உலகின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் குத்தகைக்கு எடுத்தவன் போல துள்ளளோடு வந்தான் ஸ்ரீ.
“ஹாய் வசீ, மே ஐ கமின்?” என்று கேட்க
ஸ்டாப் ரூமில் அமர்ந்து இருந்த வசீயோ புன்னகையோடு அவனை பார்த்து,
“ என்ன அதிசயம்? சார் ஸ்டாப் ரூமுக்கெல்லாம் வந்து இருக்கீங்க?” என்றாள் கேலியாக.
அவள் கேலியில் அவனும் சிரித்தவாறே,
“வாட் டூ யூ மீன்.. நானெல்லாம் இங்க வரக்கூடாதுன்னு சொல்ல வரீங்களா?” என்றான்.
“ அய்யயோ, இது உங்க ஸ்கூல்.. நீங்க எங்க வேணா வரலாம்.. எங்க வேணா போகலாம்.. எங்க வேணா பாய் போட்டு படுக்கலாம்.. யார் கேட்பா? ஆனா இந்த சந்தோஷ சிரிப்புக்கு பின்னாடி என்ன காரணம்னு மட்டும் நான் கேட்பேன்?” என்றாள்.
அவளோடு சேர்ந்து சிரித்தவன்,
“வர சண்டே ஈவினிங் ஷார்ப் 5 ஓ க்ளாக்.. உங்க எல்லா வேலையும் ஒதுக்கி வச்சுட்டு எங்க வீட்டுக்கு வரணும்..” என்றான்.
அவளோ அதிர்ந்து போய், “என்ன சொல்றிங்க ஸ்ரீ? எதுக்கு?” என்று கேட்டாள்.
“அன்னிக்கு தானே எனக்கும் பூரணிக்கும் நிச்சயதார்த்தம்.. சொல்ல போனா இது நடக்க காரணமே நீங்க தான்.. நீங்க கண்டிப்பா வந்தே ஆகணும்..” என்றான்.
அவன் கூறுவதை கேட்டவளுக்கோ சந்தோஷம் தாளவில்லை.
“ஹேய், கங்க்ராட்ஸ் மேன்..” என்று கூற
அவனும் புன்னகையோடு “தேங்க்ஸ்” என்றான்.
“சொன்னது நியாபகம் இருக்கட்டும் வசீ, மறக்காம வந்துருங்க.. உங்களை நான் ரொம்ப எதிர்பார்ப்பேன்..” என்றான்.
அவளோ தயக்கத்தோடு,
“வந்து.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு ஸ்ரீ… நான் எப்டி அங்க.. எனக்கு…” ஏதேதோ கூறிட
“இல்லை மிஸ்.வசந்தி.. நீங்க கண்டிப்பா வரணும்..” என்று ரகுவும் கூற இருவரும் திரும்பி பார்த்தனர்.
“அப்டி சொல்லுடா அண்ணா.. உங்க தலைவர் சொல்லிட்டார் மறுக்க கூடாது.. கண்டிப்பா வரணும்.. நம்ம ஸ்கூல்ல இருந்து எல்லாருக்கும் இன்வைட் போய் இருக்கு.. எந்த வொரியும் பண்ணாம கூலா கிளம்பி வாங்க வசீ.. ஓகே?” என்க
மறுக்கமுடியவில்லை அவளுக்கு.
வருவதாய் தலையசைத்தாள்.
இங்கு வசந்தும் அதையே தான் கூறினான்.
“போயிட்டு வா வசீ..” என்று.
“அதில்லடா.. ஸ்டாப்ஸ் எல்லாரும் நைட் டின்னர்க்கு வரதா சொல்லிட்டாங்க.. ஸ்ரீ என்னை ஃபங்க்ஷனுக்கே வர சொல்றாங்க?” என்று அவள் தயங்க
“இதுல என்ன இருக்கு போயிட்டு வர வேண்டி தான?” என்று அவன் கேட்க
“எனக்கு அங்க அவ்ளோவா யாரும் பழக்கம் இல்லயடா.. எப்டி போகன்னு யோசிக்கிக்கிறேன்..” என்றாள்.
“அடிப்பாவி, அங்க உனக்கு ஸ்ரீய தெரியும்.. செல்வம் சார தெரியும்.. எழிலை தெரியும்… இவ்ளோ ஏன் ரகுவை ரொம்….ப தெரியும்..” என்று அவன் ராகம் பாட இவள் பல்லை கடித்தாள்.
“ போன்ல அடிக்க முடியாதுன்னு நக்கல் பண்றியா மல கொரங்கு..” என்றபடி.
“தெரியுதுல.. பின்ன என்ன பேச்சு வேண்டி கிடக்கு ஒழுங்கா போய் விழாவ சிறப்பிச்சுட்டு வா..” என்றான்.
அவளும் “ சரியென” கூறிவிட்டு மேலும் சிறிது நேரம் அவனோடு பேசி கொண்டு பின்,
“நீ எப்போ ஊருக்கு வர?” என்று கேட்டாள்.
“திங்கள் கிழமை வரேன்..” என்று கூறினான்.
இருவரும் மீண்டும் சில நிமிடங்கள் தம் அன்றைய நிகழ்வுகள் பற்றி பேசி தீர்த்து விட்டு உறங்க சென்றனர்.
கடல் அலைகளை போல நாட்களும் மெதுவாய் நகர்ந்து நிச்சய நாளும் வந்தது.
அந்த வீட்டின் பிரம்மாண்டத்தை விழி விரிய பார்த்தவள் பார்த்தபடி நிற்க வாயிலில் நின்று கொண்டிருந்த ஸ்ரீ அவளிடம் வந்தான்.
“ஹாய் வசீ, வாங்க வாங்க…” என்று வரவேற்று வீட்டினுள் அழைத்து செல்ல ஹாலில் அமர்ந்திருந்த விஜயனிடம்,
“அப்பா நான் சொல்லி இருக்கேன்ல வசீ.. நம்ம ஸ்கூல் நியூ ஜாயின்.. அது இவங்க தான்..” என்று அறிமுக படுத்த அவள் அவரை கண்டு ஸ்நேகமாக சிரித்தாள்.
“வணக்கம் சார்.. எப்டி இருக்கீங்க?” என்று.
“நல்ல இருக்கேன்மா உன் பேர்?”
“வசீ சார், வசந்த நிலா..” என்றாள்.
“நல்ல அழகான பேர்..” என்று கூறி ஸ்ரீயிடம் “குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லு” என்று கூறினார்.
“இருக்கட்டும் சார் அப்புறமா பார்த்துக்கலாம்…” என்று கூறியவள்,
“உங்க வீடு ரொம்ப அழகாக பார்க்க ரம்யமான உணர்வுல இருக்கு சார்..” என்று சிலாகித்து கூற அவரோ ஸ்ரீயிடம் வீட்டினை சுற்றி காட்ட சொல்லி பணித்தார்.
முதலில் அவள் தயங்க “அட வாங்க வசீ, ஃபங்ஷன் நடக்க வரை ஒரே இடத்துலயா இருக்க போறீங்க சும்மா அப்டியே ரவுண்ட் அடிச்சுட்டு வருவோம் வாங்க..” என்று அழைத்து சென்றான்.
வெளி முகப்பை காட்டிலும் வீட்டின் உள் அமைப்பு மிக நேர்த்தியாக ரசனையை வாங்கி கட்டபட்டிருந்தது.
கீழ் தளம் சமையல் அறை, பூஜை அறை, விருந்தினர் அறை கொண்ட நீண்ட வரவேற்பு அறையும் கூடவே விஜயன் தங்கும் அறையும் இருக்க
மேல் தளத்தில் மூன்று அறைகள் இரண்டு ரகுவுக்கும் ஸ்ரீக்கும்.
ஸ்ரீயின் அறையை அடுத்த ரகுவின் அறை.
இருவரின் அறைகளும் பார்க்க ஒன்று போல இருந்தாலும் ரகுவின் அறையில் இணைப்பாக ஓர் அறை.
அது தவிர்த்து இரு அறைகளிலும் பால்கனி தோட்டத்துடன் கூடிய குளியலறை கொண்ட நீண்டது தான்.
ரகுவின் அறையை அடுத்த ஓர் அறை கதவின் அருகில் வந்தனர்.
“இது ரகுவோட ஸ்பெஷல் ரூம்.. பொதுவா அவன் எல்லா நேரமும் இருக்குறது இங்க தான்…” என்றான் ஸ்ரீ.
“ஏன் அப்டி என்ன இருக்கு ஸ்பெஷலா?” என்று அவள் கேட்க
“போய் பார்த்தா தெரிஞ்சுடும்..” என்று ஸ்ரீ சிரித்தான்.
“அய்யயோ நீ வேற.. ஸ்பெஷல் ரூம் சொல்ற.. அவங்க பெர்சனல் ஏதாவது இருக்கும்.. அப்படியெல்லாம் போக கூடாது..” என்றாள்.
“ஹாஹா.. வசீ, இந்த வீட்டை பொறுத்த வரைக்கும் இதை அவனுக்கு சொந்தம்.. இதுல நமக்கு அனுமதி இல்ல.. அப்டின்னு எந்த ரூல்ஸ்சும் கிடையாது.. அது ரகுவுக்கு சுத்தமா பிடிக்கவும் பிடிக்காது.. தைரியமா வாங்க.. “ என்று அழைத்து சென்றான்.
அந்த அறை அவளை அழகாய் அழைத்தது.
சுற்றிலும் வண்ண ஓவியங்கள்.. ஒவ்வொரு ஓவியமும் அத்தனை மெருகோடு ஆயிரம் கதை சொல்ல.. அனைத்தையும் விழிகள் விரிய பார்த்தாள் வசீ.
அங்கு அவர்களுக்கு முன்பாகவே வந்திருந்த ரகு இருவரையும் பார்க்க,
“நீ இங்க தான் இருந்தியா?” என்று ஸ்ரீயின் குரலில் ஓவியத்தில் இருந்து பார்வையை எடுத்து அவனை பார்த்தாள்.
அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.
“வாங்க.. வசந்தி..” என்று அழைக்க அவன் அழைப்பை தலையசைத்து வாங்கி கொண்டாள்.
மீண்டும் அவள் பார்வை அறையை சுற்றி வட்டமிட அவள் பார்வையை புரிந்து கொண்ட ஸ்ரீ, “இது எல்லாமே ராகுவோட கைவண்ணம்..” என்கவும் இவளுக்குள் ஆச்சரியம்.
“என்ன நிஜமாவா?” என்றாள் அதே ஆச்சரியம் கலந்து.
அவனும் மென் நகையுடன் ‘ஆம்’ என்பதாய் தலையை அசைத்தான்.
அவளும் வரைவாள் தான் ஆனால் ‘இதோ இந்த அளவிற்கு செருக்கோடு வரைவாளா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்பாள்.
அத்தனை அழகாக பார்வையை தன்னை விட்டும் திரும்பிட செய்ய முடியாத அளவிற்கு ஒவ்வொன்றும் இருந்தது.
“உங்களுக்கு நல்ல ரசனை தான்..” என்றாள் பாராட்டாக.
“இது மட்டும் இல்ல… க்ளாஸ் சண்ட் ஆர்ட் (glass sand art) சொல்லுவாங்க தெரியுமா? ஒரு வொயிட் கண்ணாடி போர்ட்ல மணல் வச்சு வரைவாங்களே.. அது இவனுக்கு ரொம்ப பிடிச்சது.. அதுல இவனை அடிச்சுக்க ஆள் கிடையாது.. அப்டியே கண் முன்னாடி தத்ரூபமா வரைவான்..” என்றான் ஸ்ரீ.
“ஸ்ரீ.. அடக்கி வாசி… அப்படியெல்லாம் இல்ல வசந்தி… பொதுவா எது நமக்கு ரொம்ப பிடிக்குமோ அதை நாம ரசிச்சு செய்வோம்.. நாம ரசிச்சு செய்ற எந்த ஒரு செயலும் அழகா தான் இருக்கும்.. எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.. அவ்ளோ தான்.. மத்த படி என்னை விட திறமையானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க..” என்றான்.
“ஆனா, இது கூட ஒரு தனி கலை தானே.. இது எல்லாருக்கும் கிடைக்கும்னு சொல்ல முடியாதே..” என்று கூறியவள்,
“உண்மையிலே உங்களுடைய இந்த பக்கம் ரொம்ப வித்தியாசமாவும் ரொம்ப அழகாவும் இருக்கு ரகு சார்..” என்று மனதில் பட்டதை அப்படியே கூற அவன் நன்றியாக சிரித்தான்.
அதற்குள் வேலையாட்களுள் ஒருவன்,
“ஸ்ரீ தம்பி, உங்களை பெரிய அய்யா கூப்ட்டாங்க.. ரெடியாகனுமாம்..” என்று கூற ஸ்ரீயும்,
“நீங்க பேசிட்டு வாங்க.. நான் போய் ரெடியாகுறேன்..” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
தனித்து விடப்பட்ட இருவரும் வேறென்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க மெல்ல நடந்து ஸ்ரீ கூறிய அந்த கண்ணாடி பலகையின் அருகே வந்தாள்.
மெலிதாய் அதை வருடி கொடுத்தவள் திடீரென அவனிடம்,
“நந்தன், எனக்காக இதுல நான் சொல்றது வரைஞ்சு காட்ட முடியுமா?” என்று பட்டென்று கேட்டாள்.
கேட்ட பின்பே தன் அதிக பிரசங்கி தனத்தை எண்ணி தன்னையே கடிந்து கொண்டாள்.
இங்கு இவன் நிலையும் கேட்க வேண்டுமா?
இதழ் குவித்து இமை சுருக்கி கைவிரல்களை கோர்த்து அவள் கேட்ட தோரணையில் மறுக்கவும் முடியுமா? மறுக்க தான் தோன்றுமா??
மெல்ல நடந்து வந்தவன் அறையின் விளக்கை அணைத்து விட்டு அந்த கண்ணாடி பலகையில் மட்டும் பொருத்தி இருந்த சிறு விளக்கை ஒளிர செய்தான்.
அருகில் குடுவையில் இருந்த மணல்களில் கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு கண்ணாடி பலகையில் லேசாக வீசும் தென்றலை போல இதமாக தூவி அவளின் விடைக்காக காத்திருந்தான்.
அவளும் அவன் செய்கைகளை கண்டு வந்தவள் அவன் காத்திருப்பதை உணரவும் கண் மூடி கூறினாள்.
“பெண் ஒருத்தி ஆற்றங்கரை மேடையில் கயிற்றில் கட்டிய ஊஞ்சலில் ஆடிக் கொண்டே வானத்து சொத்தான நிலவிடம் கதை பேசினாள்.”
அவள் கூறி முடித்த காட்சியை அட்சர சுத்தமாக உள் வாங்கியவன் மனதினுள் அந்த காட்சிகள் விரிய அதற்கு மணலில் உயிர் கொடுத்தான்.
இரு கைகளையும் அங்கும் இங்கும் என சரசரவென கொண்டு சென்று அடுத்த சில நிமிடங்களில் அவள் கூறிய சித்திரத்தை வரைந்து முடித்தான்.
அவன் வரைந்த சித்திரத்தை விழி நகர்த்தாமல் பார்த்து கொண்டிருந்தாள்.
பின் அவனிடம், “திடீரென வீசும் சூறை காற்றில் ஊஞ்சல் கயிறு அறுபட்டு பெண் இவள் ஆற்றில் சரிகிறாள்..” என்று கூறவும்
முதல் சித்திரத்தில் இருந்த சந்தோஷ தருணம் மாறி இப்போது கொஞ்சம் புருவ நெறிப்போடு அவள் கூற்றினை கேட்டு கொண்டான்.
சித்திரம் என்பதை உவமையாக கொண்டாலும் அது உருவக படுத்தும் உண்மை நிலையின் பொருள் என்னவென்றால்?
முதல் காட்சி வசீயின் வாழ்க்கை ஆற்றங்கரையில் ஊஞ்சல் கட்டி ஆடும் பெண் மங்கை போல சந்தோஷ சாரலாக இருக்கும் நேரம் டெல்லி சம்பவம் அவள் வாழ்க்கையில் வீசிய சூறை காற்று என சித்திர மொழியில் கூறினாள்.
அவள் சொல் படியே அடுத்த சித்திரம் வரைந்தவன் அவளின் அடுத்த வார்தைக்காக காத்திருக்க அவளும் கூறினாள்.
“விழும் பெண் அவள் சுழலில் மாட்டி கொள்ளும் நொடி துடுப்பு வீசி வந்த படகின் காவலன் அவளின் கைகளை பிடித்து சுழலில் இருந்து காப்பாற்ற முனைகிறான்..”
அவள் கண்கள் சிவந்து போய் இருந்தது இப்போது.. விழிகள் “எந்நேரமும் தன் கரையுடைப்பேன்” என்று சொல்லாமல் சொல்வதாய் இருக்க
அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் குறித்து கொண்டவன் சித்திரத்தில் தவறாது அவள் கூறிய காட்சிகளை கொண்டு வந்தான்.
அவளோ, அடுத்ததாய் “தன்னை காப்பாற்றிய காவலன் முகத்தை பார்க்க துடிக்கும் அவளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம்.. காரணம் அவன் முகம் திரையிட்டு இருக்க அவளோ அவனது திரை விலக்க முயலும் நேரம் படகு கரையை அடைந்த நொடி அவன் காற்றில் கரைகிறான்..”
இது வரை அவள் கூறியவற்றை எல்லாம் கிளிப்பிள்ளை போல வரைந்தவனுக்கு அடுத்த சித்திர காட்சியை அவள் சொல்லவும் புருவங்கள் கேள்வியாக நெறிந்தது.
‘இந்த சித்திரத்தின் சாராம்சம் என்ன?’ என்று எண்ணமிட்டான்.
ஆனாலும் ஏதும் பேசாமல் அவள் கூற்றை வரைந்து முடிக்க அவள் கூறினாள்.
“கரையை அடைந்தவளோ காற்றில் மாயமானவனை தேடி தோற்று கைகளால் முகம் மூடி அழுது கரைந்தாள். அவள் குரல் அவன் செவியை எட்டி செல்ல கண் மூடி அழுதவளின் தோள் தொட்டு தூக்கினான் காவலன் அவன்.”
இந்த சித்திரத்தை வரையும் அவன் கைகளும் கூட நடுக்கம் கொண்டதோ..
இது வரை அவள் உவமை படுத்தி வந்த உண்மையின் முகத்தை அவன் மனதில் குறித்து வந்தாலும் இதோ இந்த காட்சி..
இது சொல்லும் செய்தி… அவனுக்குள் நடுங்கிய மனதையும் கைகளையும் இறுக பிடித்தபடி அவன் வரைந்து முடிக்க அவள் அந்த சித்திரத்தை விட்டும் விழியை அகற்றாமல் அதையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் கற்பனையில் காட்சி படுத்தும் ஒன்று இதோ கண் முன் சித்திரமாக…
அவள் மனதில் ஓடும் ஆயிரம் உணர்வுகளை கூறிட தமிழ் மொழியின் வார்த்தைகள் தான் போதுமா???
அந்த ஓவியத்தை லேசாக தொட்டு பார்த்தாள்.
அவனோ அவள் அமைதியை கலைத்து “வசந்தி?” என்று அழைக்க தன்னை மீட்டு கொண்டவள்,
“காவலன் அவனே காதலனாய் அவள் முன் நிற்க அவளும் தன் காதலன் கிடைத்த பேருவகையில் அவன் தோள் சாய அவளை அணைத்து கொண்டான் அவன்.. அவர்களின் மோகன நிலையை அந்த நீல வானமும் வண்ண நிலவும் கண் நிறைக்க பார்த்து கொண்டனர்..”
அவ்வளவு தான் ஒரு காவியத்தின் முடிவாய் அவள் கூறி முடிக்க அவனும் அதை அழகாக வரைந்தான்.
அவளே கூறியது போல அந்த நீல வானமும் வண்ண நிலவும் இதழ் பிரித்து அவர்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதாய் வரைந்து முடித்தான்.
காதலர்கள் கட்டி தழுவி கொண்டிருக்கும் அந்த சித்திரம் எத்தனை அழகு? என்று யாராலும் சொல்ல முடியாது..
அந்த முற்று பெற்ற சித்திரம் அத்தனை அழகாய் அவளை பார்க்க விழிகள் அதை விட்டும் நகர மறுக்க
மனம் மட்டும் ‘இது நிஜத்தில் நடக்க சாத்தியமா?’ என்று கேள்வி கேட்டது.
விழிகள் நீரை கொட்டி சித்திரத்தை மறைக்க துடிக்க அதை துடைத்தவளோ மீண்டும் சித்திரத்தில் தன் விழியை வைத்து கொண்டு நின்றாள்.
காவியமாக நிற்கும் இருவரின் மேல் மட்டுமே அவளின் மொத்த பார்வையும்.
அவனோ, அந்த கண்ணாடி சித்திரத்தை கலைத்து விட்டு மீண்டும் மணல்களை குடுவையில் கொட்டி வைக்க எண்ணி கண்ணாடியின் அருகே தன் கைகளை கொண்டு செல்ல அவளோ அவசரமாக அவன் கைகளை பற்றினாள்.
“அட்லீஸ்ட் அவங்க இந்த கற்பனை சித்திரத்துலயாவது சேர்ந்து இருக்கட்டும்… அழிச்சுடாதீங்க ப்ளீஸ்…” என்று கூறி விட்டு கரையுடைக்க பார்த்த நீரை உள்ளிழுத்து கொண்டு கூறினாள்.
அவளின் செயல் அவனை உலுக்க,
“வசந்தி.. ஆர் யூ ஓகே… என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
அவ்வளவு தான் லேசாக தொடங்கிய அவள் அழுகை விம்மி வெடித்திட ஒரு கணமும் அங்கிருக்க முடியாமல் வேகமாக வெளியேறினாள் அந்த வீட்டை விட்டு.
இங்கு ரகுவிற்கோ புதிய குழப்பம்..
இவள் சொல்லி சென்ற சித்திர செய்தியின் உண்மை பொருள் என்ன??
இவள் காதலன் யார்??
“வசந்த் இல்லையா??” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.
0 Comments