13. நீல இரவில் நின் முகம்

 


அலுவலக அறையில் செல்வமும் ரகுவும் ஏதோ பேசிக்கொண்டு இருக்க வசீ அவர்களிடம் வந்தாள். 

“மே ஐ கமின் சார்…” 


நிமிர்ந்து பார்த்த செல்வம் “வா வசீ” என்று இவள் பக்கம் திரும்பினார். 


ரகு தன் பார்வையை மடிக்கணினி பக்கம் திருப்பினான். 

இது எப்போதும் நடக்கும் வாடிக்கை தான் என்பதால் வசீயும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. 


“சார், ஃப்ரீயா இருக்கீங்களா? உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று கேட்டாள். 


 அவர் ரகுவை ஒரு முறை ஏறிட்டு விட்டு பின், 

“என்ன விஷயம் சொல்லுமா?” என்றார். 


“வந்து…” என்று அவள் தயங்க 

“பரவாயில்லை சொல்லு..” என்றார். 


“சார், நான் என் வேலையை விட்டு தேவையில்லாத விஷயத்தை பேசுறேன் நினைக்க வேணாம்.” 


“ஏன் அப்படி என்ன பேச போற?” அவர் சிரித்தார்.

அவனனோ தனக்கும் இதற்கும் ஒன்றும் இல்லை என்பதாய் அமர்ந்திருக்க அடுத்து அவள்,


“பசங்களுக்கு எக்ஸாம் நெருங்குது இல்லையா? அதனால ஏதாவது டூர் மாதிரி கூட்டிட்டு போனா எக்ஸாம் ஃபியர்ல இருந்து பசங்க கொஞ்சம் ரிலாக்ஸான மாதிரி இருக்கும்..” எனவும் அவன் விழிகள் மேல் எழுப்பவில்லை என்றாலும் அவள் செய்தியை கருத்தில் கேட்டு கொண்டான். 


முன்பானால் நிச்சயம் இதற்கு கோபத்தில் ஏதாவது பேசிட நேரிடும். 

ஆனால் அவள் மாணவர்களிடம் பழகும் உத்தி புதுவிதமானதாய் இருக்க அவளின் எந்த ஒரு கருத்திற்கும் அவனிடம் இப்போது எந்த எதிர்ப்பும் இருப்பதில்லை. 


ஆனால் செல்வமோ ‘அருகில் இவன் இருக்க இந்நேரமா இவள் இதை கேட்க வேண்டும்’ என்று எண்ணியபடி 


“இத பத்தி நாம அப்புறமா பேசுவோமே வசீ?” என்று கூறினார். 

அதில் அவளுக்கு உடன்பாடில்லை. 


‘இவனை அருகில் வைத்து கேட்டால் மட்டுமே இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும்’ என்று தோன்றவே,

“இல்ல சார் அது வந்து…” என்று அவளும் விடாது அதிலேயே நிற்க அவருக்கு தான் தலையை முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. 


விடை தேடி அவர் ரகுவை பார்க்க அவனோ படித்து கொண்டிருப்பதாய் வைத்து கொண்டு இருந்த ஃபைலை மூடி வைத்து விட்டு ஓர் சிறிய மூச்சுடன், 


“எக்ஸாம் ரொம்ப பக்கத்துல நெருங்கிருச்சு இல்லையா? அதனால எல்லா பசங்களுக்கும் டூர் அரேஜ் பண்றது கஷ்டமாச்சே மிஸ். வசந்தி.” என்றான்.


“தெரியும் சார், இருந்தாலும் முயற்சி பண்ணி பார்க்கலாம்ல… அட்லீஸ்ட் இந்த முறை பெரிய பசங்கள மட்டும் கூப்பிட்டு போற மாதிரி பார்க்கலாமே?” என்றாள்.


“பெரிய பசங்க மட்டும் போறதா தெரிஞ்சா மத்த பசங்க மனசுக்கு கஷ்டமா இருக்காதா?” என்றான். 


அவளுக்கும் அது தெரிந்து இருந்தது தான் ஆனால் கொஞ்சமேனும் இவன் இறங்கி வரும் இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லாமல்,


“பெரிய பசங்க டூர் போற அதே நாள்ல ஒன்பது பத்தாவது படிக்கிற பசங்களை பக்கத்துல இருக்க அறிவியல் மையத்துக்கு கூட்டிட்டு போவோம் சார்… மத்த சின்ன பசங்களுக்கு இங்கேயே ஏதாவது கார்னிவல் மாதிரி அரேஜ் பண்ணிட்டா எல்லா பசங்களும் ஹேப்பியான மாதிரியும் இருக்கும்… நமக்கும் எந்த கஷ்டமும் இருக்காது சார்..” என்று கூறினாள். 


அவள் கூறுவதும் சரியே என தோன்ற

‘சின்ன பசங்களை தான் வெளியே கவனிச்சுக்குறது கொஞ்சம் சிரமம். அதுவும் ஏதாவது ஒரு உணவு திருவிழா மாதிரி நடத்தினா நல்லது தான். மற்ற பசங்களை பிரிச்சு அனுப்புறதால பெருசா எந்த பாதிப்பும் இல்லை’ என்று எண்ணினான். 


“என்ன ரகு உனக்கு ஓகேவா?” அமைதியாக அமர்ந்திருந்தவனிடம் செல்வம் கேட்க 


“எஸ் அங்கிள்… எனக்கும் ஓகே தான்… நீங்க டேட்ஸ் பார்த்து அரேன்ஜ் பண்ணிடுங்க” என்று கூறினான்.


“ரொம்ப தேங்க்ஸ் சார்… தேங்க் யூ சோ மச்… அப்போ நான் வந்த வேலை நல்ல படியா முடிஞ்சுருச்சு சார்… நான் வரேன்” என்று கூறிவிட்டு புள்ளிமானாய் துள்ளி செல்பவளையே இருவரும் பார்த்தனர்.


“இன்னும் சின்ன குழந்தை மாதிரியே நடந்துக்குறா… இவள பொருப்பானவ லிஸ்ட்ல சேர்க்கணுமா இல்ல கொழந்த புள்ள லிஸ்ட்ல சேர்க்கணுமானே தெரியல…” என்று செல்வம் கூறி சிரிக்க 

அவனுக்கும் சிரிப்பு தான் வந்தது அவர் கூற்றில். 


“நீங்க சொல்றது ரொம்ப சரி அங்கிள்… இவங்களோட சின்ன பிள்ளை தனமா செயலால ஏதாவது ஏடாகூடம் ஆகிடுமோன்னு ஆரம்பத்துல ஒரு பயம் இருந்தது என்னவோ உண்மை தான். ஆனா இவங்க கிட்ட இருக்க பக்குவம் பசங்கள அவங்களுக்கே தெரியாம நல்லதை செய்ய வைக்கிறது பார்க்கும் போது என் எண்ணம் தப்புன்னு எனக்கு புரிஞ்சி போச்சு… பசங்க விஷயத்துல இவங்கள தாராளமா நம்பலாம்…” என்று கூறிட 


தன் காதில் விழுந்ததை நம்ப முடியாமல் அவனை விழி விரிய பார்த்தார் செல்வம் இருந்தும்,


“வசீ உண்மையிலே ரொம்ப சாமர்த்தியசாலி ரகு..” என்றார்.

சாமர்த்தியமாக பேசி டூருக்கு அவனிடம் சம்மதம் வாங்கியதை அவரால் இன்னமும் நம்ப முடியவில்லை. 


‘நம் ரகுவா இது?’ என்று ஓர் கணம் வாயை பிளந்தார் செல்வம்.


‘எது எப்படியோ? நல்லதே நடந்தால் சரி...’ என்று தனக்குள் கூறிக்கொண்டு வேலையை தொடர்ந்தார்.


இங்கோ சந்தோஷத்தில் துள்ளி குதித்து வந்து நின்ற வசீயிடம் விபரம் கேட்டு மாணவர்களும் தங்கள் குஷியை காட்டினர். 


நாள் குறிக்கப்படாத அந்த நாளுக்கு இப்போதிருந்தே காத்திருக்க தொடங்கினர்.


மாணவர்களோடு சேர்த்து அவளும் ஆவலாய் அந்த நாளுக்கு காத்திருக்க அந்த நாளும் காத்திருந்தது அவள் வாழ்வின் நம்ப முடியா உண்மைகளை எடுத்து காட்டிட.


அந்த நாளுக்கு பின் அவளின் சகலமும் அடங்க போவது அறியாமல் அவர்களோடு சேர்ந்து நாட்களை எண்ண தொடங்கி விட்டாள் பெண்ணிவள். 


அவள் அனுதினமும் தேடும் நிழல் நிஜமாய் அவள் முன் வந்திட 

கையெட்டும் தூரத்தில் கறை படாத தன் கனவை எண்ணி காத்திருக்கும் கன்னியின் முன் அவளின் காதல் வந்து நின்றால் அதை ஏற்கும் ஷக்தி இவளுக்கு தான் இருக்குமா? 


***


பேசியபடியே அந்த மாதத்தின் 16ம் நாள் டூர் செல்வதாய் செய்தி வர 

இடையில் இருக்கும் நாட்களை நெட்டி தள்ளினர் மாணவர்கள். 


 பூவிதழாய் நாட்கள் உதிர்ந்து அழகாய் விடிந்தது அந்நாளும். 


மொட்டவிழும் காட்சி ரம்மியமானது தான் அதே போல தான் 

அன்றைய நாளும் அழகாய் விடிந்தது வசந்திக்கு.

குளித்து முடித்து அழகாய் தயாராகி வந்து நின்ற மகளை வாஞ்சையாக ஏறிட்டார் சரவணன். 


‘கோடியழகு என் குட்டி தேவதை’ என்று மனதில் திருஷ்டி கழித்து கொண்டவர் ஆயிரம் ஆயிரம் அறிவுரைகளை அள்ளி வழங்கினார். 


“கவனமா இருக்கணும் வசீ… தேவையில்லாம எங்கேயும் போக கூடாது… பசங்கள பத்திரமா கவனிச்சுக்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு… பாத்து சூதானமா போயிட்டு வா…” என்று கூறிட


“அப்பா, நான் என்ன சின்ன பிள்ளையா?” என்று சிணுங்கினாலும் தந்தை சொல்லுக்கு தவறாமல் தலையை ஆட்டினாள்.


“வசந்த் கிட்ட சொல்லிட்டியா?” சரவணன் கேட்க 

“நேத்தே சொல்லிட்டேன்ப்பா… அவனும் வர ரெண்டு நாள் ஆகும் சொன்னான்… நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க… தனியா இருக்காம போய் அவன் வீட்டுல அத்தை கூட தங்கிக்கோங்க… ரெண்டு பேருக்கும் துணையாச்சு…” என்று கூறிட அவரும் தலையை ஆட்டினார்.


தந்தைக்கு கையசைத்து பள்ளி வாகனத்தில் ஏறி கிளம்பிட

 ஏனோ மனம் கனத்தாலும் மகளின் புன்னகை முகமும் அழகோவியமும் அவரை சமாதான படுத்தியது.




Post a Comment

0 Comments