முதல் நாள் வசீயிடம் பாரா முகமாக நடந்து கொண்டது மனதை என்னவோ போல் செய்ய ஓர் மனமோ அவளை காண துடிக்க அன்றைய நிகழ்வுகள் எல்லாவற்றையும் நெட்டி தள்ளி முடித்தவன் ஒரு வழியாக கொடைக்கானல் கிளம்பி இருந்தான்.
அவன் கொடைக்கானல் அடையும் போதே பாலாஜியிடம்,
“இப்போ எல்லாரும் எங்க இருக்கீங்க?” என்று கேட்க அவனோ இங்கிருக்கும் நிலையை வசீ மட்டும் செல்வியோடு இருப்பதை கூறிட
“ஓஹ் அப்போ சரி, நான் போய் ஹோட்டல்ல என்ன நிலைன்னு பார்த்துட்டு அங்க வரேன்..” என்று கூறி வைக்கவும் தான் விளங்கியது ரகுவும் கொடைக்கானல் வந்திருக்கிறான் என்பது.
இங்கோ ஹோட்டலில் செல்வி மட்டுமே அறையில் இருக்க விபரம் கேட்டான்.
“மிஸ் பக்கத்துல மெடிக்கல் போறேன்னு போனாங்க இன்னும் வரல…” என்று கூறிட
“என்ன தனியா போய் இருக்காங்களா? கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? தெரியாத இடத்துல எங்க போய் என்ன வாங்குறது? அதை விட இங்க இருக்கவங்க கிட்ட சொன்னாலே தேவையானதை வாங்கி தந்துருக்க மாட்டாங்க...” என்று விடாமல் பொரிந்து தள்ள
செல்வியோ, ரகுவை கண்டு எழுந்த பயத்தோடு சேர்த்து இப்போது அவன் திட்டையும் கேட்டு அழுகையே வர லேசாய் விசும்பினாள்.
“சரி, போய் எவ்ளோ நேரம் இருக்கும்?” என்று கேட்க அவள் கூறவும் மறு நொடி தன் காரில் கிளம்பி இருந்தான்.
அவன் ஹோட்டலுக்கு வரும் சாலை வழியில் எதிரில் அவளை காணவில்லை. ஆக தான் செல்ல வேண்டியது எதிர்புறம் என்பது புரிய வண்டியை எதிரில் திருப்பி செலுத்தினான்.
கைகள் ஸ்டியரிங்கை திருப்பினாலும் கண்கள் அவள் எங்காவது தென்பட மாட்டாளா? என்று அலைபாய நீண்டு கொண்டே சென்ற சாலையில் அவளை எங்கும் காணவில்லை.
இருட்டில் இருப்பவனுக்கு கிடைக்கும் சிறு வெளிச்சமாக பெரிய பகலவன் கொடுக்கும் திருப்தியை போலவே
தூரத்தில் அவள் ஓடி வருவதை கண்டு அதுவரை படபடத்து கொண்டிருந்த மனதிற்கு கிடைத்தது.
ஆனால் அவள் சாலையில் அல்லாமல் காட்டுக்குள் ஓடவும் மீண்டும் மனம் பதைக்க வேகமாக காரை அங்கு செலுத்தினான்.
கார் அவள் திரும்பிய இடத்தை அடையவும் தான் விளங்கியது எவனோ அவளை துரத்துவது.
வேகமாக கீழே இறங்கி துரத்தியவன் பின் ஓடினான்.
காட்டினுள் எந்த பக்கம் சென்றால் என்று தெரியாமல் தாடிக்காரன் நிற்க அவன் முதுகில் ரகு மிதித்த மிதியில் சுருண்ட பாயாய் போய் விழுந்தான்.
சுருண்டு கிடந்தவன் அருகில் சென்று தூக்கி பிடித்து முகத்தில் விட்ட குத்தில் மீதி இருந்த போதையும் இறங்க அவன் செத்த பாம்பாய் தலையை தொங்க விட்டான்.
அவனை கீழ் உதறிவிட்டு வசீயை தேடி ஓடினான்.
அவனுக்கும் அந்த காட்டில் எந்த பக்கம் அவள் ஓடினாள் என்பது தெரியவில்லை… ஏதோ ஒரு திசையில் அவனும் ஓட என
நேரம் கரையும் போதெல்லாம் அவனுக்குள் பயம்.
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்ட தொடங்கி விடுமே… அதற்குள் அவளை தேடி கண்டு பிடிக்க வேண்டும்’ என்று மனதில் கூறி கொண்டவன் நின்று மூச்சை உள் இழுத்து பின் மெதுவாய் வெளியிட்டு மனதை ஒரு நிலை படுத்தி ஆழ்ந்து காதை கூர்மையாக்கி கேட்க சருகுகள் கேட்கும் திசையில் ஓடினான்.
அடுத்த பத்து நிமிடங்களில் அவளை தன் விழிகளுக்குள் கொண்டு வர அதுவரை அழுந்தி கொண்டிருந்த மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு நின்றான்.
அவளோ எதையும் கருத்தில் கொள்ளாமல் தறிகெட்டு ஓடி அவன் மேலேயே மோதிட
ஷக்தி இழந்த உடல் சரிய தொடங்க அவளை தாங்கி இருந்தான் அடுத்த நொடி தன் கைகளில்.
மிக அருகில் தெரிந்த அவன் முகத்தை கண்டு நிம்மதியாக கண் மூடியவள் மனதில் தாயின் பிடியில் சிக்கிய உணர்வு.
இனி தனக்கு ஒரு போதும் ஆபத்தில்லை என்று உணர தன்னை மறக்க தொடங்கினாள்.
“வசந்தி… வசீ… இங்க பாருமா… கண்ணை திற… ஒன்னும் இல்ல….” என்று ஏதேதோ கூறி அவள் கன்னம் தட்ட அசைவில்லை அவளிடம்.
அவளை தன் கையில் தூக்கி கொண்டவன் சாலையை நோக்கி ஓடினான்.
மூச்சிரைக்க ஓடியவன் காரில் அவளை கிடத்திட அப்போது தான் கவனித்தான்.
முன் நெற்றியில் வீங்கி தடித்து இருப்பதை.
அவசரமாக முதலுதவி பெட்டியை எடுத்து காயத்தை சுத்தம் செய்து மருந்தை இட்டான்.
வலியதுவோ அவன் விழிகளில்.
கண்கள் மறைத்த நீரை துடைத்து விட்டு அவளை தட்டி எழுப்ப எந்த பதிலும் இல்லை அவளிடம்.
“அறியவில்லையாடி உனக்கு… இப்படி தான் எப்பவும் ஏதாவது பிரச்சினைல போய் சிக்குறதா? அ…ன்னி..க்கும் அப்டி தான்… இப்பவும்…
நான் மட்டும் வரலன்னா என்ன ஆகி இருக்கும்?”
அவனோ சிந்தை மறந்து கூறிட எதிரில் இருப்பவளின் காதில் விழுந்தாலும் கருத்தில் விழுந்ததா தெரியவில்லை.
திடீரென அவள் உடல் அசைவுகள் கொடுக்க மீண்டும் கன்னம் தட்டி எழுப்பினான்.
பாவம் விழியை திறக்க திராணியில்லை அவளுக்கு.
கண்கள் திறக்க முயன்று முடியாமல் கண்ணீர் சிந்த அதை துடைத்து விட்டான்.
‘இனி இங்கு இருப்பதை விட ஹோட்டல் செல்வதே சரி…’ என்று விளங்க வேகமாக காரை எடுத்து ஹோட்டல் விரைந்தான்.
செல்போனில் வேண்டியவர்களிடம் தகவல் கொடுக்க அனைத்தையும் தயாராக சொல்லிவிட்டு போனை வைத்தவன் மனம்
‘இவளை மீட்ட வேண்டும்’ என்பதை மட்டுமே கூறி கொண்டு இருக்க
வசீயின் மனமோ, இதுவரை தன் காதலாய் மனதில் வடித்து வைத்த முகம் தெரியாத அந்த ஓவியத்தில் முழுமை பெற்று நிற்கும் அவன் முகத்தை காண வேண்டும் என்று ஆவல் மீவினாலும் முடியாமல் செய்த உடலையும் மனதையும் திட்டிக்கொண்டாள்.
‘ரகுவா… தன் காதலுக்கு சொந்தக்காரன்.. தன்னை அன்றும் இதே சிக்கலில் இருந்து மீட்டவன்… இவனா?’
கொஞ்சம் முன்பு அவன் கூறிய அந்த வார்த்தையை அவள் காதில் திரும்ப திரும்ப ஒலித்து கேட்டுக்கொண்டாள்.
‘இவன்… என்னவன்… எனக்கானவன்… என் காதலுக்கு சொந்தக்காரன்…’
அவள் அத்தனை நாளும் மனதில் மட்டுமே வடித்து வந்த கண்ணீர் இன்று விழி வழி வெளியே வர அவன் கைகள் துடைத்துவிட்டது.
மூளையும் மனமும் ஓர் வழி நடப்பது அறிதாகுமே..
அவள் மனம் காதல் கைகூடிய காற்றில் பறக்க மூளையோ,
‘ரகு ஒரு பொண்ண விரும்பினான்மா.. ஆனா அந்த பொண்ணு வேற யாரையோ விரும்புறதா சொன்னான்… அன்னைல இருந்து அவ நினைப்பா தான் இருக்கான்…’ செல்வத்தின் குரலை எடுத்து காட்ட
காற்றில் பறந்து சென்ற பட்டம் அறுந்து விழுந்த வலி அவளுக்குள்…
ஓர் நொடி அள்ளி தரும் காதல் மறு நொடி ஆழ்குழியில் தள்ளி புதைக்கும் என்பதை போல
‘அவன் தனக்கானவன்…’ என்று கூறிய மனம் ‘ஆனால் அவனுக்கானவள் நானில்லை..’ என்று கசப்புடன் கூற
அவன் இட்ட மருந்தை விடவும் இந்த உண்மை கசந்து போனது.
காதல் மொழி ஆயிரம் மனம் பேசினாலும்
என்ன இருந்தும் அவன் காதல் தனக்கில்லை..’ என்ற உண்மையை அவளுக்கு கூறி கொண்டு இருந்தது சிந்தை.
மருந்தின் வீரியமா இல்லை மனம் வெறுத்து போனதன் விளைவா தெரியவில்லை தனக்குள் பேசிக்கொண்டு இருந்த பேச்சையும் நிறுத்தி விட்டு அவள் மயக்க நிலைக்கு செல்லவும் ஹோட்டல் வரவும் சரியாக இருந்தது.
மொத்த கூட்டமும் இவர்களுக்காக தான் காத்திருக்கும் போல அடித்து பிடித்து ஓடி வந்தனர் அனைவரும் இவர்களிடம்.
செல்போனில், “வசந்திக்கு எமெர்ஜென்சி ஹோட்டல்ல சொல்லி டாக்டர ஏற்பாடு பண்ணுங்க..” என்று அவன் செய்தி சொல்லிய மாத்திரத்தில் இருந்து இங்கு அனைவரின் மனமும் பதைத்து கிடந்தது.
காரை விட்டும் இறங்கி அவளை தூக்கி கொண்டு அறையின் படுக்கையில் கிடத்திட மருத்துவர் வேண்டிய சிகிச்சைகள் செய்தார்.
நீண்ட பரிசோதனைக்கு பிறகு தேவையான மருந்துகள் எழுதி கொடுத்து விட்டு துணைக்கு ஒரு பெண்ணை அவள் அருகிலேயே இருக்க செய்து விட்டு மருத்துவரோடு அவனும் வெளியே வர,
“ஈஸி மிஸ்டர்… ரொம்ப களைப்பா இருக்காங்க… உடம்புல கொஞ்சம் கூட எனர்ஜி இல்ல… என்ன ஆச்சு?” என்று கேட்க அவனும் கூறியிருந்தான்.
“தேங்காட்… நல்ல வேலை நீங்க சரியான நேரத்துக்கு போனீங்க… எனிவே… இப்போ அவங்க நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும்.. யாரும் தொந்தரவு செய்ய வேணாம்… நைட் போல மயக்கம் தெளிஞ்சு டுவாங்க அப்போ ஏதாவது சாப்பாடு கொடுத்து இந்த மருந்தை கொடுங்க… நான் வரேன்…” என்று கூறிவிட்டு கிளம்பிட அதன் பின்னரே அவனால் இயல்பாய் இருக்க முடிந்தது.
7 மணி வாக்கில் கண் விழித்த வசீயின் மனம் மட்டும் விழித்திட மறுத்தது.
அவள் மனம் காதலை சுமக்க கசந்து போனது போன்ற வலி. மறுநொடி வசந்த்தை அலைபேசியில் அழைத்தாள்.
“என்ன கத்தரிக்கா… போய் இறங்கிட்டனு ஒரு மெசேஜ் இல்ல.. இப்போ தான் என் நியாபகம் வந்துச்சா?” மறுபக்கம் எடுத்த நொடியில் அவன் கேட்க ஏறக்குறைய அழும் நிலையில் இருந்த வசீயோ,
“வச…ந்த்….” என்று திக்கியபடி கூற இந்த பக்கம் இவன் பதறினான்.
“வசீ… என்ன ஆச்சு? ஏன் அழுற?” என்று கேட்க
“டேய்… எனக்கு… என்னை… நீ சொன்ன மாதிரி…”
எங்கு தொடங்க எங்கு முடிக்க என்று தெரியாமல் அவள் புலம்ப
“வசீ, இப்போ எங்க இருக்க?” என்றான்.
“இங்க தான் ரூம்ல..” என்று தங்கும் இடத்தின் முகவரியை கூறியவள்,
“வசந்த்… என்னால இங்க இன்னும் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலடா… கடைசில எல்லாமே நீ சொன்ன மாதிரி தான்… எதும் எனக்கு பிடிக்கல… ஏன் வாழவே…” என்று கூறி முடிக்கும் முன் இந்த பக்கம் இவன் கத்தினான்.
“அடிச்சு பல்ல கழட்டிருவேன்.. நீ எங்கேயும் போகாத அங்கேயே இரு… நான் வந்துட்டே இருக்கேன்…” என்று கூறினான்.
மெல்லிய விசும்பலே அவளிடம் நிற்க மெத்தையில் சரிந்து கிடந்தவள் மனம் கண்ணுக்கு எட்டிய காதல் கானலாய் நிற்கும் நிலையை எண்ணி மேலும் மேலும் கண்ணீர் வடித்து கொண்டது.
இங்கு ரகுவோ அறைக்கு வெளியே இவள் வசந்திடம் பேசியவற்றை கேட்டு கொண்டு சத்தமில்லாமல் நகர்ந்தான்.
ஆம், ஒரு மாணவியை வசீயின் துணைக்கு வைத்து விட்டு ஹோட்டலின் பால்கனியில் நின்று கொண்டு இருக்க அந்த மாணவி வந்து “மிஸ் கண் முழிச்சிட்டாங்க” என்று கூறவும் அவளின் அறைக்கு ஓடினான்.
அதன் பின்னரே அவள் வசந்திடம் பேசியவற்றை அவனால் கேட்க முடிந்தது.
“என்னால இங்க இன்னும் ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலடா…” அவள் கூறவும் அவனால் மேலும் அங்கு நிற்க முடியவில்லை.
எனவே அவளிடம் ஏதும் விசாரிக்காமல் கிளம்பியிருந்தான்.
ஹோட்டலில் இருந்தும் தன் காரை எடுத்து கொண்டு கண்ணுக்கு புலப்படாத இடத்தில் போய் நிறுத்தியவன் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டான்.
அவனுக்குள் ஆயிரம் எண்ணவோட்டங்கள்…
அவற்றை வார்த்தை கொண்டு விவரிக்க தான் என்னால் ஆகுமா???
தெளிவாய் மனம் திறந்து பேசினால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வொன்று உண்டு.. என்பார்கள் பெரியோர்கள்
ஆனால் யார் முதலில் பேசுவது என்று வரையறுக்க மறந்து விட்டனர் போலும்.
அதனால் தானோ ஏனோ இருவரும் தத்தமது மனம் பற்றி.. மனதில் எழும் எண்ணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசி தெளிவித்து கொள்ளாமல் இருகின்றனர்.
தடையை முதலில் உடைக்கப்போவது யார்?
அல்லது எது??
0 Comments