16. நீல இரவில் நின் முகம்

 


விடியலை நெருங்கிய நேரம் வசந்த் வசீ கூறிய ஹோட்டலை அடைந்திருந்தான். 


மனமோ இரவில் அவளின் அழுகையில் தவிக்க ரிசப்ஷனில் விபரம் கேட்டு ஓடி வந்தான். 

அடுத்த சில நிமிடங்களில் அவளின் முன். 


இரவெல்லாம் அழுது களைத்து தனக்குள் எதையோ கற்பனை செய்து என ஒரு முடிவுக்கு வந்திருப்பாள் போல. 

முகத்தினில் ஓர் தெளிவு. 


“வசீ..” என்ற வசந்தின் அழைப்பில் தாயை தேடிய கன்றினை போல ஓடி சென்று அணைத்து கொண்டாள். 


அவனுக்கும் அதே நிலை தான் போல.. 

நேற்று நடந்த மொத்தத்தையும் கேட்டு பதறி துடித்து வழக்கம் போல கடிந்து கொள்ள தான் துடித்தது மனம். 


ஆனால் இப்போது குழந்தையை போல கதறி அழும் அவளை பார்க்க முதலில் அவளை ஆசுவாச படுத்துவதே சரியென தோன்ற,

“சரி அழாத வசீ… அதான் ஒன்னும் ஆகலைல… இதுக்கு போயா இன்னும் சின்ன பிள்ளை மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்க… நைட் தூங்குனியா இல்லையா? கண்ணெல்லாம் சிவந்து இருக்கு… உடம்பெல்லாம் சுடுது…” என்று கேட்டான். 


“அது வந்து…” 

இரவெல்லாம் அவளின் காதல் மனம் படுத்திய பாட்டை சொல்லிட வார்த்தை வரவில்லை அவளுக்கு. 

மீண்டும் விசும்பினாள். 


“என்ன ஆச்சு வசீ?” என்றான் பரிவாய் அவளின் தலையை வருடியபடி. 

“எனக்கு… நீ சொன்ன மாதிரி தான்…. வந்து… என்னை கூட்டிட்டு போடா இங்க இருந்து…”  


எதை சொல்ல எதை விடுக்க என தெரியாமல் அவள் திக்கி விக்கி கூற 


‘ஏதோ சரியில்லை?’ என்று மட்டும் புரிய 

‘எதுவாக இருந்தாலும் அதை பற்றி பின்னர் கேட்டு தெரிந்து கொள்ளலாம்’ என்ற எண்ணத்தோடு அவளிடம் சரியென தலையை அசைத்து விட்டு அவளின் பொருட்கள் அடங்கிய பையை எடுத்து வெளியே வந்தான். 


அவளும் அமைதியாக அவன் பின்னே வர எதிரே பாலாஜி வந்தான். 


“மேம் இப்போ உடம்புக்கு எப்டி இருக்கு?” என்று கேட்டபடி. 


“பரவாயில்ல சார்… லேசா ஃபீவர் மட்டும் இருக்கு.. அதான் கிளம்பிட்டேன்… எனக்கும் இங்க உங்க எல்லார் கூடவும் இருந்து என்ஜாய் பண்ணிட்டு கிளம்பணும் ஆசை.. ஆனா உடலும் மனசும் ஒத்துக்கல.. எனக்காக சேர்த்து எல்லாரும் என்ஜாய் பண்ணிட்டு வாங்க சார்…” என்று அவள் கூற 


“நேத்து நைட்டே ரகு சார் எல்லாரையும் கிளம்ப சொல்லிட்டாங்க மிஸ்… நீங்க கண் முழிச்சதும் வெகேட் பண்றதா சொன்னாங்க..” என்றான் கூட்டத்தில் இருந்து சரண். 


“என்ன??? என்ன சார் இதெல்லாம்?? இல்ல… என்னால இந்த ட்ரிப் கேன்சல் ஆனா எனக்கு கில்டியா இருக்கும்.. நான் ரகு சார் கிட்ட பேசுறேன்..” என்று அவள் கூறி கொண்டு இருக்கும் போதே அவளை சுற்றி வளைத்து நின்ற கூட்டத்தில் இருந்து,


“இதோ ரகு சார் வராங்க…” என்ற குரல் வர 


எந்த தைரியத்தில் அவனிடம் தான் பேசுவதாக கூறினாளோ அந்த தைரியம் கொஞ்சமும் இல்லாமல் போனது அவளிடம்.

 

அவனை எப்படி எதிர்கொள்ள? என்று விளங்காமல் நின்றவள் திடீரென ஒரு அதிர்ச்சியுடன் வசந்தை பார்த்தாள். 



‘அவன் ஏதாவது வாய் தவறி கூறிவிட்டால் என்ன ஆவது?’ என்று அவசரமாக அவனை பார்க்க அவனும் முதலில் ரகுவை கண்டு புருவம் நெறித்து பின் சடுதியில் அவனை அடையாளம் கண்டு கொண்டு 


“நீங்க…. வசீ… இது…” என்று கூற வர தாமதம் அவனின் கைகளை தன் கைகளுக்குள் அடக்கி கொண்டவள்


“வசந்த், இவர் தான் ரகு சார்… நம்ம ஸ்கூல்ல இப்போ மேனேஜ் பண்றதா சொன்னேன்ல.. அது இவர் தான்..” 

அவள் கொடுத்த அழுத்தம் நெற்றியில் முடிச்சு விழ அவளை பார்த்தான் வசந்த். 


“வசீ…” அவன் அவளருகில் மெல்ல ஏதோ கூற வர

“நீ கொஞ்சம் சும்மா இரு வசந்த்…” என்று அவனை அடக்கி விட்டு ரகுவிடம்,


“சார், என்னால இந்த டூர் பாதிலே நிக்க வேணாமே… ஏற்கனவே சொன்ன படி இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பசங்க சுத்தி பாத்துட்டு வரட்டுமே…” என்றாள். 


“நோ மிஸ் வசந்தி.. நேத்து நீங்க இல்ல உங்க இடத்துல யார் இருந்தாலும் என் முடிவு இதுவா தான் இருந்திருக்கும். இப்படி எந்த பிரச்சினையும் வர கூடாதுன்னு தான் நான் டூர் எல்லாம் அரேஞ் பண்றதே இல்ல.. சரி நடந்தது பத்தி எதுக்கு பேசிக்கிட்டு? உங்களுக்கு இப்போ பரவாயில்லையா…?” என்றவன் திரும்பி வசந்திடம்,


“எப்டி போக போறீங்க? நான் வேணும்னா ட்ராப் பண்ணவா?” என்று கேட்டான். 


இதே வார்த்தைகளை அவன் முன்பு ஒரு நாள் தன்னிடம் கேட்டது நினைவில் வர அந்த நாளின் நினைவு அவனுக்கும் இருக்கிறதா? என எண்ணி

“இல்ல என் கார்ல தான் வந்தேன்… ரொம்ப தேங்க்ஸ் உங்க உதவிக்கு..” அட்சு பிசகாமல் அதே பதிலை அவனுக்கு கூறிவிட்டு அவன் முகத்தை பார்க்க 


 அது கடும் பாறையை கொண்டதாய் இருக்கவே திரும்பி வசந்தியை பார்த்தான். 

அந்த நாள் அவன் முகத்தை கூட சரிவர அவள் கண்ட நினைவு இல்லை.. 

ஆனால் ‘எந்த முகத்தை காண வேண்டும் என அவள் விரும்பினாளோ? 

எவன் அவள் காதலுக்கு சொந்தக்காரன்’ என அவள் கூறிக்கொண்டு இருந்தாளோ அவன் அவளின் கண் முன்னே.. 


“இவன் தான் உன் காதலன்” என்று கூற தான் நினைத்தான் வசந்த். 


ஆனால் அவனை கூறவிடாமல் அவள் தடுப்பதாய் தோன்ற 

‘ஒரு வேளை இவன் யார் என இவளுக்கு தெரிந்து விட்டதா?’ என எண்ணினான். 


‘தெரிஞ்சு இருந்தா இது சந்தோஷப்பட வேண்டிய தருணம் தானே.. இதுக்கு ஏன் கண்ணை வடிக்கிறா? எதோ இருக்கு?’

கேள்விகளை மனதில் கேட்டு கொண்டாலும் பதில் அவளிடம் மட்டுமே. 


அதை அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணிய படி “கிளம்பலாமா வசீ?” என்று கேட்டான். 


அவளோ தயங்கியபடி ரகுவை பார்க்க அவளுக்கு அருகில் வந்தான் பாலாஜி. 


“மேம் நீக்க இல்லாம பசங்க எந்த என்ஜாய்மெண்ட்டும் இல்லன்னு சொல்லிட்டாங்க மேம்… தேவையில்லாம குழப்பிக்காதீங்க.. நீங்க கிளம்புங்க.. உடம்பை பார்த்துக்கோங்க..” என்று கூறினான் அவன்.


 அவளும் வேறு வழியில்லை ‘எல்லோரின் விருப்பம் அது என்றால் தனக்கும் பரவாயில்லை..’ என மனதில் நினைத்து கொண்டு காரினுள் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

‘எவ்வளவு சந்தோஷமாக ஆரம்பித்த பயணம்.. 

இப்படியா என் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் அள்ளி கொண்டு செல்ல வேண்டும்?’


விதியை நொந்த படி காரில் இருக்கையில் சாய்ந்து கண் மூடியவள் மனம் அவன் முகத்தில் மட்டுமே நிற்க கண் மூடி அமர்ந்து இருந்தாள்.


சில நிமிடங்கள் இதே மௌனத்தில் கழிய

நத்தையை போல நகர்ந்து கொண்டிருந்த காரை ஓரம் கட்டிய வசந்த் அவளிடம் திரும்பினான். 


“வசீ, ரகு யார் தெரியுமா?” 


அவன் கேட்கவும் அவள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கண்ணீர் வெளியேற அவளின் நாடியை பிடித்து தன் பக்கம் திருப்பினான். 


“சோ.. உனக்கும் தெரியும்.. அப்டி தான?” என்று கேட்க இவள் தலையை ‘ஆம்’ என அசைத்தாள்.


“ஆனா, வசீ இதுக்கு சந்தோஷம் தானே படனும்… அழுகைக்கு என்ன வேலை?” என்று கேட்டான். 


“வசந்த், அவரை நான் விரும்பினேன் உனக்கு தெரியும் தான? ஆனா அவர்…” என்றாள் விம்மியபடி. 


“ஏன் ரகுக்கு என்ன?” புருவ நெறிப்போடு அவன் கேட்க


“அவர் வேற ஒரு பெண்ணை காதலிக்கிறதா உன் கிட்ட சொல்லி இருக்கேனே..” என்றாள். 


“அது மட்டுமா, அந்த பொண்ணு இவரை விரும்பல வேற யாரையோ விரும்புறதாவும் சொன்ன…” என்று தெளிவாக கூறினான்.

 

வசீயின் குணம் அறிந்தவன் அவன் மட்டுமே ஆகவே இந்த சிக்கலின் நுனி கிடைத்து விட்டதாய் எண்ணினான். 


“ப்ச்… அது வந்து…” என்று சலித்து கொள்ள 


“என்ன வசீ, நீ சொன்ன மாதிரி அந்த பொண்ணும் ரகுவை விரும்பி ரெண்டு பேரும் காதலிச்சா நீ உக்காந்து அழுகுறதுல அர்த்தம் இருக்கு.. உன் காதல் தோத்து போச்சுன்னு.. ஆனா அப்டி இல்லையே ரகு இப்போ காதல நினைச்சுட்டு தானே இருக்கார்.. அதும் எப்டி தன்னை விரும்பாத ஒரு பெண்ணை… அப்போ நீ உன் காதலை எடுத்து சொல்லி புரிய வைக்க வாய்ப்பு உண்டு தானே…” என்றான் வசந்த். 


“காதல் ஒன்னும் புரிய வச்சு வர கூடாது வசந்த்… அது தானே வரணும்.. அவர் முகம் கூட பார்க்காம எனக்கு அவர் மேல வந்த மாதிரி அவருக்கு என் மேல வரணும்.. இந்த கொடுப்பின எனக்கு இல்லை… அதனால…” என்று எதையோ கூற வந்தவள் அமைதியாக


“அதனால என்ன மேடம்??? சொல்லுங்க??” என்று அவன் கேட்டான்.

 

‘அவள் என்ன சொல்ல வருவாள்?’ என்பதை புரிந்து கொண்டவன்,

“ரகு இப்படியே கடைசி வரை இருக்க போறது இல்ல வசீ.. எப்டியும் வாழ்க்கையில யாரயாவது கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.. அது ஏன் நீயா இருக்க கூடாது?” என்று கேட்டான். 


“இல்லடா, என் காதல் அவருக்கானது மாதிரி அவரோட காதலும் எனக்கானதா தான் இருக்கணும்.. அவர் மனசுல வேற யாரையோ நினைச்சுட்டு என் கூட வாழ்ந்தா அது வாழ்க்கையே இல்ல…” 


“இந்த சினிமா மாதிரி எல்லாம் பேசாத வசீ… எத்தனை நாளைக்கு உன்னால தனியா வாழ முடியும்… பேச நல்ல இருக்கும்.. ஆனா நடைமுறை அதில்ல வாழ்க்கை… அது நமக்கு பெரிய பிரச்சனைய கொண்டு வரும் தனியா வாழ்ந்தா…”


முடிந்த மட்டும் அவளுக்கு புரிய வைக்க முயன்றான். 

அவள் தான் மூளையை கடன் கொடுத்து இருப்பாள் போலும்.. அவனின் எல்லா பேச்சையும் காதில் வாங்காமல் அசையாமல் கிளிப்பிள்ளை போல பேசி கொண்டிருந்தாள்.


‘இனி இவளிடம் பேசி வீண்… ரகுவிடம் பேசிக்கொள்வோம்..’ என அவன் எண்ணி கொண்டு இருக்க அவன் மனதை படித்தவள் ஆயிற்றே,


“இதை பத்தி இனி வேற யார் கிட்டயும் பேச கூடாது வசந்த்… இது என் மேல.. நம்ம நட்பு மேல ப்ராமிஸ்.. மீறி பேசுனா உன் தோழி உன் வாழ்க்கையில இல்லைன்னு நினைச்சுக்கோ…” என்றாள். 


“வசீ….” பதறினான் அவன். 


‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்? இத்தனை வருட நட்பு… இதை போய்..’ 

வலி மனதில் தைக்க கண்கள் குளமாக அமர்ந்து இருந்தான். 


“என்ன மன்னிச்சுருடா வசந்த்.. என் நல்லதுக்குன்னு நீ ஏதாவது செஞ்சுற கூடாதுன்னு தான் அப்டி சொன்னேன்.. மத்த படி உன்னை காயப்படுத்தி பாக்கணும்னு சொல்லல…” என்றாள். 


அவள் கூறிய வார்த்தைகள் அவனை சமாதான படுத்தவில்லை. 

அமைதியாகவே அமர்ந்து இருந்தான். 


“ப்ளீஸ்டா வசந்த்.. அதான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன்ல… ப்ளீஸ்… என்னை மன்னிச்சுருடா…” என்று அவளும் விழிகளை நீர் மறைக்க துடைத்து கொண்டு கூறினாள். 


ஒரு நீண்ட பெரு மூச்சுடன்,

“சரி வசீ இனி இத பத்தி நாம பேச வேணாம்… நானும் இதை பத்தி யார் கிட்டயும் நானா பேச மாட்டேன்… இது ப்ராமிஸ்.. போதுமா?” என்றான். 


அவளின் தலை பொம்மையாய் அசைந்திட, 

அவள் கைகளை தன் கைகளுக்குள் அழுத்தி கொண்டான். 

ஆதுரமாய் அவன் தோளில் சாய்ந்தாள். 



மறக்க முயன்றும் முடியாமல் அவள் ரகுவை சந்தித்த நினைவுகள் மேலே எழுந்திட அவளின் காதல் நினைவுக்குள் நாமும் பயணம் செய்வோம் வாருங்கள். 



Post a Comment

0 Comments