22. நீல இரவில் நின் முகம்



வசீ சொல்லி சென்றதிலேயே ரகுவின் மனம் நின்றது. 

அது கொடுக்கும் ஆயிரம் கேள்விக்கும் விடையை தேடி செல்ல முயன்று எதையும் முகத்தில் காட்டாமல் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டான். 


அனைத்தும் முடிந்து சகஜமாகி வரும் சமயம் அவன் அருகில் வந்தான் ஸ்ரீ. 

“ரகு, வசீ எங்க?” என்றபடி. 


அவனோ பதில் கூறாமல் அமைதியாக இருக்க அவன் முகத்தில் என்ன கண்டானோ? அப்போதைக்கு எதுவும் கூறாமல் அமைதியாகி விட்டான். 


இரவின் தனிமையில் ரகு மட்டும் தான் சிந்தையில் உழன்று கொண்டு இருக்க அவன் அருகில் வந்தமர்ந்தான் ஸ்ரீ. 


“என்ன ஆச்சு சொல்லுடா?” என்று கேட்கவும் 

கொஞ்ச முன்பு நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறினான். 


அவனுக்கும் ‘யாரிடமாவது சொல்ல வேண்டும்’ என்ற எண்ணம். 

அவன் கூறியவற்றை அமைதியாக கேட்டு கொண்டவன்


“ரகு, எனக்கு ஒரு விஷயம் தெரியணும்? உனக்கு வசீயை முன்னாடியே தெரியுமா?” என்று கேட்க அவன் ‘ஆம்’ என்று தலையை மட்டும் அசைத்தான். 


ஸ்ரீயின் மனம் அவன் குறிப்புணர்வுகளை குறித்து கொண்டது. 


“எப்டி தெரியும்?” என்று கேட்க 


கூறியிருந்தான் அந்த நாட்களின் நிகழ்வுகள் அனைத்தையும். 


“ரகு,.. நீ.. நீ வசீயை காதலிக்கிறியா?” என்று கேட்க பதிலில்லை அவனிடம். 


“சொல்லு ரகு.. மனசுல எதையும் போட்டு உழப்பாத..எதுவா இருந்தாலும் சொல்லு…” என்று கூறினான். 


அவன் கூறுவதும் சரி தான்.. கோபமானாலும் கவலையானாலும் சரி கொட்டி கவிழ்த்து விடுவது மேல். 


காட்சி அமைப்புகள் என்பது கண்ணுக்கு கண் மாறும். 


டெல்லியில் அவளை விட்டு வந்ததன் பின் அவனின் காட்சிகளுக்குள் சென்று வருவோம். 


மருத்துவமனையில் இருந்து கிளம்பிய பின் மனம் ஏனோ அமைதியான நிலையில் இருக்க அந்த அமைதியை கலைக்கும் விதமாக தான் செல்வத்தின் அழைப்பு இருந்தது. 


அதன் பின் விரைந்து பள்ளிக்கு வந்தவன்.. 

நடந்து கொண்டிருந்த விஷயத்தின் வீரியத்தில் தந்தையின் உடல் கொண்ட சோர்வு. 


பத்திரிகை வாயில் விழாமல் இருக்க அவன் மேற்கொண்ட ஒவ்வொரு செயலிலும் ஒன்றுக்கு பத்து முறை அலசி ஆராய்ந்து அந்த செயலில் இறங்கி இருப்பான். 


இவை எல்லாவற்றையும் சரி செய்து நிமிர சரியாக அவனுக்கு பத்து மாதம் பிடித்தது. 


தந்தையின் உடல் ஓரளவு முன்னேற்றம் கொண்டிருந்தாலும் மொத்த நிர்வாகமும் அவனிடம் வந்திருக்க அதிசயத்திலும் அதிசயமாக அன்று தான் அவனுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைத்தது. 


எந்த சக்கரத்தையும் காலில் கட்டாமல் ஆசுவாசமாக கட்டிலில் படுத்து இருந்தவனுக்கு தென்றலும் இதமாக சாமரம் வீச எழுந்து பால்கனிக்கு வந்தான். 


 மனம் ஏனோ என்றும் இல்லாத ஒரு இதமான மௌனத்தை கொண்டிருக்க செல்வம் மறுநாள் நடக்கவிருக்கும் மீட்டிங் பற்றிய கோப்புக்களை தயார் செய்து வைக்க சொன்னது நினைவில் வர எழுந்து தன் அலமாரியை திறந்தான். 


முக்கிய குறிப்புகள் அடங்கிய அந்த கோப்பினை எடுக்கும் போது தான் அவன் கண்ணில் பட்டது அந்த சிறிய பெட்டி. 


அதை எடுத்து பிரித்து பார்த்தவன் முதலில் ‘என்ன?’ என்பதாய் யோசித்து பின் மூளையில் திடீரென ஓர் மின்னல். 


‘இது அந்த பொண்ணோட திங்ஸ் தான.. ஹாஸ்பிட்டல்ல தந்தது.. கொடுக்க மறந்து போய்ட்டோம்.. என்னிக்கோ எப்பவோ இதை இந்த பாக்ஸ்ல போட்டு வச்சனே.. இவ்ளோ நாள் கண்ணுலயே படல…” என்று அதை எடுத்து கட்டிலில் பிரித்து வைத்தான். 


“காருல இந்த பை இருந்துச்சு” என்று வேலையாள் கொண்டு வந்து கொடுக்கும் போது என்ன என்று கூட பார்த்திராமல் இந்த பெட்டியில் வைத்து இருந்தான்.

மெலிதான ஒரு செயின், ஜிமிக்கி மற்றும் சிறு வளையல் இரண்டு.. கூடவே வெள்ளி சங்கிலி… அவற்றை பிரித்து வைத்தான். 


அவன் பார்வை நெடு நேரம் அவற்றின் மேல். 

அவன் மனதில் அன்று திடீரென அவள் தன் காரில் வந்து மோதியது நிகழ்வாய் விரிந்தது. 


“எப்டி இருப்பா ?குணமாகி இருப்பாளா?” என்று தனக்குள் கேட்டு கொண்டவன், 


“நிச்சயம் குணமாகி இருக்கும்.. ஏன் இந்த நிகழ்வையே மறந்து போய் இருப்பா… இந்த மாதிரியானதையெல்லாம் நியாபகமா வச்சுருப்பாங்க..” என்று அவனே பதிலும் கூறி கொள்ள 


திடீரென அவளின் அந்த பூமுகம் அவன் கண்ணுக்குள் வந்தது. 

அந்த கன்னம்.. அவன் தட்டி எழுப்பிய கன்னம் மெலிதானதாய் இருந்தது போல இப்போது தோன்றியது அவனுக்கு. 


அவள் முகம் பால் வடியும் அந்த வெண்ணிலா ‘பேர் கூட ஏதோ நிலானு தான சொன்னாங்க?? என்ன பேர்?? அவ முகம் மனசுல பதிஞ்ச மாதிரி பேர் பதியலையே??’


தன் எண்ணம் சென்ற போக்கை எண்ணி தன்னையே கடிந்து கொண்டான். 


“இது தப்பு ரகு.. இப்படியெல்லாம் ஒரு பெண்ணை பத்தி தப்பா நினைக்க கூடாது.. அதுவும் உனக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத பொண்ணு…” என்று கூறி கட்டிலில் கிடந்தவற்றை அள்ளி பெட்டியில் போட்டான். 


அன்று இரவு ஏனோ தூக்கம் மட்டும் அவனுக்கு தொலைவாகி போனது. 


பூக்களில் இருந்து பிரிந்து விரியும் புன்னகை முகமாய் அவளே வந்து அவனை கொல்ல அவள் நினைவுகளை மறக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திணறி போனான். 


அடுத்து வந்த ஒவ்வொரு நாட்களும் அவள் அவனை ஏதோ ஒரு வகையில் இம்சை செய்ய அனுதினமும் அவள் நினைவில் புதைந்து போனான். 


“நீ யாரு? எங்க இருக்க? என்னை இப்டி தினமும் கொல்லாம கொல்லுற?? உன் நினைவு இல்லாம என்னால இருக்க முடியல.. இது கூடாதுன்னு எனக்கு நானே வேலி போட்டுகிட்டாலும் அதையெல்லாம் தகர்த்து என் மனசுக்குள்ள வர.. இது என்ன? இதுக்கு பேர் தான் காதலா?” என்று தனக்குள் கேட்டு பார்த்தான். 


விடை கூற அவள் அருகில் இருந்தால் தானே.. 


காதல் என்ற வார்த்தையை காட்டி கொடுத்த மாத்திரத்தில் இருந்து அவன் மனம் ஆசையாக துள்ளியது. 

அவன் முகம் பேரானந்தம் கொண்டது. 


அப்போது தான் செல்வம் அவனிடம் கேட்க அவரிடம் தெளிவும் குழப்பமும் கலந்து கூறி இருந்தான். 


ஆனால் ‘அவளை காண வேண்டும்’ என்ற ஆவல் மட்டும் துள்ளலுக்கு சற்றும் குறையாமல் இருக்க அடுத்த சில நாட்களில் டெல்லி கிளம்பி இருந்தான். 


“ஏதாவது முக்கியமான விஷயம்னா மட்டும் எனக்கு சொல்லுங்க அங்கிள்.. மத்தபடி எல்லாமே உங்க விருப்பம் தான் என் விருப்பமும்..” என்று கூறி பறந்து இருந்தான். 


டெல்லி என்ற அடைமொழியை மட்டும் வைத்து கொண்டு தேடினால் கிடைக்கும் விஷயமா?


ஆகவே தனக்கு தெரிந்த டிடெக்டிவ் ஒருவர் துணை கொண்டு குறிப்பிட்ட நாளில் இருந்து சில தினங்கள் வரை எந்த கல்லூரி சுற்றுலா வந்தது? என தகவல் கேட்டிருக்க 


அடுத்த சில மணி நேரங்களில் அவனுக்கு கிடைத்து இருந்தது வசீயின் கல்லூரி முகவரியோடு சேர்த்து இன்னும் சில. 


அவற்றை எல்லாம் அலசி வடிகட்டி என இறுதியில் வசீ படிக்கும் கல்லூரியில் வந்து நின்றது புள்ளி. 


விபரம் தெரிந்த நொடியில் கிளம்பி இருந்தான் கல்லூரிக்கு. 


தேர்வு விடுமுறை மாணவர்கள் நாளை வருவதாகவும் அங்கிருப்பவர்கள் கூறிட இன்னும் ஓர் நாளுக்காய் காத்திருந்தான் ரகு. 


அடுத்த நாள் காலை அருகில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்தவனுக்கு இன்ப அதிர்வு என்னவென்றால் அங்கு வசீயை கண்டது தான். 


திடீரென கிடைக்கும் தேவதை தரிசனம் என்பது தித்திப்பு தானே.. 


ஆவலாய் அவள் அருகில் செல்ல நினைத்தவன் மனதில் திடுமென ஓர் பயம்.. 

‘ஒரு வேளை அவளுக்கு தன்னை யாரென்று தெரியாவிட்டால்?’  

ஒரு நொடி தயங்கி நின்றவன் பின் ஏதோ ஒரு தைரியத்தில் செல்ல முனையும் போது அவன் தோளை யாரோ தொட்டு திருப்பிட யாரென்று திரும்பினான். 


“நீங்க ரகு அண்ணா தானே?” புதியதாக வந்த ஒருவன் கேட்க அவனை எங்கோ பார்த்த நினைவோடு ‘ஆம்’ என்று தலையை அசைக்க 


“அண்ணா என்னை தெரியல.. நான் தான் பிரகாஷ் தம்பி..” என்று தன்னை அறிமுக படுத்தவும் இவனுக்கு விளங்கியது. 

தன்னோடு உடன் பயின்றவனின் தம்பி என்று.



“ஹேய், ஆமா.. வாட் அ சர்ப்ரைஸ்.. நீ எங்க இங்க? பிரகாஷ் எப்டி இருக்கான்?” என்று கேட்டான். 


“நல்ல இருக்கான் அண்ணா.. நான் இங்க காலேஜ் படிக்கிறேன். அண்ணா யு எஸ் ல தான் இருக்காங்க.. நான் மட்டும் தான் படிப்புக்கு இங்க வந்தேன்..”

 என்று கூற அவன் குறிப்பிட்ட கல்லூரியின் பெயர் வேறென்ன நாம் அறிந்த அதே வசீயின் கல்லூரி தான். 


‘அதற்குள் அவள் போய் விட கூடாதே?’ என்று அவளை ஒரு கண்ணும் இவனிடம் ஒரு கண்ணுமாக பேசி கொண்டிருக்க இவன் பார்வை சென்ற திசையில் அவனும் பார்த்தான். 


“இவங்களா? இவங்க எங்க சீனியர் ஆச்சே? இவங்கள உங்களுக்கு தெரியுமா அண்ணா?” என்று கேட்டான். 


ரகு பதில் கூறாமல் அமைதியாக இருக்க, 

“சரியான கோவக்காரங்கனு சொல்லுவாங்க பசங்க.. இவங்க கிட்ட பேசவே எனக்கு எல்லாம் பயமா இருக்கும்.. அதோட எங்க டிப்பார்ட்மெண்ட் சீனியர் ஒருத்தர் இவங்களுக்கு ப்ரபோஸ் பண்ணாங்க அண்ணா.. பிடிக்கலைனா பிடிக்கல சொல்றத விட்டு அந்த பையனை லெப்ட் ரைட் வாங்கிட்டாங்க.. அப்புறம் தான் தெரிஞ்சுது இவங்க ரூம் எடுத்து தங்கி இருக்க வசந்த்தை லவ் பண்றது.. பொதுவா எங்க டிப்பார்ட்மெண்ட்க்கும் அவங்க டிப்பார்ட்மெண்ட்க்கும் ஆகாது..” என்றான். 


அடுத்து அவன் ‘என்னவெல்லாம் பேசினான்?’ என்று அவனுக்கு விளங்கவில்லை. 


அவன் கூறிய அந்த ‘வசந்த்தை லவ் பண்றாங்க’ என்ற வாக்கியத்திலேயே பூமி நழுவி செல்வதை போல சிலையாக நின்றான். 


‘அவள் வேற யாரையோ காதலிக்குறாளா?’ 

காதல் மனம் காகிதமாக கசங்கி போனதை போன்ற வலி நெஞ்சில் எழுந்தது. 


ஆனால் மறு மனமோ, ‘இது உண்மையில்லை’ சத்தமிட்டு கொண்டிருக்க எதிரில் இருப்பவன் தெரியாமல் செய்த பிழை ஒன்று அவன் வாழ்க்கையை புரட்டியது. 


அவன் சொல் மட்டுமே நம்பி இருக்க வாய்ப்பில்லை ரகுவிற்கு. 

அந்த இடத்தில் இருக்க பிடிக்காமல் எழுந்து அவர்களை கடந்து சென்றவன் காதில்,


தோழியோடு அமர்ந்து இருந்த வசீயிடம் ஏதோ ஒரு பெண், 

“நீயா இருந்தா உன் லவ்வருக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு போவ?” என்று கேட்பது விழ 


அவளின் பதிலுக்காய் அவனும் நடையை தளர்த்தி கொண்டான். 


“கிப்ட் எல்லாம் அடுத்தவங்க சொல்லி வாங்கிட்டு போக கூடாது.. ஒரு பொருள பாக்கும் போது இது அவனுக்கே அவனுக்கா செஞ்சதுன்னு நம்ம மனசு சொல்லும் பாரு.. அப்டி ஒரு பொருளை வாங்கணும்.. நான் அப்டி தான் வாங்குவேன்.. பொதுவா நான் வசந்த்க்கு கிஃப்ட் வாங்கும்போது எந்த பொருளை பார்த்தா எனக்கு அவனுக்குன்னு ஃபீல் ஆகுமோ அதை தான் வாங்குவேன்..” என்று கூறியிருந்தாள். 

அவள் இதுவரை வாங்கியிருப்பது வசந்திற்கு மட்டுமே என்பதால் அவள் கூறியிருந்தாள். 


பொதுவாக வளவளக்கும் இது போன்ற பேச்சை கேட்ட ரகுவோ..

சிறுபிள்ளை இடும் கணக்கை போல ரெண்டையும் பின்னி கோர்த்து கொண்டான். 


‘அவ்வளவு தான் தன் காதலின் ஆயுட்காலம்’ என்று நெஞ்சை அழுத்தி கூறினான். 


மறைக்க முயன்றாலும் வலியின் சாயல் விழியில் தெரியும் தானே.. 

அடுத்த நொடி அங்கிருக்க பிடிக்காமல் வந்தவன் விபரம் கேட்ட செல்வத்திடம் கூறினான். 


“தான் விரும்பிய பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள்” என்று. 

இருந்தும் அவன் அந்த வலியை தாங்க முடியாமல் கடுமை எனும் போர்வைக்குள் தன்னை போர்த்தி கொண்டான். 


யார் எவ்வளவு முயன்றும் அவனை அதில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் போக நோயின் காரணி தானே நோயை போக்கும் குணம் கொண்டது. 


அது போல தான் தன்னையும் அறியாமல் வசீ கொஞ்சம் கொஞ்சமாக தன் வரவால் அவனை தன் கூட்டுக்குள் இருந்து வெளிக்கொண்டு வர செய்தாள். 


ஆயுள் சேர்ந்து வாழ முடியாமல் போனாலும் அருகில் இருந்து பார்க்கும் இந்த சில தருணங்கள் போதும் என அவன் எண்ணிக்கொண்டு இருக்க 


இன்று எதிர்பாராமல் அவனுக்குள் உதித்ததோ ஏராள சந்தேகம்… 


நினைவுகளை ஒன்றும் விடாமல் தம்பியிடம் கொட்டிய பின் கொஞ்சம் இதமாக உணர்ந்தான் ரகு. 


“ரகு, சோ யாரோ ஒருத்தர் சொன்னதையும் நீ கேட்டத்தையும் வச்சு நீயா முடிவு பண்ணிக்கிட்ட.. இத பத்தி வசீ கிட்ட எதும் கேட்கல நீ அப்டி தான?” என்றான்.


“எனக்கு அப்போ வேற வழி தெரியலடா… அவள் காதலிக்குறது வசந்த்தை தான்னு நினைக்கும் போது நான் போய் எந்த குழப்பமும் பண்ணிட கூடாதுன்னு தான் எதுவும் சொல்லல…அதுக்கு அப்புறம் அவள நம்ம ஸ்கூல்ல பார்க்கும் போது நிஜமா என்னால நம்ப முடியல.. நாம காணுறது கனவான்னு தோணிச்சு.. அவளை பார்த்த சந்தோஷம் ஒரு பக்கம்னா அவளை எப்டி என்னால பக்கத்துல வச்சுக்க முடியும்னு பயம் ஒரு பக்கம்.. அதான் அங்கிள் கிட்ட சத்தம் போட்டேன்… ஆனா மனசு கேக்காம மறுநாளே அவளை பார்க்க மொத ஆளா போய் நின்னேன்.. எப்டி சொல்ல? இந்த காதலை என்னால விட்டு கொடுக்கவும் முடியாம எடுத்து பறிச்சுக்கவும் முடியாம…” 


அன்று முதல் அவன் மனம் பட்ட பாட்டை கூறிட

ஸ்ரீயின் மனமோ ரகுவிற்காக வருந்தியது. 


சொல்லும் வார்த்தை எத்தனை எளிதாயினும் அதனால் அவன் மனம் ‘என்ன பாடு பட்டிருக்கும்?’ என்பதை அவனும் அறிந்தவன் ஆயிற்றே..


“ரகு, நான் ஒன்னு சொல்லட்டுமா? இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியாது… வசந்தி உன்னை விரும்புறதா தான் எனக்கு படுது.. இல்லைனா உன்னை தப்பா நினைச்சுட்டு இருந்த எனக்கு ஏன் அவங்க புரிய வைக்கணும் சொல்லு… அதுவும் அன்னிக்கி உன்னோட காதல பத்தி சொல்லும் போது அவங்க கண்ணுல தெரிஞ்ச வலி.. அது… அதுல ஏதோ இருக்கு.. அதோட இதோ.. இப்போ கொஞ்ச முன்னாடி நீ சொன்ன அந்த சித்திரம்.. இதெல்லாம் ஏதோ ஒரு புள்ளியை குறிக்கிறதா தோணல.. எதுக்கும் நீ போய் பேசி பாருடா..” என்றான். 


ஏற்கனவே மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒன்றையே ஸ்ரீயும் முன் வைக்க யோசனையில் ஆழ்ந்தான் ரகு. 


“என்ன ரகு யோசிக்கிற? போய் பேசு?” என்று ஊக்கினான். 


“பேச தான் வேணும்டா.. ஆனா அதுக்கு முன்ன ஒரு முக்கியமான வேலை செய்யணும்…” என்றவன் தனது செல்லில் யாருக்கோ அழைத்தான். 


மறுமுனை, “ஹலோ, வசந்த் ஹியர்” என்றது. 


 


Post a Comment

0 Comments