நாட்கள் யாருக்கும் கவலை கொடுக்காது நத்தை வேகத்தில் நகர மாணவர்களுக்கு தேர்வு நாளும் நெருங்கி கொண்டிருந்தது.
வசீ, தேர்வுக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொடுக்க மாணவர்களும் கர்மசிரத்தையாக குறிப்புகளை எழுதி கொண்டு இருந்தனர்.
அதிலும் சிலர் ‘யார் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை’ என்ற ரீதியில் இருக்க அவர்களையும் வசீ வழக்கம் போல உருட்டி மிரட்டி எழுதவைக்க அரும்பாடு பட்டாள்.
“உங்களையெல்லாம் பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு..” என்று வசீ கூற
“ஏன் மிஸ்?” என்றான் சரண்.
“வழக்கமா எல்லா இடத்துலயும் கேங்க் மாதிரி பிரிஞ்சு பிரிஞ்சு இருக்கிறதை தான் பார்த்து இருக்கேன். ஏன் நாங்க கூட அப்டி தான்… ஆனா நீங்க அப்டி இல்லாம இருக்கிற இருபத்தி நாலு பேரும் ஒரே கூட்டமா ஒன்னா இருக்கீங்க.. அதான் சொன்னேன்..” என்றாள்.
அவர்கள் அனைவரும் அவளை பெருமையாக பார்க்க…
“இது பரவாயில்லை… நான் ட்ரைனிங் போய் இருந்த இடத்துல பத்தாம் கிளாஸ்லய பாய் ஃப்ரண்ட் வச்சுட்டு சுத்தறாங்க..” என்று பொருள் பொதிந்து கூற
கூட்டத்தில் சிலர் அவளின் பேச்சில் முகம் சுழித்தனர்.
‘தன்னை தான் கூறுகிறாரோ?’ என்ற எண்ணத்தில்.
அவளும் அவர்களை தான் மறைமுகமாக சாடினாள்.
அங்கு இங்கு என அவள் காதினுள் வந்த செய்தியை பற்றி.
“அட்வைஸ் எல்லாம் கசப்பா தான் இருக்கும் மக்களே… ஆனா அந்த கசப்பை அனுபவிச்சா மட்டும் தான் லைஃப் சக்ஸஸ் ஆகும். பத்தாம் வகுப்பு முடிச்சு இனி உன் லைஃப்ல நீ போக வேண்டிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் வரும்.
நீ தேர்வு செய்ய போறது தான் இனி உன் வாழ்க்கைக்கு கை கொடுக்கும்னு சொல்லி இருப்பாங்க. அதுக்காக உன் வாழ்க்கையையே தேர்ந்தெடுத்து கொள்ள உனக்கு உரிமை கிடைச்சுருச்சுன்னு அர்த்தம் ஆகுமா?”
சாட்டையை கையில் எடுத்து சுழட்டுவதை காட்டிலும் வார்த்தையில் சுழட்டினால் அது ஆறாத வடுவாக என்றும் இருக்கும் என்ற வள்ளுவன் வாக்கை அவள் நல்ல முறையில் எடுத்து செய்ய அது சரியாக வேலையும் செய்தது.
“இப்போ உனக்கு பிடிச்சு இருக்க கூடிய சட்டை இன்னும் நாலு வருஷம் கழிச்சு சலிச்சு போய்டலாம். இப்போ உனக்கு பிடிச்சு இருக்க லைஃப் இன்னும் சில வருஷம் கழிச்சு உனக்கு சலிப்பு தட்டலாம். அப்போ என்ன செய்வீங்க…சட்டையை கழட்டி வீசுற மாதிரி வீசிவீடுங்களா?”
ரெண்டும் கட்டான் என்று சொல்லும் அந்த வயதிற்கு எது சரி எது தவறென கூட சரியாக கணிக்க தெரியாது.
இது தான் சரி.. இது தான் தவறு.. என்று பிரித்து காட்டுவதை காட்டிலும் சிறந்தது அவர்களை கணிக்க விடுவது.
அதை தான் வசீ செய்தாள்.
“காதலே தப்பு… காதல் செய்றதே பாவம்னு எல்லாம் சொல்லல.. நீங்க காதலிக்க வேண்டிய காலம் இது இல்லைன்னு தான் சொல்றேன். இது உங்களுக்கு முக்கியமான காலம். படிக்கிற காலம். இதை தொடர்ந்து செய்ங்க… ஒருத்தன் தப்பு பண்ணா அவனை தட்டி திருத்துற முதல் உரிமை நண்பன் கிட்ட இருக்கு… நான் இதை யாருக்கும் பேர் குறிப்பிட்டு சொல்லல உங்க எல்லாருக்கும் தான் சொல்றேன்… இதை எல்லாரும் எடுத்து செய்ங்க…
இதெல்லாம் நான் வந்த கொஞ்ச நாளிலே பண்ணி இருந்தா நீங்க மத்த டீச்சர்ஸ் மாதிரி என்னையும் ஒதுக்கி வச்சு இருப்பீங்க.. அப்டி இல்லை… உங்க கிட்ட எனக்கு உரிமை இருக்குன்ற நம்பிக்கையில தான் இதை சொல்றேன்…. நானும் மத்தவங்களை போல சராசரியான பொண்ணு தான். நான் எப்டி உங்க கிட்ட பழகுறேனோ அதே போல தான் மத்தவங்களுக்கு… என்ன அவங்களை நீங்க உங்க கிட்ட நெருங்க விட்டது இல்ல…”
“ஆனா மிஸ், எங்கள்ல சில பேர் தப்பு செய்ற மாதிரி ஆசிரியர் சிலரும் இருக்க தானே செய்றாங்க…” கூட்டத்தில் இருந்து ஒருவன் கேட்க அவளும் அதை அறிந்து வைத்திருந்தாள்.
இங்கு வேலை செய்யும் சிலர் ‘எனக்கென்ன?’ என்ற ரீதியில்…
நடத்தும் பாடம் மாணவர்கள் மத்தியில் போய் சேர்ந்ததா?
என்ற எண்ணமெல்லாம் இல்லை.
அவர்களுக்கு என்ன? சம்பளம் சரியாக கிடைத்து விட வேலையெல்லாம் சரியாக நடந்தால் என்ன? நடக்கவிட்டால் என்ன? மாணவன் தேர்வானால் என்ன? தேர்ச்சி பெறாவிட்டால் தான் என்ன? என்று இருப்பதையும் காண்கிறாள்.
அந்த குறிப்பிட்ட சிலரை தான் அவர்களும் கூறுகிறார்கள் என்பது புரிய
“நம் தவறை நாம திருத்திக்கணும்டா… அதை விட்டு அவங்களும் அதை தான செய்றாங்கனு காரணம் கற்பிக்க கூடாது. ஏன் அப்டி பார்த்தா அவர்களை தவிர மற்ற நல்ல சில பேரும் இருக்க தானே செய்றாங்க… அவங்களை என்ன செய்வீங்க?” என்றாள்.
இது மாணவர்களுக்கு உண்டான பதிலாக இருந்தாலும் அவளின் மனமோ,
‘தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவனை ஒரு வருடம் மீண்டும் படிக்க சொல்லி கண்டிப்பது போல இது போன்ற ஆசிரியர்களையும் தரம் இறக்க வேண்டும். அப்போதாவது கொஞ்சமேனும் மாணவர்கள் மீது அக்கறை பிறக்கும்…’ என்று எண்ணி கொண்டாள்.
‘அதுக்கு நீ தான் இந்த ஸ்கூலோட ஓனரா இருக்கணும்..’ என்று உள்மனம் இடித்துரைக்க இவளும் சிரித்து கொண்டாள்.
சிந்தனை கலைந்து மாணவர்களை பார்க்க அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களை ஏதோ ஒரு விதத்தில் சிந்திக்க வைத்து இருப்பதை உணர்ந்தாள்.
தெளிந்த நீரோட்டத்தில் கல் எறிந்தால் மட்டும் தான் மீன் பிடிக்க முடியும்.
ஆகவே தன்னால் இயன்ற மட்டும் கல்லை எடுத்து வீசி கொண்டிருந்தாள்.
“நான் சொன்னதுல சில பேருக்கு வருத்தம் இருக்கலாம்… சில பேருக்கு கோபம் இருக்கலாம்… ஆனா அந்த கோபத்தை எல்லாம் தூக்கி தூர வீசிட்டு யோசிங்க.. சொன்னதுல உங்களுக்கு சரின்னு படுற நல்லதை செய்ங்க…”
“அட்வைஸ் பண்றது ஈஸி… அதை கடைப்பிடிக்கிறது தான் கஷ்டம்…” என்றான் ஒருவன்.
“நிச்சயமா… அதை நானும் ஒத்துக்குவேன்.. ஏன் என்னையே எடுத்துக்கோ… உங்க வயசுக்கு நீங்க இப்போ நினைக்கிறத தான் நானும் நினைப்பேன்… ஆனா என்னை விட வயசுல பெரியவங்களானாலும் சரி சின்னவங்களானாலும் சரி…
நீ செய்றது தப்புன்னு சுட்டி காட்டினா.. என் கிட்ட இருக்கும் நியாயமான தப்பை சுட்டிக்காட்டி திருந்த சொன்னா அதை நான் செய்ய தான் வேணும்… அதிலும் மூத்தவங்க அப்படினா? அவங்களுக்கு நம்ம வயசே அனுபவமா இருக்கும். அப்டி இருக்கும் போது…
இல்ல எனக்கு தெரியும்… நான் செய்றது தான் சரி அப்டின்னு நான் சொன்னா?? அது தான் உண்மையில் எனக்கு தோல்வி…” என்றாள் உண்மையாக.
சிலர் பதில் கேள்வி கேட்க அவளும் விடாமல் பதில் கொடுக்க என வாக்குவாதம் நல்ல காரசாரமாக நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
நேரங்கள் பல கடந்து செல்ல,
‘மொத்தமாக கொட்டினாலும் மூட்டை அறுந்து விடும்’ என்ற சொல்லுக்கு ஏற்ப அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.
“யார் எப்படி வேணா இருந்துட்டு போகட்டும் மக்களே… நீங்க உங்க பக்கம் சரியா இருங்க… நீங்க சொல்ற படி சிலருக்கு நீங்க தேவையில்லாம இருக்கலாம்.. ஆனா உங்களுக்கு?? இன்னும் பத்து வருஷம் கழிச்சு நினைச்சு பார்க்கும் போது உங்களுக்கு உங்க ஆசிரியர்னு சொன்னா அவங்க முகம் எல்லாம் தானே நினைவு வரும். அப்டி பட்ட நினைவுக்கு நாம நல்லதே எடுத்து வைப்போமே…” என்றாள் வசீ.
வகுப்பறை விட்டு காற்றாட மரத்தடியில் அமர்ந்து கொண்டு நடந்து கொண்டிருந்த இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் நூலக அறையில் அமர்ந்து இருந்த ரகுவிற்கு தெளிவாக கேட்க
ஆரம்பத்தில் அவளை குறித்து உண்டான கோபமும் லேசாக காணாமல் போய் இருந்தது.
‘யார் எப்படி இருந்தாலும் நாம் சரியாய் இருந்தால் எல்லாம் சரியே’ என்ற ஆணித்தரத்தை மாணவர்களிடம் எடுத்து வைத்திருந்தாள்.
கயிற்றை கழுத்தில் கட்டி அசையாதே என்று சொல்வதை விட கயிறு இறுக்கி கொண்டால் உன் கழுத்து அறுபடும் ஜாக்கிரதை என்று சொல்வதே மேல்.
அப்படி தான் இருந்தது அவன் இத்தனை நாட்களாக போட்டிருந்த வேலிகள்.
அதை சுலபமாக உடைத்து மாணவர்கள் அவர்களாகவே வேலி போட்டு இருக்க வைத்து இருந்தாள் வசீ.
“க்ரேட்..” மெலிதாய் வளைந்த உதட்டோடு கூறிவிட்டு அவன் தனதறைக்கு சென்றான்.
இது எதுவும் அறியாத வசீயோ மாணவர்களின் கவனம் திருப்பும் பொருட்டு,
“சரி, எக்ஸாம் நெருங்குது இல்ல… எக்ஸாம்ஃ பியர் போக்க எங்காவது டூர் போடலாமா?” என்று கேட்டாள்.
மொத்த பேரும் அவளை அமைதியாக பார்க்க
‘என்ன?’ என்பதாய் விழியால் வினவினாள்.
“இங்க டூர் கூட்டிட்டு போற ரூல்ஸ் எல்லாம் கிடையாது மிஸ். அதெல்லாம் எப்போவோ நிறுத்திட்டாங்க…” என்றாள் செல்வி.
“என்ன?” என்று இமை சுருக்கியவள் ‘ இதென்ன அடுத்த போர்க்கொடி’ என்று நீண்ட பெரு மூச்சு விட்டாள்.
“ஆமா.. ரகு சார் சொல்லி இருங்காக… இது வரை டூர்னு போனது இல்ல…” என்று சரண் கூற
‘ஓஹ் இதுவும் அவருடைய வேலை தானா?’ என்று எண்ணியவள்,
“சரி எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்… நாம இந்த டைம் டூர் போறோம்… அது உறுதி…” என்று கூறினாள்.
நம்பிக்கை சிறிதேனும் அவளின் உறுதியே அவர்களுக்குள்ளும் எழ
அந்த நாளுக்காய் காத்திருந்தனர்.
அந்த டூரினால் அவளின் வாழ்வின்
இனிமையான பக்கம் காணாமல் போக போகிறது என்பது தெரியாமல் அவளும் அவர்களோடு காத்திருந்தாள்.
0 Comments