வசீயின் முகத்தை வைத்தே அடுத்து அவள் 'என்ன கூறுவாள்?' என்று ஊகித்து இருந்த வசந்த் அவன் எண்ணியது போலவே அவள் கூறவும்,
"ஷட்அப்" என கத்தினான்.
அவன் கத்திய பின்பே தன்னை உணர்ந்த வசீ அதன் பின் எதுவும் கூறாமல் அமைதியாக வர அவனும் அவளிடம் ஏதும் பேசவில்லை.
நேராக வசீயின் வீட்டிற்கு வந்தவர்கள் பைக்கை விட்டு இருக்கும் போதே சரவணன் எதிர்ப்பட்டார்.
"அட வசந்த்… எப்டி இருக்க? எப்போ வந்த? அது சரி வந்த உடனே நேரா இவள தான் பாக்க தோனிருக்கு எங்களை பார்க்கணும்னு எல்லாம் எண்ணம் வரலை..." என்று வரவேற்க அவனும் சிரித்தபடி,
"நல்ல இருக்கேன் அங்கிள்.. நீங்க எப்டி இருக்கீங்க? சும்மா இவளுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம்னு தான் அங்கிள்… நான் என்ன இவள கூட்டிட்டு ஓடியா போக போறேன். இங்க தான வர முடியும். அப்படியே ஓடி போனாலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல இவ தொல்லைய தாங்க முடியாம அதுக்கும் இங்க தான வந்தாகனும்.. என்னை போய் என்ன வார்த்தை சொல்லிட்டீங்க?" வராத கண்ணீரை துடைத்து விட்டு அவன் கூற இவர் அவன் தலையில் தட்டி சிரித்தார்.
"சரி, நீங்க உள்ள போங்க… நான் சும்மா நடந்துட்டு வரேன்.." என்று கூறிவிட்டு வெளியேறினார்.
அவர் வெளியே செல்லவே வீட்டினுள் வந்தார்கள்.
வசீ இருவருக்கும் குடிக்க டீ மற்றும் பலகாரம் எடுத்து வர அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டவன் அவளிடம் பேசாமல் கொறிக்க தொடங்கினான்.
சில நிமிடங்கள் அவன் அப்டியே அமைதியாக இருக்க பொறுமையை கைவிட்ட வசீ,
"எப்பா, நல்லவனே… சாரி தெரியாம அப்டி சொல்லிட்டேன்.. இனிமே அப்டி பேசவே மாட்டேன்… போதுமா? கொஞ்சமாச்சும் சிரிடா.. உன் மூஞ்சிய இப்டி பாக்க நல்லாவே இல்ல…" என்று கூறினாள்.
"இது எத்தனையாவது தடவை தெரியுமா? நீ இப்டி சொல்றது?" என்று கேட்க
"சரிடா, இது தான் லாஸ்ட் இனிமே அதை பத்தி பேசவே மாட்டேன்.." என்றாள்.
அவளையே உற்று பார்த்தவன்,
"புரிஞ்சிக்கோ வசீ, உன்னோடது காதலே இல்லை…" என்று கூறினான்.
அவன் கூற்றில் உள்ளம் வலிக்க தலையை குனிந்து கொண்டாள்.
அவளின் தலையை நிமிர்த்தி பார்த்தவன் அவளின் விழிகள் சிந்திய நீரை துடைத்து விட்டு,
“உன்னை காயப் படுத்தணும்னு சொல்லல வசீ... நீயா புரிஞ்சிக்க… சொல்லு? உன்னோடது காதலா? அவனை உனக்கு எவ்ளோ நாளா தெரியும்? அவன் குணம் என்னன்னு தெரியுமா? அவன் பேர் தெரியுமா? நெட்டையா குட்டையா? ஒல்லியா பருமனா? சிவப்பா கருப்பா? இப்டி அவனை பத்தி எதுவுமே தெரியாம அவனை தான் காதலிக்கிறேன்னு சொல்றது முட்டாள் தனமா தெரியல…”
அவன் கூறிய எதுவுமே அவளுக்கு தெரியாது தான்..
'ஆனால்?'
அவள் ஏதோ கூற வர அவளை கையமர்த்தியவன்,
“வழக்கமா சொல்ற மாதிரி என் மனசுக்கு தெரியும் 'அவன் நல்லவன்னு' சொல்லாத வசீ.. அவன் நல்லவனாவே இருந்துட்டு போகட்டும்.. இப்டி அவனுக்காக கல்யாணமே பண்ணிக்காம எங்களை கஷ்டப்படுத்துறது நல்லவா இருக்கு? அவனுக்கும் கல்யாணம் ஆகி இருக்காதுன்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா?”
பதில் பேசாமல் அவள் அமர்ந்திருக்க அவனே தொடர்ந்தான்.
“புரிஞ்சிக்கோ வசீ, நாம திடீர்னு ஒரு நாள் காணுற கனவு நமக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கலாம்… ஒரு மன நிறைவை கொடுக்கலாம்… ஆனா அது எதுவுமே நிஜம் இல்லை… கனவுல இருந்து முழிச்சு தான் ஆகணும். நல்ல இருக்கேன்னு அப்டியே இருந்துட முடியாதுல்ல
அதே மாதிரி தான் இதுவும்..
இது எதுவுமே நிஜம் இல்லை… ஒரு தடவை உன்னை காப்பாத்தினான் அப்டிங்கிறதுக்காக அவனை காலம் பூரா நம்பிட்டு இருக்கிறது எந்த விதத்துல நியாயம். சொல்ல போனா அவனை நேரா பார்த்த எனக்கே அவன் முகம் நினைவுல இல்ல.. இதுல நீ அதும் மயக்கமா கிடந்த நீ எப்டி???”
அன்றைய நாளின் நினைவில் மனம் பதைத்து போய் தலையை சிலுப்பியவன் கெஞ்சும் குரலில் அவளிடம்,
“எல்லாமே உன் ப்ரமை வசீ, அதுல இருந்து நீயா தான் வெளிய வர முயற்சி பண்ணனும்… அதை விட்டுட்டு இப்டி லூசு மாதிரி பேசாத…" என்று இதமாக கூறினான்.
அவளோ வழக்கம் போல அமைதியாக இருக்க அவனும் அதற்கு மேல் அவளை கடிந்து கொள்ளவில்லை.
'இவ்வளவு நேரம் பேசியதே அவளை எந்த அளவுக்கு நோக செய்து இருக்கும்?' என்று தோன்றியதால் அவளை அப்படியே தனிமையில்அமைதியாக விட்டு விட்டு அவன் எழுந்து தோட்டத்திற்கு சென்றான்.
தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தவன் மனம் இன்னும் சரியான பாடில்லை.
‘அன்று அவன் கண்ணில் மட்டும் வசீ சிக்காமல் சென்று இருந்தால் இன்று வசீயின் நிலை.
அந்த கயவர்கள் கையில் சிக்கி பூவாய் கசங்கி போய் இருப்பாள்.
தக்க சமயத்தில் ஆபத்பாந்தவனாய் வந்து உதவியவனுக்கு பெரும் நன்றிகள் சொல்ல வேண்டும்’
‘அதை விடுத்து இந்த வசீயின் காதல்… இதை எப்படி காதல் என்று நாமும் சொல்ல? ஆரம்பத்தில் அவனிடம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று தான் கூறி கொண்டிருந்தாள்.
பின் நாட்களில் அவனையே காதலனாய் எண்ணுவதாய் தன்னிடமே வந்து சொல்ல… சொல்லும் வாயிலேயே அடிக்க வேண்டும் என்பான்.
ஏதோ சிறுபிள்ளை தனம் என்று சகஜமாக விட அவளின் உடும்பு பிடி போன்ற பேச்சில் தானும் கடிந்து அவளும் கண் கசக்கி என வீண் நேர விரயம் தான்.
மெதுவாக அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.’
எப்போதும் போல தனக்குள் கூறி கொண்டான்.
எண்ணவோட்டங்கள் அவனை சுழற்ற
சில நிமிடங்களில் வசீயும் இயல்பாகி வந்தாள்.
அதன் பின் இருவரும் அந்த மர ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு பல கதைகளை பேசினார்கள்.
***
காற்றைவிட வேகமாக வந்து நின்ற காரில் இருந்து அதைவிட வேகமாக இறங்கிய ரகு நந்தன் ‘தடக் தடக்’ என தாளவோசையுடன் ஹாலில் அமர்ந்து இருந்த விஜயனையும் ஸ்ரீயையும் கடந்து சென்றான்.
கடந்து செல்பவனையே விழியகளாமல் பார்த்த விஜயன் நீண்ட மூச்சுடன்,
“நானும் இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாலாவது இந்த மாதிரி கூட்டுக்குள்ள இருந்து வெளியே வருவான்னு நினைக்கிறேன். எங்கே? இவனும் வழி கொடுக்க மாட்டேங்கிறான். அந்த செல்வமும் சரி பட மாட்டேங்கிறான்.”
செல்வத்தின் செல்ல மகள் பூரணியை ரகுவிற்கு திருமணம் செய்து வைக்க விஜயன் விரும்பிட
‘காதல் கன்னியை மறக்க முடியாது காளையிவனும்… மற்றொருவளை காதலிக்கும் ஒருவனுக்கு தன் மகளை கட்டி கொடுத்தால் நாளை இருவர் வாழ்வும் கேள்விக்குறியில் நிற்கும் என்ற எண்ணத்தில் செல்வமும் பிடி கொடுக்காமல் நழுவி சென்றனர்.
இதை அறியாது விஜயன் தன் பாட்டில் புலம்ப அருகில் அமர்ந்து இருந்த ஸ்ரீயோ ‘பூரணி’ பற்றி எழுந்ததும் ஏதும் கூறாமல் நகர போக,
“நீ சொல்லியாவது உன் அண்ணன் கேட்பானா பார்க்கலாம்? செய்வியா ஸ்ரீ?” விஜயன் கேட்டார்.
நகர்ந்தவன் கால்கள் நிற்க தந்தையிடம் திரும்பி,
“நீங்க எல்லாரும் சொல்லியும் நடக்காத ஒரு விஷயமா இந்த வீட்ல என் பேச்சுக்கு நடக்கும்?” என்றான் பொருள் பொதிந்த சிரிப்புடன்.
“ஏன்டா? அவன் பேசவே கூலி கேட்டா நீ பேசுனா புரியாத புதிரா பேசுற? என்னை என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” என்று தலையில் அடித்து கொண்டார்.
அவரின் அருகில் வந்து தலையை தடவி கொடுத்தவன்,
“எதுவும் நினைக்கல அப்பா… அப்டியே நினைச்சாலும் நினைச்சது நினைச்ச மாதிரியே நடந்துருமா என்ன?” என்றான்.
“டேய்…..” அவர் அவனை அடிக்க அவனும் செல்லமாக வாங்கி கொண்டான்.
‘எங்கே அதற்கு மேல் நின்றால் தன்னை அறியாமல் எதுவும் நிகழ்ந்து விடுமோ?’ என்ற ஐயத்தில் அவன் வேகமாக வெளியேறினான்.
“அப்பா நைட் சாப்பாடு எழில் கூட தான்… எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்…” என்று காற்றில் தந்தைக்கு செய்தி அனுப்பியவாறே.
இவர்கள் இருவரின் இந்த உரையாடலை கேட்டு அங்கேயே நின்று கொண்டிருந்த ரகுவிற்குள் ஏக்கம் தாளவில்லை.
‘என்னால ஏன் இதை மாதிரியெல்லாம் இருக்க முடியல? அவளோட நியாபகத்தாலயா? நானும் அவளை மறக்க நினைக்குறேன் ஆனா??? அவளை மறந்து இனி என் குடும்பத்தோடு ஒன்றாய் ஒருவனாய் வாழ வேண்டும்..’ கணக்கில் அடங்கா எண்ணிக்கையில் உடன்படிக்கை செய்து கொண்டான்.
ஆனால் மறு கணம் அவை காற்றில் பறந்து மீண்டும் அவளின் எண்ணமே அவனுக்குள் வியாபிக்கும் விந்தை தான் புரியவில்லை.
அனுதினமும் மறக்க வேண்டும் என்று தோன்றும் மனதிற்கு தெரியவில்லை
‘மறக்கும்’ என்ற எண்ணமே அவளின் நினைவாய் வந்து சுழட்டுவதை.
மாயை என விலகி செல்ல இது மந்திரமும் தந்திரமும் இல்லையே.
மானிடர் மண்ணுக்குள் சென்றாலும் அவர் தம் நினைவு மனதை விட்டு அகலாத காதலாய் போனதே.
காதல் தனில் காணாமல் போக தானே யாவரின் மனம் துடிக்கும்.
அதில் வெற்றி தோல்வி என்பதை நிர்ணயிக்கும் உரிமை யாருக்கு உண்டு?
இறந்தும் காதலிக்கும் காதல் தோல்வியா இல்லை வெற்றியா?
சேர்ந்த பின் செத்து மடியும் காதல் தான் வெற்றியா தோல்வியா?
காதல் தேர்வின் விடை கடவுள் கூட அறியாத பொழுது
ரகுவின் மனம் மட்டும் அறிந்து விடுமா?
0 Comments