18. உனது விழியில் எனது காதல்




மருத்துவமனையின் வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் மார்புக்கு குறுக்காக கை கட்டி கொண்டு அமர்ந்திருந்த சகியின் அருகில் வந்து அமர்ந்தார் ரகுராமன். 
தூரத்தில் இதை கண்ட கவுதம்- மஹிமா- வனிதாவுக்கு
 ‘ஏதும் அற்புதம் நிகழ்ந்து சிக்கல் தீர்ந்து விடாதா?’ என்ற எண்ணம். அவர்களை பொறுத்தவரை ‘இங்கு யாரையுமே குறை கூற முடியாதே... ஆகவே அற்புதம் நிகழ்ந்தால் தான் உண்டு. 
அற்புதம் நிகழுமா? சிக்கில் தீருமா?’ அருகில் நிழலாட திரும்பிய சகி, ரகுராமனை கண்டு ஏதும் பேசாமல் பார்வையை திருப்பி கொண்டான். 
அவன் மனம் ஒரு நிலை கொள்ளாமல் தவித்தது. சிறிது தயக்கதிற்கு பின் ரகுராமன் பேச்சை தொடங்கினார்.

 “தம்பி...உங்க பேர்?” 
“சகி..சாஹித்யன்” கடுப்பாக வெளிவந்தது. 
“ஓஹ்.. அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க...” விடாமல் தொடர்ந்தார். 
“அப்பா இல்லை..அம்மாவும் தம்பியும் தான்...” பட்டு கத்தறித்தான்...
 மறக்க வைக்கப்பட வேண்டிய நிகழ்வுகள் தோண்டி எடுக்கப்படுவதாய் உணர்ந்தான்.
 ‘இதற்கு மேல் எப்படி பேச்சை தொடர?’ என்று தயங்கி பின் மெதுமெதுவாய்,
 “தம்பி.. உங்கள எங்கயோ பார்த்த மாதிரி தோணுது... ஆனால் சரியா நியாபகம் வர மாட்டேங்குது... உங்களுக்கு அப்படி எதுவும் தோணுதா?”
 அவரை கூர்மையாய் பார்த்தவன்.. ஏதும் பேசாமல் அமைதியானான்.

 ‘இவருக்கு என்னை நினைவில்லையா? அது சரி போகிற போக்கில் காயப்படுத்தி விட்டு போகிறவர்களுக்கு எப்படி தெரியும் அந்த காயத்தின் வலி. அவன் தானே காயம் பட்டவன்... அவனால் மறக்க முடியுமா..?’ என்று எண்ணி கொண்டான். 

அப்படி எண்ணும் போதே... ‘இவரை நல்லதோற் முறையில் சந்தித்து இருக்க கூடாதா..? அப்படி மட்டும் நடந்திருந்தால் இன்று இப்படியோர் நாள் வந்திருக்காதே’ என்று தோன்றியது. 

“உங்களுக்கும் தெரியலையா...?” அவரும் விடுவதாய் இல்லை... ஆனாலும் அவரின் விழி பொய்யுரைக்கவில்லை என்பது அவனுக்கு புரிந்தது.

 நீண்ட பெரு மூச்சோடு அவரின் விழிகளை விட்டு பார்வையை அகற்றாமல் கூறி முடித்தான். 
அவரின் முகத்தில் அடுத்தடுத்து தோன்றிய பிரதிபலிப்பு கூறுவதென்ன..? அவனுக்கு விளங்கவில்லை. 
சற்றும் தாமதிக்காமல் அவனின் கை பற்றிய ரகுராமன், “தம்பி...என்னை மன்னிச்சுடுங்க தம்பி” என்றார். 
“அய்யோ , என்ன சார் நீங்க போய் என் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு???” பதறினான். 
இது தான் அவனின் இயல்பான குணம்... ‘என்ன தான் அவர் வார்த்தை அவனை காயப்படுத்தி இருந்தாலும்... தன் தந்தை வயதொத்த மனிதர், பெரியவர்... தன்னிடம் மனமுவந்து மன்னிப்பு கோருவதா... அவரை குறை சாற்ற வேண்டுமென்ற நோக்கில் அவன் இதை கூறவில்லையே அவர் கேட்டதற்கிணங்கி தானே கூறினான்.

 அவன் அவரின் குணத்தை அறிந்து வைக்க வில்லையே... 
அவனறிந்த அவர் கோபக்காரர்... அவ்வளவு தானே.. 
ஆனால் இன்றோ இவரின் மன்னிப்பு எதோ ஒரு வகையில் அவரின் குணத்தை அவனுக்கு உணர்த்தியது’ எனலாம். 

“இல்லை தம்பி உங்களுக்கு தெரியாது...?” 
‘ஆம், அவனுக்கு அவரின் குணம் தெரியாது தான்.’ 

“அன்னக்கி நீங்க கோபமா வண்டிய எடுத்துட்டு போகுறத பார்த்து வருத்தப்பட்டு பக்கத்துல இருந்த ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர்ட்ட… பாருங்க சார், எவ்வளோ கோபமா வண்டிய ஓட்டிட்டு போறார்... இந்த மாதிரி செயல்கள் தான் மோசமான விளைவுகளை உண்டு பண்ணுதுனு” சொல்ல, அவரோ... உங்க மேல தப்பில்லை.. உங்கள தள்ளி விட்டுட்டு போன அந்த பைக் பார்ட்டி பண்ணிய வேலைனும் சொன்னார். அதோட நீங்க மட்டும் வண்டிய லாவகமா ஒடித்து திருப்பலைனா தான் விபரீதம் ஆகிருக்கும்னு எடுத்து கூறினார். அவசரப்ப்பட்டு உங்க மேல கோபப்பட்டுட்டோமேனு நினைச்சு.. உங்கள பார்த்து மன்னிப்பு கேக்கலாம்னு உங்க பின்னாடி வந்தேன்... உங்க வேகத்துக்கு என்னால ஈடு கொடுக்க முடியல... வயசாயிடுச்சுல அதான்.. அதற்கப்புறம் நாள் போக்குல மறந்தும் போச்சு...” வருத்தமாக அவர் கூற,
 அவரின் வாய் மொழியும் விழி மொழியும் பொய்யுரைக்கவில்லை என்ற நிதர்சனம் அவனுக்கு புரிந்தது. 
மெல்ல தலையசைத்தவன்... 
“பரவாயில்லை சார்.. நீங்க வேணும்னு சொல்லலையே... உங்க மேலயும் குறை சொல்லிவிட முடியாது.”

 ‘ஏனோ, அவன் மனக்காயம் கொஞ்சம் குறைவதாய்’ உணர்ந்தான். 

“அதுவந்து... இந்த காலத்து பசங்க, இப்படி சின்ன வயசுலயே போதைக்கு அடிமையாகி வாழ்கையை முடிச்சுகிறாங்கனு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அன்னைக்கும் அதே மனத்தாங்கல்ல தான் அப்படி பேசிட்டேன்... மன்னிச்சிக்கோங்க” மனம் ஆறாமல் மீண்டும் அவர் மன்னிப்பு கேட்க.. 

“என்ன ? என்ன சொன்னீங்க...?” 

“மன்னிச்சிகோங்கனு...” அவர் இழுக்கும் போதே... 
“அதில்லை சார்.. எதோ மனத்தாங்கல்னு...”
 “ஓஹ், அதுவா... ஆமாம் தம்பி, எத்தனை பேர பார்க்குறோம்... சின்ன வயசுலயே மது புகைனு அடிட் ஆகி உயிர் மாய்க்கிறத... அந்த மாதிரி பசங்கள பார்க்கும் போதெல்லாம் மனசுக்கு கஷ்டமாய் இருக்கும்.. அன்னக்கி கூட நீங்களும்... அப்படித்தானோனு நினைச்சு கொஞ்சம் கோபமாவே பேசிட்…”
 “என்னை மன்னிச்சுடுங்க மாமா…” அவரின் கை பற்றியவாறே அவன் கூற
 “அய்யோ என்ன மாப்பிள்ளை நீங்க போய் என்கிட்ட, மன்னிப்பு அது இதுனுலாம் பேசிட்டு... முதல்ல கண்ணை தொடச்சிகோங்க...” 

அப்போதுதான் தன் கண்கள் கசிவதை உணர்ந்தான். 
ஆனால் இருவருமே... தங்களை அறியாமல் ஒருவர் மற்றொருவரை உறவு கூறி அழைத்ததை உணரவில்லை. 

மனதின் வெளிப்பாடு திடுமெனத்தான் வெளி வருமோ?
 கண்ணிரை துடைத்து ஆசுவாசமாய் அமர்ந்தவன்... போதை எனும் மாயை தன் வாழ்வில் ஏற்படுத்திய பேரிழப்பையும்... தன் குடும்பம் பட்ட கஷ்டங்களையும் கூறியவன்... அந்த மாயை தன் மனதில் உண்டுபண்ணிய கோபக்கனலையும் கூறினான். 
அத்தோடு தன் மனவலியையும் கூற... அவர் மனம் வெம்பியது.

 ‘தான் கோபத்தில் கூறிய வார்த்தைகள் அவனை இந்த அளவு காயப்படுத்தி இருக்கிறது... மேலும் அவனை மட்டுமல்லாது அது தன் மகளையும் எதோ ஒரு வகையில் காயப்படுத்தி உள்ளது’ என்று எண்ணும் போது அவரால் தாங்க இயலவில்லை.

 “தாங்க மாட்டாமல் அவர் மன்னிப்பு கோர...” அவன் இயல்பாய் வேண்டாமென மறுத்தான். 

பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கூற வேண்டுமானால் ஒவ்வொருவரும் தன் காலை பொழுதை மன்னிப்போடு தான் தொடங்க வேண்டும்...

  ஒருவர் மற்றொருவரிடம் எத்தனை தரம் மன்னிப்பு கோரினார்களோ சிறிது நேரத்தில் இருவருமே இயல்பாய் பேச தொடங்கி இருந்தனர். சகியும் தன் மனதில் இருக்கும் காதலை அவரிடம் கூறினான். 
“மாமா... நான் உங்க பொண்ண விரும்புறேன்...”
 “தெரியும் மாப்பிள்ளை...” 

எப்படியென்று? அவன் கேட்கவில்லை  மாறாக சிரித்து வைத்தான்.

 நீண்ட நேரமாகியும் இருவரும் திரும்பி வராததை உணர்ந்த மற்றையோர் வந்து பார்க்க... இருவரும், இயல்பாய் பேசியபடி வந்து கொண்டிருந்தனர். மூவருமே வாயை பிளந்தனர்... 

கவுதமின் அருகில் வந்து தோளை தட்டி கொடுத்த சகியை அணைத்து கொண்டான்.... நண்பனின் மனம் அமைதியடைந்து இருப்பதை உணர்ந்து மனம் குளிர்ந்தான். தோழிகளுக்குமே அப்படித்தான்.. எல்லாமே சுகமான சுபமாய் முடிந்ததில் பரம திருப்தி.

Post a Comment

0 Comments