ஒரு வாரம் பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டிலேயே அடைந்து கிடந்தவள் பின் ஒரு வழியாக அன்று பள்ளிக்கு வந்தாள்.
எப்போதும் போல சீக்கிரமே வந்தவள் கேன்டீன் சென்றாள் எழிலை தேடி.
அங்கு எழிலோடு ஸ்ரீயும் அமர்ந்து கதை பேசி கொண்டிருப்பதை கண்டவள் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
அவள் மனதில் அன்று எழில் கூறியது வந்து செல்ல அன்று ‘தனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று எண்ணி நகர்ந்து செல்ல
இன்றோ தேவையில்லாமல் ஸ்ரீ ரகுவை குற்றம் சாட்டுவதை அதுவும் தன் காதலனை குற்றம் சொல்வதை விரும்பவில்லை.
‘முன்பானால் இது அவர்கள் பிரச்சினை.. இப்போதோ இது என்னவனின் பிரச்சினை..’ என்று கூறியது
ஆகவே ஒரு முடிவோடு ஸ்ரீயை நெருங்கினாள்.
வசீயின் வருகையால் புன்னகை பூத்த முகமாய் இருவரும் அவளை பார்க்க
எழில் அவளுக்கு விருப்பமான டீயை கலக்க சென்றான்.
“ஹாய் ஸ்ரீ, எப்டி இருக்க? படிப்பெல்லாம் எப்டி போகுது?” என்றாள்.
“நல்ல போகுது வசீ…” என்றான்.
“ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தீங்க ரெண்டு பேரும் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றாள்.
அவனோ, கல்லூரியில் நடந்த பேச்சுவார்த்தை பற்றி எடுத்து கூறினான்.
அதற்குள் எழில் வர அவன் கொடுத்த டீயை வாங்கி கொண்டவள் திரும்பி ஸ்ரீயை பார்க்க அவன் கண்ணாடி குடுவையில் இருந்த சிறு இனிப்பை எடுத்து வாய்க்கு கொண்டு சென்றான்.
வசீயோ சட்டென்று அவன் கையில் இருந்த இனிப்பை பிடுங்கி தன் வாயில் வைக்க செல்ல எழிலோ அவளை விசித்திரமாக பார்த்தான்.
ஸ்ரீயோ, அவளின் செய்கையில் சிரித்து விட்டு மற்றொரு இனிப்பை எடுத்து கொள்ள இவ்ளோ மீண்டும் தன் கையில் இருந்ததை அவனிடம் நீட்டினாள்.
“பரவாயில்ல வசீ, நீங்க சாப்பிடுங்க.. நான் வேற ஒன்னு எடுத்துக்குறேன்.. எழில் நம்ம கிட்ட காசா வாங்க போறான்?” என்று பெரியதாய் சிரிக்க
அவளும் சிரித்தவாறே,
“பெரிய மனசு தான் உங்களுக்கு.. உயிரில்லாத இனிப்பா இருக்க போய் எனக்கு விட்டு கொடுத்துட்டீங்க.. இதுவே உயிருள்ள பூரணியை உங்க அண்ணாக்கு விட்டு கொடுக்க அவ்ளோ கோபம்…” என்று சட்டென்று கூறிவிட்டாள்.
அவள் அப்படி திடீரென கூறுவாள்!! என எதிர்பாராத இருவரும் அதிர்ச்சி அடைந்தபடி அவளை பார்க்க
ஸ்ரீயோ எழிலை முறைத்தான்.
“அவன் மேல கோவம் வேண்டாம் ஸ்ரீ.. நான் கேட்க போய் தான் சொன்னான்..அதுவும் என் கிட்ட சொல்லும் விஷயம் மூணாம் நபர் கிட்ட போகாதுன்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கு...” என்று அவனுக்கு பரிந்து வந்தாள்.
ஸ்ரீயோ சில நொடிகள் அமைதியாக அமர்ந்து இருந்தான். எப்போ
பின் ஒரு நெடு மூச்சுடன்,
“நீங்க சொல்ற மாதிரி உயிருள்ள உயிரில்லாதன்னு எதுவும் இல்லை இதுல… சொல்ல போனா நான் எப்போ பூரணியை விரும்பினேன்னு எனக்கே தெரியாது.. அவள் மேல இருக்க என் காதலை உணரும் போது வீட்டுல எல்லாரும் அவளை ரகுவுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சுட்டாங்க… அதை ஏத்துக்கவும் முடியல தடுக்கவும் முடியல… அவ்ளோ தான்..” என்றான்.
“அவ்ளோ தானா?? ஒரு இனிப்பு அதுவும் எனக்கு தேவையில்லாத இனிப்பு அதை நான் பிடுங்கி சாப்ட்டேன்கிறதுக்காக என் மேல கோவம் வருமா உங்களுக்கு?” என்றாள்.
அவனோ பதில் கூறாமல் அமைதியாக இருந்தான்.
எழிலும் எதுவும் பேசவில்லை.
வசீ சரியான முறையில் அவனிடம் எடுத்து வைப்பதாக பட்டது.
ஆகவே அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான்.
“உங்க கிட்ட இருந்த இனிப்ப பிடுங்கி நான் எழில் கைல கொடுத்தா நீங்க ஆசைப்பட்ட இனிப்பை சாப்டான்னு அவன் மேல கோவப்படுவீங்களா? இல்லை கொடுத்த என் மேல கோவப்படுவீங்களா? தப்பே செய்யாத அவனும் உங்க அண்ணாவும் ஒன்னு தான? உங்க கோவம் சிறுபிள்ளை தனமா உங்களுக்கு படல? அதுவும் உங்க அண்ணாக்கு வேற ஒரு பெண்ணு மேல காதல் இருக்கும் போது சம்மந்தமே இல்லாம பூரணியை வச்சு அவரை குறை சொல்றது தப்பில்ல??”
நிறுத்தி பொறுமையாக அவள் கூற இங்கு ஸ்ரீயும் சரி,
திடீரென அவளை நெடு நாள் கழித்து சந்தித்த ரகுவும் நலம் விசாரிக்க கேன்டீன் வந்தவனும் சரி பிரமை பிடித்தவர்களாய் நின்றனர்.
ஆம், ரகுவிற்கு இது புதிது
பூரணியை திருமணம் செய்து கொள்ள சொல்லி தந்தை கேட்டு கொண்டே இருந்தாலும் தன்னால் அவளை அந்த நிலையில் வைத்து பார்த்திர முடியாததால் அவரின் சொல்லுக்கு செவி கொடுக்காமல் இருந்தான்.
ஆனால் ஸ்ரீ??
‘அவன் மனதில் பூரணி இருப்பாள்’ என கனவிலும் நினைக்கவில்லை..
தன் காதலில் மட்டுமே மனதை செலுத்தி கொண்டு இருந்தவன் தம்பியின் மனதை படிக்க தவறி போனான்.
இதோ இப்போது வசீ கூறவுமே அவனுக்கு விளங்கிட..
தன் தவறை உணர்ந்த மறுகணம் அதை சரி செய்யும் பொருட்டு அடுத்த வேலையில் இறங்கி இருந்தான்.
இங்கு ஸ்ரீயோ வசீ சொல்வதை கேட்டு அதிர்ந்தபடி,
“வசீ, நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு எப்டி தெரியும்?” என்றான்.
அவனுக்கும் புதிது தான் அண்ணனின் இந்த காதல் பக்கம்.. அதுவும் ‘காதல் தோல்வியா?? இன்னமும் அந்த பெண்ணை நினைத்து கொண்டு இருக்கிறானா?’ என்ற எண்ணம் தோன்றியது.
“எனக்கு தெரியும் ஸ்ரீ.. சொன்னவங்க பேரை விட சொன்ன விபரம் தான் ரொம்ப முக்கியம் இங்க… உங்க அண்ணா ஒரு பொண்ணை விரும்பி இருக்கார் ஸ்ரீ.. ஆனா அந்த பொண்ணு இவரை விரும்பல போல… ஆனா இன்னும் அவர் நினைப்பா தான் வாழ்ந்துட்டு இருக்கார்.. பூரணி மேல அவருக்கு அப்டி எந்த ஒரு விருப்பமும் இல்ல.. அப்டி இருக்கும் போது உங்க கிட்ட இருந்து உங்க காதல பிரிச்சுட்டதா அவர் மேல கோபப்படுறது.. அது சரியா சொல்லுங்க?” என்றாள்.
அவனுக்கு ‘இப்படியிருக்கும்’ என்று தெரியாது..
ஏன் வசீயே கூறுவது போல தவறே செய்யாமல் அவன் மேல் தன் கோபத்தை காட்டியது அவனையே குற்றம் சாட்டியது.
‘அதிலும் தான் எப்படி காதல் கைகூடாதோ? என்ற கவலையில் இருந்து வந்தோமோ அதையே அனுபவித்து வந்திருக்கிறானா? என் அண்ணா?’
அவன் மனம் ரகுவிற்காய் இரக்கம் கொண்டது.
“யார் அந்த பொண்ணு வசீ? உங்களுக்கு தெரியுமா?” என்றான்.
அவளோ ‘இல்லை’ என்பதாய் தலை அசைத்தாலும் முயன்று அடக்கிய கண்ணீர் சிறு சொட்டு அவள் விழிகளில் தேங்கிட அவளை புருவம் நெறிய பார்த்தான்.
காதலை அனுபவித்து வருபவர்களுக்கே அதன் சாராம்சம் விளங்கும்.
அவள் விழிகள் ஸ்ரீயிடம் எதையோ உணர்த்த ‘அதை பற்றி அவளிடம் தனியே பேசி கொள்வோம்’ என அமைதியாகி விட்டான்.
அவரவர் தம் சிந்தனையில் இரண்டு நாட்கள் கழிய
அன்று செல்வம் விஜயனை காண வந்திருந்தார்.
“என்ன விஜி உடம்பு எப்டி இருக்கு? ஒழுங்கா மருந்து மாத்திரை எடுக்கிறியா?” என்றார்.
“வாடா, இப்போ தான் இந்த வீட்டு வழி உன் மண்டைக்குள்ள உதிச்சுதா? நான் இருக்குறது இருக்கட்டும்.. நீ எப்டி இருக்க? தங்கச்சி பூரணிய கூட்டிட்டு வரலாம் தான?” என்று விஜயன் கேட்டார்.
“வழி தெரியாம என்ன அதெல்லாம் தெரியும்.. கொஞ்சம் ஸ்கூல் வொர்க்ல பிஸி அதான் வர முடியல.. இன்னோரு நாள் அவங்கள கூட்டிட்டு வரேன்.. ரகு ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் வீட்டுக்கு வாங்க சொன்னான்.. எங்க அவன்?” எனும் போதே ஸ்ரீ வர
“வாங்க அங்கிள்..” என்று வரவேற்று விஜயன் அருகில் அமர்ந்தான்.
“என்ன ஸ்ரீ? ஸ்கூல்ல கேன்டீன் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுதா என்ன? அப்டியே ஆபிஸ் வர வந்து போகலாம் தானே?” என்று அவனிடம் கேட்க அவன் வெறுமனே சிரித்து கொண்டான்.
“இது கடைசி வருஷம் தானே ஸ்ரீ? அடுத்தது என்ன சொன்ன மாதிரி எழில் கூட தொழில் தொடங்க போறியா?” என்று கேட்டார்.
அவனும் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்து தொழில் பற்றிய விவரங்களை எடுத்து சொல்லி கொண்டு இருக்க ரகுவும் வந்து சேர்ந்தான்.
“வாங்க அங்கிள்.. வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என்றபடி.
“இல்லைடா இப்போ தான் வந்தேன்.. என்ன ரொம்ப முக்கியமான விஷயம்? ஸ்கூல் பத்தினா அதை அங்கயே வச்சு பேசி இருக்கலாமே?” என்று அவர் கேட்கவும் ஸ்ரீயை ஓர் நொடி பார்த்தவன்,
“இது ஸ்கூல் பத்தி இல்ல அங்கிள்.. பூரணி கல்யாணம் பத்தி.. அதான் இங்க வர சொன்னேன்..” என்கவும்
விஜயனுக்கு சந்தோஷம் தாளவில்லை.
‘தன் புலம்பலுக்கு ஒரு வழியாக மகன் இறங்கி வந்தான்’ என்ற சந்தோஷத்தில் அவர் இருக்க,
செல்வமோ அவன் பேச்சில் இருந்த பூடகத்தை புரிந்து கொண்டு ‘என்ன?’ என்பதாய் அவனை பார்த்தார்.
“பூரணி கல்யாணம் பத்தியா?” என்று அவர் யோசனையில் கேட்க
அவர் யூகித்து விட்டதை மெல்லிய உதட்டசைவில் உணர்த்தியவன்,
“ஆமா அங்கிள், நம்ம பூரணிக்கும் ஸ்ரீக்கும் கல்யாணம் பண்றத பத்தி பேச தான் வர சொன்னேன்..” என்று பட்டென்று போட்டு உடைக்கவும்
விஜயனும் செல்வமும் ஒரு சேர அதிர ஸ்ரீயின் நிலையை எடுத்து கூறுவதும் சாத்தியமா?
அவன் ரகுவை விழி விரித்து பார்க்க அவனை பார்த்து புன்னகைத்தவன்,
“உன் சந்தோஷத்துக்கு நான் எப்போடா தடையா இருந்துருக்கேன்…” என்றான்.
அவ்வளவு தான் கண்கள் கண்ணீரோடு மன்னிப்பையும் வேண்டிய படி தமயனை இறுக அணைத்து கொண்டான் ஸ்ரீ.
“சாரி அண்ணா, என்னை மன்னிச்சுறு… எனக்கு… நான் தப்பா…” திக்கி திணறி அவன் கூற ரகுவோ,
“விடு ஸ்ரீ… எதுவுமே தெரிஞ்சு நடக்கலை.. அதனால அதை பத்தி பேசுறத விட்டுட்டு ஆக வேண்டியதை பேசுவோம்..” என்றான்.
பின் பிரமையில் சிலையாய் இருந்த இருவரிடமும்,
“அப்பா, அங்கிள் உங்க முடிவ சொல்லுங்க? உங்களுக்கு இதுல சம்மதமா?” என்று கேட்டான்.
விஜயனோ, தன் மகன்கள் இருவரையும் பார்த்தார்.
அவருக்கு ஸ்ரீயின் நிலை சரியாக விளங்க அவனை அருகில் அழைத்து,
“நீயும் என் மகன் தானேடா.. ஒரு பையனுக்கு நல்லது நினைக்க போய் இன்னொருத்தன காயப்படுத்த பாத்தேனே? நீயாவது என் கிட்ட சொல்லி இருக்கலாம் தானே?” என்கிறார் இயலாமையை மறைத்தபடி.
“அப்பா..” என அவரின் கைகளை பற்றி கொண்டவன் பதில் கூற முடியாமல் திணறினான்.
ஆனாலும், தந்தையாய் அவர் மூத்த மகனை நினைத்து வருந்தியவர்,
“அவன் நிச்சயம் இருக்கட்டும் ரகு, உன்னை பத்தி சொல்லு? நீ என்ன பண்ண போற? அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு நிச்சயம் கல்யாணம் எல்லாம் பண்ணா நல்ல இருக்குமா?” அவர் கேட்க உறுதியாக வந்தது அவனிடம் இருந்து.
“அப்பா, ஸ்ரீக்கு பூரணியை பிடிச்சு இருக்கு.. பூரணிக்கும் ஸ்ரீயை பிடுச்சு இருந்தா அடுத்த வேலையை பார்ப்போம்.. என் தனிப்பட்ட விஷயத்துல யார் என்ன சொன்னாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை.. எனக்கு என் குடும்பம் நீங்க மட்டும் போதும்ப்பா.. இது தான் எனக்கான வாழ்க்கை..” என்று கூறிட
விஜயனோ, “ரகு.. நான் என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கேளு? உனக்கு யாரையாவது பிடிச்சு இருந்தா சொல்லு ரெண்டு பேருக்கும் ஒன்னா ஒரே மேடையில கல்யாணம் பண்ணிடுவோம்.. அதை விட்டு அவனுக்கு மட்டும் செய்ய சொல்றது சரியில்லை..” என்றார்.
“ஸாரி அப்பா.. என் முடிவ நான் சொல்லிட்டேன்.. இதுக்கு மேல இத பத்தி பேசாம மத்த வேலையை பாப்போம்..” என்று கூறி எழுந்து சென்று விட்டான்.
ஸ்ரீயும் ஏதும் கூறாமல் எழுந்து கொண்டான்.
தனித்து விடப்பட்ட விஜயனோ,
“இவனை மட்டும் என்னால புரிஞ்சிக்க முடியல செல்வா..” என்று புலம்ப அவரோ அமைதியாக இருந்தார்.
“என்னடா நீ என்ன சொல்ல போற?” என்று விஜயன் கேட்க
“முதல்ல நீ என்னை மன்னிக்கணும் விஜி.. இதை எப்டி உன் கிட்ட சொல்ல? ஆரம்பத்துல நாம ரகுவுக்கு பூரணிய கொடுக்கிறத பத்தி பேசுனோம் உண்மை தான்.. ஆனா?” என்று இழுத்தவர்,
“என்ன ஆனா?” என்று அவர் கேட்கவும் முதலில் தயங்கி ரகு ஒரு பெண்ணை காதலித்தது முதல் அவள் வேறு ஒருவனை விரும்புவது வரை கூறிவிட்டு அந்த பெண்ணை மறக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கும் ரகுவின் நிலையை எடுத்து கூறினார்.
“இவ்வளோ நடந்து இருக்காடா? நீயும் என் கிட்ட சொல்லாம மறச்சுட்டல்ல?” என்று ஆதங்கத்தை கொட்டினார்.
“அப்படியில்லை விஜி, அந்த பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாது.. தவிர இதை பத்தி இனி பேசுறதால எதுவும் மாறாது அதனால தான் ரகு பத்தி உன் கிட்ட எதுவும் சொல்லல.. நீ கல்யாண பேச்சை எடுக்கும் போது கூட ரகுவா மனசு மாறி சம்மதம் சொன்னா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கணும் நினைச்சுட்டு இருந்தேன்.. அப்டி இருக்கும் போது முடிஞ்ச கதையை பத்தி எப்டி பேசுவேன் சொல்லு?” என்றார்.
“அதில்லடா, இது எதுவுமே தெரியாமலே நான் பாட்டுக்கு பூரணிக்கு ரகுவை கல்யாணம் பண்றத பத்தி பேசி இப்போ உன் பொண்ணு மனசுலயும் ஏதாவது இருக்குமோன்னு பயமா இருக்குடா.. ஆசை காட்டி மோசம் செஞ்சுட்டமோன்னு தோணுது..” என்றார்.
“நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல விஜி, எப்போ எனக்கு இந்த விஷயம் தெரியுமோ அப்போவே என் பொண்ணு கிட்ட ரகுவை பத்தி எல்லாம் சொல்லிட்டேன்.. இனி உன் விருப்பம் தான்மா.. என்ன செய்ய போறன்னு கேட்டதுக்கு.. அவளுக்கும் பெருசா ரகு மேல எந்த ஈடுபாடும் கிடையாது.. பெரியவங்க எல்லாருக்கும் என்ன சம்மதமோ அதே எனக்கும் சரின்னு சொல்லிட்டாடா…” என்றார்.
“இந்த கால பிள்ளைங்க எல்லாம் தெளிவு தான்… நாம தான் பழைய பஞ்சாங்கம் படிக்கிறோம் போல..” என்று சிரித்து கொண்டே கூற
“அதுவும் நல்லது தான்டா.. நம்ம பழக்க வழக்கம் சின்னவங்களை காயப்படுத்தாத வர.. அதை தான் இப்பவும் சொல்றேன்.. ரகுவா இறங்கி வந்தா மட்டும் அவன் கல்யாணத்தை பத்தி பேசு.. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க நினைக்காத.. உன் ஆறுதலுக்காக இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் அவன் தான் கஷ்டப்படனும்.. அதனால யார் என்ன சொன்னா நமக்கென்ன? காலம் மாறும்னு நம்பு.. ரகு சீக்கிரமே சூழலுக்கு ஏற்ப மாறுவன்.. முன்ன விட இப்போ அவன் எவ்ளோவோ மாறி இருக்குறது உனக்கே தெரியுது இல்லையா?? இன்னும் காலம் இருக்கு.. வெயிட் பண்ணு.. நல்லது நடக்கும்” என்றார் செல்வம்.
அவர் கூறியது போலவே ரகுவின் வாழ்வில் நல்லது நடக்குமா??
0 Comments