செல்லில் ரகு குறிப்பிட்ட அந்த காபி ஷாப்பிற்கு வந்த வசந்த்தை முன்னரே வந்திருந்த ரகு வரவேற்றான்.
நேற்றைய இரவில் செல் அழைப்பை ஏற்று அதை காதுக்கு கொடுத்த வசந்த்திடம்,
“நான் ரகு பேசுறேன்..” என்று கூறவும் முதலில் திகைத்தான்.
பின் நொடியில் தன்னை சுதாரித்து கொண்டு,
“சொல்லுங்க சார்..” என்கவும்
“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் வசந்த்.. *** காபி ஷாப் வர முடியுமா?” என்க
அவனுக்குள் ‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனையுடன் சரியென்று கூறிவிட்டு மறுநாள் காலையில் சொன்னது போலவே வந்தும் இருந்தான்.
“ஹாய் வசந்த்.. என்ன சாப்டுறீங்க?” என்று கேட்டுவிட்டு அவனுக்கும் சேர்த்தே ஆடர் செய்து விட்டு சாய்வாய் அமர்ந்தான்.
“என்ன பேசணும் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் வசந்த்.
அவன் கேட்கவும் ஒரு நொடி தயங்கியவன் பின்,
“என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்க
“எப்பவும் உங்களை மறக்க முடியாது சார்..” என்றான் வசந்த் பட்டென.
அவன் பதிலில் திருப்தியுற்றவன் நண்றியாய் புன்னகைத்து,
“நான் உங்க கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும்.. கூடவே மன்னிப்பும் கேட்கணும்..” என்றான்.
“என்ன எதுக்கு மன்னிப்பு?” என்று இவன் பார்க்க
“வந்து.. உங்களையும் உங்க நட்பையும் தப்பா புரிஞ்சு என்னை நானே கொச்சைப்படுத்திட்டேன்..” என்றான்.
“நீங்க சொல்றது எனக்கு…” அவன் புரியாமல் தயங்க
மெல்ல நடந்தவற்றை கூறினான்.
வசீயின் மீதான தன் காதலையும் அவளை சந்திக்க டெல்லி வந்ததையும் அங்கு அவன் தவறாக புரிந்து கொண்டவைகளையும் சேர்த்தே.
அவன் கூற அமைதியாக கேட்டு கொண்டவன் மனதில் என்ன ஒரு நிம்மதி.
“அப்போ நீங்க வசீயை..?” இவன் மீண்டும் தெளிவிற்காய் கேட்க
“ஆமா வசந்த்.. நான் என் உயிருக்கு உயிரா நேசிக்கிற ஒரே ஜீவன் அவ தான்.. அதனால தான் என்னால அதை ஏத்துக்க முடியாம அவ மேல கோபமா கூட திரும்புச்சு..” என்று கூற
“ரகு, எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? உண்மையிலே இது எனக்கு எதிர்பார்க்காத சந்தோஷம்.. இதை இப்போவே வசீ கிட்ட சொல்லணும் போல தோணுது.. உங்க காதல் அவளுக்கு தான்னு கத்தி சொல்லணும் போல இருக்கு..” என்று.
அவன் கூற்றை புரியாமல் இவன் பார்க்க,
“என்ன ரகு? உங்களை அப்டி கூப்பிடலாம் தானே?” என்று கேட்க
இவன் சம்மத சிரிப்பாய் தலையசைத்தான்.
“அப்போ ஓகே.. ஆமா ரகு, உங்களுக்கு தெரியாது வசீய பத்தி.. அவ உங்களை நீங்க யாரு எப்படி இருப்பீங்கனு தெரிய முன்னயே காதலிச்சா…” என்று கூறினான்.
ரகுவிற்கோ இது பேரதிர்ச்சி.. ஸ்ரீ ஏற்கனவே சொன்னது தான்.. தானும் இது வரை ஊகித்து இருந்தது தான்.. வசந்தியின் மனதை ஆனால் வசந்த் சொல்வதை போல,
‘தன்னை யாரென்றே தெரியாமல் காதலித்தாளா?’ என்று விழிகளை விரித்து பார்த்தான்.
“ஆமா முதல்ல நான் அதை ரொம்ப கண்டிச்சேன்.. அதுக்கு அவ ரொம்ப தெளிவா உங்கள மட்டும் தான் விரும்புறதும்.. அவ வாழ்க்கை உங்க கூட மட்டும் தான்னு சொன்னா.. ஆனா… அன்னிக்கி கொடைக்கானல்ல வச்சு.. நீங்க தான் அவளோட காதல்னு தெரியும் போது.. அவளால அதை ஏத்துக்க முடியல.. காரணம்.. அவ நேசிச்சது போல நீங்க அவளை நேசிக்கல.. உங்க காதல் வேற ஒருத்தருக்கு சொந்தம்ன்னு சொல்லி… தன்னையே தனிமை படுத்திட்டா… அதை என் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வேற வாங்கினா.. இப்போ கூட இதை நான் சொல்ல காரணம்.. அந்த சத்தியமும் சரி அவளோட கவலையும் சரி தேவையில்லாத ஒன்னு.. அதான்..” என்று தெளிவாக எடுத்துரைத்தான்.
அவன் கூற கேட்டவனோ ‘வசீயின் காதல் முன் தான் எம்மாத்திரம்’ என்று எண்ண
அவன் மனதை படித்தவனாய் வசந்த்,
“காதல் எல்லாருக்கும் ஒன்னு தான் ரகு.. உன் காதல் பெருசா என் காதல் பெருசான்னு பார்க்க கூடாது…” என்றான் சிரிப்போடு.
‘இதோ இவனுக்கு தான் எத்தனை தெளிவு..’ என்று தோன்றாமல் இல்லை.
அதிலும் தோழியின் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தை தேடும் இவன் போல ஒரு துணையை பெற யாராயினும் வரம் பெற்றிருக்க வேண்டுமோ?
“நீங்க என்னை..” ரகு மீண்டும் அவனிடம் கேட்க
“தேவையில்லை ரகு.. உங்க இடத்துல யாரா இருந்தாலும் இதை தான் செய்வாங்க.. சொல்ல போனா நீங்க அவளுக்கு எந்த தொந்தரவும் தர கூடாதுன்னு தானே விலகி போனீங்க.. இதுல உங்க பக்கம் என்ன தப்பிருக்கு மன்னிப்பு கேட்க… அதனால பழசை விட்டுட்டு புதுசை தேடுவோம்..” என்றான்.
அதன் பின் இருவருக்குள்ளும் ஓர் இனிய பந்தம் உருவானது.
பின் ரகு வசந்திடம்,
“வசந்த், நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்..” என்றான்.
“சொல்லுங்க ரகு..”
அவன் கூற கேட்டவன் விழிகளும் மனதும் சேர்த்து சிந்திய புன்னகையோடு அவனிடம்,
“செஞ்சுட்டா போச்சு…” என்று கூறினான்.
“ரொம்ப முக்கியம் இது வசந்திக்கு தெரிய கூடாது…” என்றான் ரகு.
“டன்..” என்று கூறி இருவரும் மனதில் இருந்த அழுத்தங்களை அங்கேயே விட்டு அன்று மலர்ந்த அலராய் சென்றனர்.
***
“வசீ எவ்ளோ நேரம்.. நேத்தே சொன்னன்ல.. சீக்கிரம் ரெடியா இரு.. ஷார்ப்பா வருவேன்னு…”
வசீயின் வீட்டில் நெடு நேரமாக கத்தி கொண்டு இருந்தான் வசந்த்.
“இருடா என்ன அவசரம்? சாதாரணமா வராத கொஞ்சம் பார்க்குற மாதிரி வான்னு.. நீ தான சொன்ன? அதுகாச்சும் கொஞ்சம் மெனக்கெட வேணாமா.. அப்டி என்ன அந்த ஹோட்டல்ல இப்டி வந்தா தான் சோறு போடுவோம்னு சொன்னாங்களா?” என்றபடி வந்து நின்றாள்.
நீல வண்ணத்தில் வெள்ளை ஜரிகையும் கற்களும் கொண்டு செய்யப்பட்ட பார்டர் மற்றும் மேனியில் சில வண்ண கற்களும் நட்சத்திரங்களாய் தூவியது போன்று வந்து நின்றாள் நீல வான நிலா… மன்னிக்கவும் நம் வசந்த நிலா.
“போதுமா?” என்று விழிகளை துருத்தி அவனிடம் கேட்க
“தேவதை…” என்று கை விரல் குவித்து கூறினான்.
“ஹாஹா.. அப்பப்போ உண்மையும் சொல்றடா..” என்று கூறி சிரித்தாள்.
அவனும், “ பொய் சொன்னா உன் முகம் ப்ரைட்டா ஆகி அப்போவாச்சும் அழகா தெரிவன்னு தான்..” என்று வம்பிழுத்து அவளிடம் அடிகளை வாங்கி கொண்டு அந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.
அது ஒரு கார்டன் ரெஸ்டாரண்ட்.
மிக நீண்ட அமைப்பு நடக்கும் சாலை தவிர்த்து மற்ற இரு வழிகளும் செயற்கை புல் போர்வை போர்த்தி இருந்தது.
மின்னும் மஞ்சள் விளக்குகள். காற்றில் கலந்து வரும் சுகந்த நறுமணம். இவற்றோடு மேடை அமைத்து அங்கிருக்கும் இசைக் கலைஞர்கள் மீட்டும் மெல்லிய இசை.
ஏகாந்தம் என்ற சொல்லுக்கு மொத்தமும் பொருந்தும் அந்த சூழல்.
“ரொம்ப அழகா இருக்குடா ஹோட்டல் பாக்கவே..” என்று அதன் சுற்றமைப்பை பார்த்து ரசித்தபடி வந்து அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார்கள்.
“நானும் இங்க நிறைய தடவை வரேன் போறேன்.. எனக்கு மட்டும் இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது.. உன் கண்ணுக்கு மட்டும் எப்டி தான் இது சிக்குதோ?” என்று கூறினாள்.
அவன், “அதுக்கு கொஞ்சம் மேல் மாடி வேணும்.. அங்க தான் அது காலியாச்சே..” என்று கூறிட இவள் முறைத்தாள்.
அதற்குள் வசந்தின் செல் ஒலிக்க அதை காதுக்கு கொடுத்தவன் வசீயிடம் கண் ஜாடை செய்துவிட்டு வெளியே வந்தான்.
அவன் சென்ற பின்,
கலைஞர்கள் மீட்டும் மெல்லிசை அவள் காதின் வழி மனதிற்குள் நுழைய கண் மூடி ரசித்து கொண்டாள்.
சில நொடிகள் கழித்து கண் விழித்தவள் கன்னத்தில் கையை வைத்து கொண்டு சுற்றி முற்றியும் தன் பார்வையை விட்டாள்.
அப்போது தான் கவனித்தாள் அவளை தவிர்த்து அங்கிருக்கும் அத்தனை பேரும் சிவப்பு வண்ண உடையில் இருப்பதை.
‘என்ன எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி ரெட் கலர் ட்ரெஸ் போட்டு இருக்காங்க.. ஏதாவது ட்ரெஸ் கோடா? அப்படினா வசந்த்க்கு இது தெரியாதா?’ என்று மனதில் கேட்டு கொண்டாள்.
அங்கிருக்கும் மொத்த கூட்டத்தில் தான் மட்டும் தனித்து தெரிவதை போல தோன்றியது.
நீண்ட நேரம் ஆகியும் வசந்த் வராததால் அவனை தேடி செல்ல எழுந்தாள்.
ஏதோ நெருடலாய் தோன்ற சுற்றிலும் பார்த்தாள்.
அங்கிருக்கும் அத்தனை பேரும் அவளையே பார்த்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் எழுந்து இப்போது வசீயின் முன் நிற்க கண்களில் பிரமையோடு அனைவரையும் பார்த்தாள்.
மெல்லிசையும் இப்போது கொஞ்சம் சுருதி கூடிட சுருதிக்கு ஏற்ப சுற்றி இருப்பவர்கள் வட்டமடித்து சுழன்று வந்தனர்.
அவர்களில் சிலர் வசீயின் கையை பற்றி சுழற்ற பம்பரமாக சுழன்று தடுக்கி நின்றாள்.
‘என்னடா நடக்குது இங்க? என்ன ஆச்சு எல்லாருக்கும்? வசந்த் நீ தான் இதெல்லாம் பண்றியா?’ என்று அவள் நினைத்து கொண்டிருக்க
சுற்றி வளைத்து வந்த கூட்டத்தின் பின் நின்று கொண்டிருந்தவர்களுள் யாரோ ஓர் பூங்கொத்தை இவளிடம் நீட்ட அனிச்சையாய் அதை வாங்கி கொண்டாள்.
ப்ரமையில் மிதக்கும் பாவை போல அவள் திகைத்து நிற்க கையில் கிடைத்தது எது? என்று கூட உணராமல் வாங்கியவள் வாங்கிய பின்பே சுயம் மீட்டதை போல உணர்ந்தாள்.
தன் முன்னே மறைத்து நின்ற இருவர்களை பிரித்தாள்.
‘யார் இதை தந்தது?’ என்ற யோசனையில் விலக்கி பார்த்தவள் விழிகள் வியப்பில் விரிந்தது.
அங்கு ரகு தன் ஒரு காலை மடித்து தரையில் சரிந்து நின்று கொண்டிருந்தான்.
மெல்லிசையோடு கூட்டத்தின் மெலிதான கரவோசையும் சேர்ந்து கொண்டது.
எதிரில் திடீரென ரகுவை கண்டவள் விழிகள் அப்படியே நிற்க
“மிஸ். வசந்தி… இப்பவும் சரி எப்பவும் சரி… என்னோட காதலுக்கு சொந்தக்காரி நீ தான்.. நீ மட்டும் தான்.. இதோ அது சாட்சியா அன்னிக்கு நீ பிரிய கூடாதுன்னு சொன்ன சித்திரம்.. இந்த சித்திரம் போலவே கடைசி வரை நாமளும் பிரியாம இருப்போம்.. என்னை.. என் காதலை ஏத்துக்குவியா? மிஸ். வசந்தி.. என்னை கல்யாணம் பண்ணி மிசஸ் வசந்தியா ஆக சம்மதமா?” என்று கேட்டான்.
நிற்கும் சூழலும் நடக்கும் நிகழ்வுகளும் கனவை போல தோன்ற ‘மயக்கம் வந்து விடுமோ?’ என்ற அச்சம் ஒரு பக்கம்.. ‘இது உண்மை தானா?’ என்ற பயம் ஒரு பக்கம் மனதை பிழிய கால்கள் நடுங்க கீழே விழ போனவள் மறு நொடி அவன் கைகளில்..
மொத்த கூட்டமும் இப்போது பலமாக கை தட்டியது.
மிக நெருக்கத்தில் அவன் முகம்.. மனம் படபடத்து கொண்டதை விழிகள் சிமிட்டி காட்டி கொடுக்க அவனோ நின்ற நிலையில் கண்ணடித்தான் அவளை பார்த்து.
சட்டென்று அவனை பிரித்தவள் முகத்தில் ஓடியது என்ன செவ்வானமா??
இது அவர்களுக்கான தனிமை என்று உணர்ந்த அனைவரும் வாழ்த்து கூறி விடை பெற்றனர்.
மேக நிலவும் மின்னும் விளக்குகளும் போட்டி போட்டு கொண்டு அவர்களை படம் பிடிக்க கையை பிசைந்த படி இருந்தவளை பார்த்தான் ரகு.
“என்ன வசந்தி? ரொம்ப நேரமா ஏதோ குழப்பதுல இருக்க மாதிரி இருக்கு.. நடக்குறது கனவா? நனவான்னா?” என்றான்.
அவளோ அதே அமைதியை கொண்டு அமர்ந்திருக்க எதிரில் இருந்து அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.
பிசைந்த கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்து,
“என்ன குழப்பம் தயங்காம கேளு?” என்று கூறிட
“நீங்க.. நீங்க.. நிஜமாவே என்னை தான் விரும்புனீங்களா? என்றாள்.
“விரும்புனீங்களான்னு ஏன் கேட்குற விரும்புறேன்.. உன்னை மட்டும் தான்…” என்றான்.
“அப்போ செல்வம் சார் சொன்னது?” என்று குழந்தை போல இதழ் பிரித்து கேட்க
மெல்லிய குரலில் நடந்தவைகளை கூறினான்.
அவன் கூற கேட்டவள் விழிகள் வியப்பில் விரிந்தது.
“நீங்க என்னை தேடி வந்தீங்களா?” என்றாள் வியப்போடு.
அவன் ‘ஆம்’ என்று தலையசைத்தான்.
“மன்னிச்சுருங்க ரகு, சொல்ல போனா அன்னிக்கு நான் சொன்னது கூட பொதுவா நான் கிஃப்ட் வாங்குறது பத்தி தான்…” என்று கூற
“தெரியும்..” என்று கூறியவன் காதலாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
நீல இரவில் நின் நயனங்களில்
வீழ்ந்த என்னிதயம் அதனை..
நீயே வைத்துக்கொள் நிரந்தரமாய் உன்னுள்.,
தமனியும் சிறையும் போல ஓய்வில்லாமல்
உன் இதயத்தில் உழைக்க தான் ஆசை எனக்கும்.,
இணைந்த இதயங்களின் துடிப்பாய் நீ இருந்தால்..
இமைகளை குடையாய் தாழ்த்தி…
விழிதனில் மொழி கலந்து சொல்லிவிடு..
ரகுராமனின் ஜானகியாய் என் இதய அறையில்..
இறுத்தி வைப்பேன் என் கண்ணே!!
அவளின் முன் நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை ஒதுக்கி விட்டு அவளின் காதினுள் கவிதையாய் தன் காதலை அவன் கூறினான்.
காவலன் தொடுத்த கணையாழியின் காதல் தூதிற்கு கன்னியிவள் காதல் சொல்லாமல் முடியுமா??
அவன் கூறியபடி விழிதனில் மொழி செய்து தன் காதலை தெரிவிக்க
அவனும் சுகந்தமாய் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.
இருவரின் காதலுக்கும் சாட்சியாக இருந்த நீல இரவும் இந்த சித்திரத்தை தன்னுள் பதித்து கொண்டது.
விதியென்பது எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் முடிவில் சுகமாக தான் இருக்கும்.
அதே போல தான் இவர்களின் வாழ்க்கையில் எத்தனை சூழ்ச்சிகளை செய்தாலும் இறுதியில் இருவரையும் சேர்த்து வைத்து மகிழ்ந்தது.
0 Comments