள் வசீ. 

“இதுல என்ன நியாயத்தை கண்ட… உள்ளதை சொன்னால் தானே எல்லாருக்கும் புரியும்… அதுவும் மாட்டேன்னு சொன்னா???” என்றாள். 


 “எனக்கு புரியுது அக்கா… நானும் சொல்லிப் பார்த்துட்டேன்.. ரகு சார் கிட்ட பேசி பாரு நீ நினைக்கிற மாதிரி இல்லைன்னு ஆனா அவன் பிடி கொடுக்கமாட்டேங்கறான்.. எதுவும் கேட்டு வாங்கக் கூடாது அப்படிம்பான்.. இது அவனுடைய வாழ்க்கை… அதுல நாம தலையிட முடியாது இல்லையா? அதனால நானும் அதுக்கு மேல எதுவும் சொல்லல... அப்படியே விட்டுட்டேன்.. நீங்களும் இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம்க்கா” என்றான்.


“சரி நான் பேசமாட்டேன்” எழில் தன்னை நம்பி கூறிய ஒன்றிற்காக இதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தாலும் ரகுவை தவறாக என்னும் ஸ்ரீயின் மேல் சிறிது கோபம் கூட வந்தது அவளுக்கு.. 


இருந்தும் 'இதில் தன்னால் என்ன செய்ய முடியும்?' என்று அமைதியாகி விட்டாள்.


இரண்டு நாட்கள் இப்படியாக கழிய அன்றைய தினம் மாணவர்கள் எல்லோரும் கிளம்பி இருக்க பவானி வசீயை தேடி வந்தாள்.


“என்ன வசீ? நீ இன்னும் கிளம்பலையா?” என்று கேட்டபடி.


“இன்னும் கொஞ்சம் ஒர்க் இருக்கு பவானி” என்று இவள் கூற,


“ஓஹ் அப்டியா? நான் வேணும்னா வெயிட் பண்ணட்டுமா?” என்று கேட்க 'வேண்டாம்' என்று மறுத்து அவளை அனுப்பி வைத்தாள். 


 மாணவர்களுக்காக சிறு சிறு குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள் வசீ.


தேர்வு நெருங்குவதால் மேலும் எளிய சில வழிமுறைகளை கையாண்டு முக்கிய குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள்..


பவானி சென்ற சில நிமிடங்களில் வேலைகளில் மூழ்கிட நீண்ட நேரம் கழிந்ததை அறியவில்லை. வாசலில் நிழலாட திரும்பிப் பார்க்க புதியவன் நின்று கொண்டிருந்தான்.



“ஹேய் வசந்த்” என்று விழிகள் ஆச்சரியத்தில் விரிய பாய்ந்து அவனை கட்டிக்கொண்டாள். 


நீண்ட நாட்களுக்கு பிறகு தோழனை காணும் ஏக குஷி அவளுக்கு. 

சில நொடிகளில் அணைப்பில் இருந்து விடுபட்டு அவள் அவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள்.


“எரும மாடு.. குரங்கு… போனா போற இடம் வந்தா வந்த இடம் இது என்ன பழக்கம்… எப்போ வரேனு சொல்லிட்டு போன… திரும்பி வர இவ்ளோ நாளா உனக்கு…”


விடாமல் வசைபாடி அவள் அடித்து துவைத்துக் கொண்டு இருக்க அவள் அடித்த ஒவ்வொரு அடியையும் அசையாமல் நின்று வாங்கி கொண்டிருந்தான் வசந்த். 


“ஏய் கத்திரிக்கா கொஞ்சம் சொல்றத கேளு… அதான் சொன்னேன்ல போன இடத்துல சீனியர் அதிகமாக வேலை கொடுத்துட்டாங்க.. அது முடிச்சிட்டு வரத்துக்கு லேட் ஆயிடுச்சு.. ஆனாலும் ஐயா கில்லி மாதிரி சொன்னா சொன்ன நல்ல வந்து நிற்கிறேன்ல…” என்று கூறிட


“கிழிச்ச… எரும மாடு போன மாசம் பத்தாம் தேதி வரேன்னு சொல்லிட்டு இந்த மாசம் பத்தாம் தேதி வந்திருக்க…” அவள் நொடித்து கொண்டாள். 


“அப்டியா போன மாசமா சொன்னேன்??? சரி அத விடு… இருந்தாலும் சொல்லாமல் வந்து திடீர் சர்ப்ரைஸ் கொடுத்தேன்ல அதுக்கு என்னை பாராட்டணும்.. அதை விட்டுட்டு அழுக்கு துணிய தூக்கி போட்டு துவைக்கிற மாறி… என்ன இது சின்ன பிள்ளை தனம்?” ஏதோ மேலோட்டமாக பூசி மொழுகினான்.


 பின் அவளிடம்,

“சரி எல்லாம் முடிஞ்சிடுச்சா? கிளம்பலாமா?” என்று கேட்க 

“இதோ..” என்று அவள் அனைத்தையும் அள்ளிக் கொண்டாள். 


 அவனோடு கையை கோர்த்து கொண்டு இருவரின் கைகளுக்கும் நடுவில் அவளின் சாப்பாட்டு கூடை காற்றில் மேலும் கீழும் வீசியடிக்க 

சிறு பிராயத்தில் நடந்து செல்பவர்களை போல அப்போதும் நடக்க வசந்த்,

“நீ சொன்னது உண்மை தான் வசீ… நம்ம ஸ்கூலுக்கு வந்தாலே ஏதோ ஒரு தனி சுகம் தன்னால மனசுல வந்து ஒட்டிகிது” என்று கூறினான்.


 அவளுக்கும் அப்படி தானே.. 'ஏதோ ஓர் பிரிக்க முடியாத பந்தம் இந்த பள்ளியோடு தன்னை இங்கேயே தங்கி விட சொல்கிறது…' 

அவள் மனதில் ஓடும் எண்ணத்தை அவனிடம் கூற 


“எது… அப்போ உன் யூ.எஸ். கனவெல்லாம் அவ்ளோ தானா!!!” அவன் கண்ணடித்து கேட்க


“ச்சு.. போடா..” என்று சலித்து கொண்டாள். 


இருவரும் இப்படியாக கதை பேசி நடந்து வர எதிர்ப்பட்ட பியுனிடம் வகுப்பறையை பூட்ட சொல்லி நகர்ந்தாள். 


அந்த நீண்ட பள்ளி வளாகத்தை கடந்து வெளியே வந்தவர்கள் அவனின் பைக் நின்ற இடத்தை அடைந்தார்கள்.


பைக்கை கிளப்பி அவன் ஸ்டார்ட் செய்யும் சமயம் விருட்டென்ற வேகத்தோடு அவர்களைக் கடந்து சென்றது ஒரு கார்.


“அட ஸ்கூல் பிளேஸ்ல யார் இவ்ளோ வேகமா காரை ஓட்டுறது? கொஞ்சம் கூட அறிவில்ல…” என்று வசந்த் கூறினான். 


“அது ரகு சார்டா… இப்போ தான் போறாங்க போல…” என்றாள். 


ஆம்.. 

திறந்து கிடந்த வகுப்பறையை அடைக்க வந்தவன் வசீ ஒருவனை கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ந்து பின் வந்த இடம் தெரியாமல் நகர்ந்து கொண்டான். 


அறைக்குள் வந்தவனுக்கு ஏனோ கோபம்? 

பள்ளியென்றும் பாராது அவள் நடந்து கொண்டதாலா???

இல்லை!!! 


சில நிமிடங்கள் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டு கிளம்பி வந்தவன் இங்கும் அவர்களை காண உள்ளுக்குள் பற்றி எரிந்த நெருப்போடு காரை கிளப்பினான். 


“யாரா இருந்தா என்ன? ரூல்ஸ் எல்லாம் பசங்களுக்கு மட்டும் தானா? பேசிக் ரூல்ஸ் கூட தெரியாம தான் காரை ஓட்டுவாங்களா?” 

வசந்த் கேட்க,


“அப்டி சொல்லாதடா… இப்போ ஸ்கூல் விட்டாச்சு யாரும் இல்லை அதனால கூட ரகு சார் வேகமா போயிருக்கலாம்.. தவிர அவருக்கு என்ன அவசரமோ?” 


வசந்த் ரகுவை திட்டுவது பிடிக்காமல் கூறினாள்.


“என்ன புதுசா ரகு சார் மேல கரிசனம்… முன்ன எல்லாம் சிரிக்க தெரியாத கம்பியூட்டர்ன்னு சொன்ன?” என்றான் இமை சுருக்கி கண்ணாடி வழியே அவளை பார்த்த படி. 


“அது வந்து… பாவம் இல்ல ரகு… நானும் முன்ன அவர் குணமே இது தான்னு நினைச்சு கோவப்பட்டேன்… ஆனா காதல் தோல்வியில அவர் இப்படி தனக்குள்ள ஒடுங்கிக்கிட்டார்னு தெரிஞ்சதும் என்னால தாங்க முடியல.. 

ஏன் அந்த வலியை நானும் அனுபவிச்சுட்டு தான இருக்கேன்… 

அவருக்காவது காதல் தோல்வி

… 

ஆனா எனக்கு??? 

என்னோட காதல்…” பேச முடியாமல் விக்கி தவிக்க 


“ஷட் அப் வசீ.. “ என்று கத்தினான் வசந்த். 




Post a Comment

0 Comments