மூன்று நாட்கள் கடந்திருந்தது.
மீண்டும் தொடங்கிய கண்ணா மூச்சி ஆட்டத்தில் தவித்து போன ரிஷிகாவால் தாங்க இயலவில்லை.
அவனை தேடி தேடி ஓய்ந்து திரும்பும் அவள் கண்களை பார்க்கும் கவுதமிற்குமே பாவமாய் இருக்கும்.
‘என்ன தவறு செய்தாள் இந்த பெண்? சாஹித்யனை காதலித்தள்!! அதுவும் தவறா என்ன?’ என்று தோன்றும்.
இருக்கையில் எழுந்தவளை என்னவென்று மதன் பார்க்க..
“டூ மினிட்ஸ் சார்” என்றாள்.
அவன் ‘சரி’யென்று தலை அசைக்க,
வெளியே வந்து மீண்டும் அவனை தேடினாள்..
அவன் இல்லாது போகவே சோர்வாய் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள்.
கவுதமிற்கு ‘என்ன தோன்றியதோ?’ விரைந்து இருக்கைக்கு சென்றான்.. அங்கு கணினியை ஓட விட்டு சிந்தனையை வேறெங்கோ வைத்திருப்பவனை பார்த்தான்..
அவனை நெருங்கி, “டேய் சகி, காபி சாப்பிடவா?” என்றழைக்க,
“ப்ச், வேண்டாம்டா நீ போய் சாப்பிடு...”
“இப்போ வர போறியா இல்லயா? வானு சொல்றேன்ல” அவன் கையை பிடித்து இழுத்து சென்று அங்கிருந்த சேரில் அமர வைத்தான்.
பின், இரு கப் காபியோடு அவனருகில் அமர்ந்தான்.
அவன் மனம், ‘எப்படியாவது ரிஷிகா இவனை பார்த்து விடட்டுமே?’ என்று மன்றாடியது.
அவளும் பார்த்தாள்.. பார்த்தவளின் கண்களில் உயிர் திரும்பியது.
ஆவலோடு அவனருகே வந்தாள். அவனோ நண்பனை முறைத்தான்.
‘இதுக்கு தான் கூப்ட்டியா?’ என்று விழி கேட்க, அவன் ‘ஆம்’ என்ற ரீதியில் புன்னகைத்தான்.
அருகே வந்தவளை ஒரு கணம் பார்த்தவன் பின் தன் பார்வையை திருப்பி விட்டான் அவளை பார்ப்பதை தவிர்த்தான்.
“சாரி” என்றவளின் குரலில் அவள் புறம் திரும்பினான்.
அவள் அழுது சென்ற நாளிற்குபின் இன்று தான் அவனை பார்க்கிறாள். அன்று நடந்ததற்கு தான் மன்னிப்பு கேட்கிறாள்.
ஆம், அதன் பின் தானே அவன் அவளை பார்ப்பதை தவிர்க்கிறான்.
ஆனால் காரணம் தான் வேறாய் இருந்தது. அவனும் அதை அறிந்தான். பதில் பேசாது மவுனமாய் இருந்தான்.
சில நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவள், நீண்ட பெருமூச்சோடு அங்கிருந்து நகர்ந்தாள்.
வகுப்பிற்குள் சென்றவளுக்கு அங்கு இருக்க மனம் வரவில்லை.
மதனிடம் கூறிகொண்டு கிளம்பினாள்.
அவள் முகத்தில் என்ன கண்டானோ?
“சரி போய்ட்டு வாங்க ரிஷிகா, இன்னைக்கான நோட்ஸ வனிதா, மஹிமா கிட்ட வாங்கிகோங்க” என்ற இசைவோடு.
அவனுக்கு ‘சரியென்ற தலையசைப்போடும், தோழிகளின் கேள்விக்கு ஒன்றுமில்லை’ என்ற தலையசைப்போடும் வெளியேறினாள்.
வெளியேறி கொண்டிருப்பவளையே பார்த்து கொண்டிருந்தனர் கவுதமும்,சாஹித்யனும்.
“பாவம்டா” கவுதமின் குரலில் பரிதாபம் இருந்தது.
“கவுதம் உன்னோட கார் சாவி கொடு..” கணபொழுதில் நீட்டியிருந்தான்..
‘ எப்படியாவது இதற்கு முடிவு வந்து விடாதா’ என்ற எண்ணத்தில்.
அவளின் அருகில் காரை கொண்டு நிறுத்தியவன்... குனிந்து கார் கதவை திறந்தான்.
“ஏறு...”
“ஏன் ஏறனும்?”
“ஏறுனு சொல்றேன்ல...” குரலில் கடுமை வந்திருந்தது.
பயந்து கொண்டு சட்டென்று உள்புகுந்து கொண்டாள்.
அவளின் குழந்தை தனமான செய்கையில் அன்றும் ஈர்க்க பட்டு மெலிதாய் புன்னகைத்தான்.
சில நிமிடங்கள் மௌனமாய் கழிய,
அவனே தொடங்கினான்.
“ஏன் இப்படி இருக்குற ரிஷிகா?”
‘ஏனென்று உனக்கு தெரியாதா?’ என்ற பார்வை அவளிடம்.
நீண்ட பெரு மூச்சு அவனிடம்.
“ஆளே மாறிட்ட...” என்னவோ பல ஆண்டு பழகியவனை போல் அவன் கூறினான்.
‘மாத்தியவனே நீதானே’ என்ற பார்வை.
“ஸ்ஸ்ஸ்” காரை ஓரம் கட்டினான்.
வெளியே சென்று வந்தவன் கையில் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அவளிடம் நீட்டினான்.
“கொஞ்சம் தண்ணீர் குடி...”
அவள் அதை வாங்கி பருகினாள்.
பின், ஒரு சாக்லேட் கவரை அவளிடம் நீட்டினான்.
‘என்ன?’வென்பது போல் பார்த்தவளுக்கு,
“இது என்னோட ஃபேவரைட் சாக்லேட்... நான் கஷ்டமா இருக்கும் போதும் சந்தோஷமாய் இருக்கும் போதும் சாப்பிடுவேன். கஷ்டத்துல இருக்கும் போது இதோட டேஸ்ட் என்னோட கஷ்டத்தை குறைக்குறது போலவும்… அதே சந்தோஷமாய் இருக்கும் போது இதோட டேஸ்ட் என் சந்தோஷத்த இரட்டிப்பாக்குறதை போலவும் தோன்றும். இப்போ நீ கூட கஷ்டத்துல இருக்குற மாதிரி தோணுது அதான் வாங்கி வந்தேன்.”
நோயை தந்தவனே மருந்துமிட்டான். புன்னகைத்தே வாங்கி கொண்டவள் கவரை பிரித்து சிறு கடி கடித்தாள்.
‘அவன் தந்ததாலா? இல்லை அவன் கூறிய விளக்கத்தாலா?’
எதோ ஒன்று அவளின் முகத்தின் கலக்கத்தை கொஞ்சம் விலக்கியது. அவளின் முக மாறுதலை கவனித்தவனுக்குள் இதம் பிறந்தது.
“இது படிக்கற வயசு ரிஷிகா.. இந்த டையத்துல மத்த ஃபீலிங்க்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. படிச்சு முடிச்சு நல்ல வேலை. அப்புறம், அப்புறம்...” ஒரு நொடி தயங்கியவன்,
“காலப்போக்கில் எல்லாமே...” என்று அவள் பக்கம் திரும்பியவன் திகைத்து நின்றான்.
இது நாள் வரை அவளின் முகத்தில் வெட்கத்தையும், துயரத்தையும் கண்டிருந்தவன்...
முதல் முறையாய் கோபத்தை கண்டான்.
“சொல்லுங்க? கால போக்கில மறந்துடுவேன். அப்படித்தானே?”
அவன் எதோ கூற வாயெடுக்க, கை அமர்த்தி தடுத்தாள்.
“வண்டிய நிறுத்துங்க சார்...”
“ரிஷிகா....”
“சொல்றேன்ல...” க்ரீச்சிட்டு நின்றது.
காரில் இருந்து இறங்கியவள் அவன் புறம் குனிந்து,
“என்னோட உணர்வுகளுக்கு நீங்க கொடுத்த மரியாதைனால என் மனசு நிறைஞ்சிடுச்சு ... கைல சாக்லேட்ட வாங்குனதால குழந்தைனு நினைச்சிட்டீங்க இல்ல... நல்லது.”
திரும்பி பாராமல், நடந்தவள் கடந்து சென்ற ஆட்டோவில் ஏறி கொண்டாள்.
“என்னமா,சீக்கிரம் வந்துட்ட?”
“ஒன்னுமில்லைமா, தலை வலி..”
“எப்போ பாரு படிப்பு படிப்புனு இருந்தா தலை வலிக்காம என்ன செய்யும்? சரி, நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் அப்புறம் வந்து எழுப்பறேன்.”
அறைக்குள் சென்று தாழிட்டு கட்டிலில் விழுந்தாள். அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெளிவந்தது.
‘என்ன நினைத்தான் என்னை பற்றி? என் காதல் அவனுக்கு வெறும் மாயை போன்று காலம் கடந்தால் மறந்து விடுவேனாமா?’
அழுதாள்.. நீண்ட நேரம் அழுதாள்.
விசும்பி விசும்பி அப்படியே உறங்கியும் போனாள்.
கண் விழித்தவளின் முன் கடிகாரம் ஒன்பது என்று காண்பிக்க படுக்கையை விட்டு எழுந்து குளித்து விட்டு நைட்டிக்கு மாறினாள்.
மீனா வந்து சாப்பிட அழைக்கவே அமைதியாய் சென்றமர்ந்தாள்.
“என்னமா தலை வலி இப்போ எப்படி இருக்கு?”
“இப்போ கொஞ்சம் பரவா இல்லைப்பா.”
“டாக்டர்ட வேணும்னா போய்ட்டு வருவோமா”
“வேணாம்ப்பா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்று கூறியவளின் மனம், ‘ இது சரியாகும் விஷயமா?’ என்று கேள்வி எழுப்பியது.
இயந்திரமாய் உண்டுவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அன்று மட்டுமில்லை அதன் பின் வந்த நாட்களுமே அவள் இயந்திரத்தை போலவே இயங்கினாள்.
கல்லூரி பின் கம்ப்யூட்டர் சென்டர், வீடு இப்படியே நகர்ந்தது.
ரிஷிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதை கவுதமும் வனிதாவும் மஹிமாவும் கண்டு கொண்டிருந்தனர்.
முகம் வாடி இருந்தவள், கடுமையின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவளை பார்க்க எப்படியோ? இருந்தது.
அவளின் இந்த நிலைக்கு காரணம் ‘சாஹித்யன்’ என்று சொல்லாமல் புரிய அவன் மேல் கோபம் துளிர்த்தது தோழியற்கு.
கல்லூரி படிப்பும், கம்ப்யூடர் கோர்சும் முடிவடைந்தது.
மஹிமா-ரிஷிகா-வனிதாவின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்க பட்டு மூவருக்குமே ஒரே கம்பனியில் பணி நியமனம் கிடைக்க ஆனந்தம் கொண்டனர்.
மூன்று மாதங்கள் கடந்திருந்தது. ரிஷிகாவின் செயல் முறையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தோழியரோடு கலகலப்பாள். வீட்டில் இயல்பாய் இருப்பது போல் நடிப்பாள்.
ஆனால் தனிமையிலோ நத்தை தன் ஓட்டிற்குள் ஒடுங்குவதை போன்று , தன் உணர்வுகளுக்குள் சுருண்டு கொள்வாள்.
இவளை பற்றிய கவலையோடு ரகுராமன் மீனாவிடம் கேட்கும் போது,
“அவ இப்போ தானே காலேஜ் முடிச்சிருக்கா. எங்க நீங்க கல்யாண பேச்ச எடுத்துருவீங்களோனு அமைதியா போறா.. கொஞ்ச நாள் போகட்டுமே நாமளே என்னனு கேப்போம்?” என்ற பதிலில் அவரும் ‘சரி’யென்று அமைதியாகி விடுவார்.
இதற்கிடையில் ஒரு நாள் கவுதமிடம் இருந்து வனிதாவிற்கு கால் வந்தது.
***
0 Comments