17. நட்பெனும் பூங்காற்றே

 



தலைக்கு கையை முட்டிகொடுத்த படி தீவிர சிந்தனையில் இருந்தான் இளங்கோ.

கொஞ்ச நாள் முன்பு வந்த அன்னவுன் கால் அவனை குழப்பி இருந்தது.

“ சார், உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க?” பியூன் வந்து கூற,

“ இப்போ யாரையும் பார்க்கிற மனநிலை இல்ல அண்ணே… நீங்களே சொல்லி அனுப்பிடுங்க” என்று இவன் கூறினான்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தவன்,

“ சார், உங்கள பார்த்தே ஆகணுமாம். சாயந்தரம் நம்ம ஆபிஸ் பக்கத்துல இருக்குற காஃபி ஷாப்க்கு வர சொல்லிட்டு போய்ட்டாங்க… ரொம்ப முக்கியமான விஷயம்னு சொல்ல சொன்னாங்க” எனவும் இவனுக்கு புருவம் சுருங்கியது.

“ யார்ணா அது? பாக்குறதுக்கு எப்டி இருந்தாங்க?” என கேட்க

“ தெரியல சார்… ஆள் நல்ல ஜம்முன்னு ஹீரோ கணக்கா இருந்தாப்ல” என்று தனக்கு தோன்றியதை கூறிவிட்டு சென்றான்.

மாலை வரையே ‘வந்தவன் யாராய் இருக்கும்?’ என்ற யோசனையோடு குறிப்பிட்ட இடத்தை அடைந்தான்.

சிறிது நேரம் கழித்து தன் முன் வந்து அமர்ந்தவனை கேள்வியாக பார்த்தான்.

“ ஹாய் இளங்கோ, ஐம் அஷ்வின்” என்று கூறியவனையே பார்த்து கொண்டிருந்தவன்,

“சோ, நீங்க தான் எனக்கு கால் பண்ணி தாரணி அனு பத்தி பேசணும்னு சொன்னது??”என்று கேட்டான்.

“இல்லையா பின்னே? காலைல சொன்ன மாறி மூட் இல்லைனு சொல்லிடுவீங்களோனு பயந்துட்டேன்… நல்ல வேலை ஞாபகம் வச்சி இருக்கீங்க??”

நக்கலாய் கூறினான்.

“ நீங்க யாரு?” வளவளக்காமல் நேரடியாக அவன் விஷயத்திற்கு வர அவனை மெச்சும் பார்வை பார்த்தான் அஷ்வின்.

“ அதான் சொன்னேனே என் பேர் அஷ்வின்… நான் தாரணியோட வருங்கால கணவன்” என்று கூறவும் எதிரில் இருந்தவன் அதிர்ந்தான்.

“என்ன சொல்றிங்க?” நம்ப முடியாமல் இவன் கேட்க,

ஒரு முறை அஷ்வினின் முகம் சுருங்கியது.

‘ இவனுக்கு தாரணி மேலான எண்ணம் மாறவில்லையா?’

அவன் யோசனை புரிந்ததோ? என்னவோ?

அடிபட்ட பார்வை அவனிடம்,

“ நீங்களும் நம்பலயா சார்?” என்கவும்…

“ சாரி… லீவிட் ஃப்ரண்ட்,” என்று கூறியவனின் மனதில் அப்படி ஓர் நிம்மதி.

அது காதலர்களுக்கு மட்டுமே ஏற்படும் ‘தன் பொருள் தனக்கு மட்டுமே’ என்ற எண்ணத்தின் பின் ஏற்படும் நிம்மதி.

“ நான் கேட்க வந்தது, தாரணி இருக்குற இடம் உங்களுக்கு தெரியுமான்ற அர்த்தத்தில் தான் சார்?” என்று கூற,

தன்னையே கடிந்து கொண்டவனாய் அஷ்வின் அவனிடம்,

“ அதான் சாரி சொல்லிட்டேனே… அப்புறம் அதை பத்தி பேச தானே வந்து இருக்கேன்.

ஆமா தாரணி எங்க வீட்ல தான் இருக்கா. நான் தர்ஷினியோட அண்ணன்” என்று கூறி

தெளிவாக அவனுக்கு விளக்க கேட்டு கொண்டவன் தலை கவிழ்ந்து கொண்டது.

“ என்னால தான் அஷ்வின் எல்லாமே” என்று வருந்த…

“ அடடா… இந்த பிள்ளை சொன்னதையே சொல்லுதுப்பா…

இந்நேரம் என் உயிர் நண்பன் மட்டும் இங்கே இருக்கணும்… அவன் பேசி பேசியே உன்னை ஒரு வழி பண்ணி இருப்பான்.

வரேன்னு சொன்னானே??? ஆளை காணோம்?” என்று இவன் கவனத்தை மாற்றினான்.

சிறிது நேரம் கழித்து,

“ அனு எப்டி இருக்கா இளங்கோ?” என கேட்க,

நடந்தவற்றை கூறினான்.

“ ம்ம்ம், அவ இடத்துல இருந்து யோசிக்கும் போது அது சரி தான் இளங்கோ…

கொஞ்சம் பொறுமையை கடைபிடி… எல்லாமே மாறும்” ஒரு உண்மையான நண்பனாய் ஆறுதல் கூறினான்.

“ஏன் கல்யாணத்தை தள்ளி போடணும்?” என்று கேட்டு கொண்டிருந்த கேள்விக்கு

இத்தனை நாட்களும் வீட்டினரிடமும் சுற்றி இருப்பவர்களிடமும் கூற முடியாத ஒன்றை இவனிடம் கூறியவன்,

அதற்கான அவனின் ஆறுதல் கேட்க கொஞ்சம் நம்பிக்கை துளிர்ப்பது போன்ற உணர்வு அவனுக்கு.

“ நான் தாரணி கிட்ட நடந்ததுக்கு மன்னிப்பு கேட்கவா அஷ்வின்?”

நெடுநேரமாய் நெருடிய அந்த கேள்வியை கேட்க….

இவன் பலமாய் மறுத்தான்.

“ அதை பொறுமையா பண்ணிக்கலாம்ப்பா…. இப்போ நாம முதல்ல செய்ய வேண்டியது

அனுவோட மனநிலையை சரி செய்றது தான்” என்று கூறினான்.

இளங்கோ அமைதியுடன் அதை ஒப்புக்கொள்ள…

“ அனுவுக்கு கால் பண்ணி வரச்சொல் இளங்கோ” என்று அஷ்வின் கூற இளங்கோ போனில் அவளை அழைத்தான்.

“ அனு?”

“ சொல்லு மாமா?”

“ உன் கிட்ட கொஞ்சம் பேசனும்… என் ஆபிஸ் பக்கத்துல இருக்குற காஃபி ஷாப் வரியா?”

“ என்ன விஷயம் மாமா? ஏதும் முக்கியமானதா?” என்று கேட்டாள்.

‘முன்பு இருந்தவளானால் இந்நேரம் வந்திருப்பாளே’ என்று குறை பட்ட மனதை அடக்கி விட்டு அவளை வரவழைத்தான்.

கொஞ்ச நேரத்தில் அனுவும் வந்து சேர

எதிரே இருப்பவனை பார்த்தவாறே இளங்கோவிடம்,

“ என்ன விஷயம் மாமா?” என்றாள்.

“ சொல்றேன் அனு, இது அஷ்வின்” என்று கூறியவன் அவனிடமே மேலே பேசும்படி கண் காட்ட,

“ ஹாய் அனு, நான் அஷ்வின்… உன் க்ளாஸ்மேட் தர்ஷினி அண்ணன்…

அதோட உனக்கு இன்னும் நெருக்கமா சொல்லனும்னா?

தாரணியோட வருங்கால கணவன்” என்று கூறவும்…

‘தன் செவி கேட்டது உண்மைதானா?’ என்று அதிர்ந்த பார்வை பார்த்தாள்.

ஆனால் மனமோ,

மற்றவற்றை பின்னுக்கு தள்ளி,

“ அண்ணா, தாரணி… தாரணி இருக்குற இடம் உங்களுக்கு தெரியுமாணா?

என்னை அவ கிட்ட கூட்டி போங்கணா… நான் அவளை பார்க்கணும்” என்று விம்மியவளை இளங்கோவும் அஷ்வினும் அடக்க நெடு நேரமாகியது.

சிறிது நேரத்தில் தன்னை ஒருங்கு படுத்தி கொண்டவள்,

“ தர்ஷினி வீட்டில தாரணி!!! எதிர்பாக்கலணா.

தர்ஷிக்கு எப்போதும் என் மேல பொறாமை இருக்கும்.

நான் தாரணிக்கூட ரொம்ப க்ளோஸா இருக்கிறதால…

தேங்க் காட்… நல்ல வேலை தரூவ நல்ல இடத்துல கொண்டு போய் சேர்த்தான்.

அன்னைக்கு அவ இருந்த நிலைமைக்கு தப்பான முடிவு மட்டும் எடுத்துற கூடாது கடவுளேன்னு… வேண்டிக்கிட்டு இருந்தேன்.

தர்ஷியையும் தரூவையும் பாக்கணும் போல இருக்கு.

பார்த்தா???

ரெண்டும் என் மேல் கொலை வெறில இருப்பாங்க.

நான் கைமா தான்”

எதிரில் இருப்பவர்களை மறந்து தன் போக்கில் அவள் திட்டமிட..

அவளையே விசித்திரமாய் பார்த்தனர்.

“ தரூ இப்போ என் மேல அதிக கோவமா இருக்கா இல்லன்னா?” என்று அவள் கேட்க அவன் கண்களால், ‘ ஆம்’ என்றான்.

“ ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் அனு?” என்று அவன் கேட்க,

“ புரியுதுனா” என்றவளை விழி விரிய பார்த்தான்.

“ என் மனசுல இருக்குறதையே புரிஞ்சிக்க முடிஞ்ச உன்னால தாரணி மனசுல இருக்கிறதா புரிய முடியாம போச்சு?” என்று கேட்டான்.

அவளின் விழிகள் தானாக தாழ…

“ எல்லாரும் ஒரு கட்டத்துல தன் சுயத்தை இழப்பாங்க அந்த நிலை தான்னா அப்போ எனக்கும்…”

“ ஆனா, அதுக்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம்… சொல்லப்போனால் விலை மதிப்பில்லாதது.”

“ உண்மை தான் அண்ணா…

அன்னைக்கு அவ கிட்ட நான் இளங்கோ அவளை விரும்புறதா சொல்லவும்…

அவ கண்ணுல அப்டி ஒரு வலி… அது….” என்று ஒரு முறை இளங்கோவை பார்த்தவள்,

“ காதல் பறிபோனதுக்கான வலி…

அப்போ தான் தாரணியும் இளங்கோவை விரும்புறதா நம்புனேன்.

ஒரு வகையில, நான் இளங்கோவை எடுத்துகிட்டா… அது அவளோட நட்புக்கு நான் செய்யுற துரோகமா பட்டது. அதனால தான்…” என்று இழுக்க

“ நம்ம கல்யாணத்தை தள்ளி போட சொன்ன” என்று முடித்தான் இளங்கோ.

இவள் பதில் கூறாமல் அமைதியாக,

“ ஆனா அனு, தாரணி என்னை பார்த்தது கூட இல்லையே.

அப்புறம் எப்படி? அவங்களுக்கு என் மேல?” என்று குழம்ப…

“ என்ன மாமா சொல்லுற? தாரணி உன்னை பாத்தது இல்லையா?” என்று அதிர்ந்து போனாள் அனு.

“ அன்னைக்கு மால்லயும் பார்க்லயும் பார்த்ததா சொன்னியே??”

“ அது நான் அவங்களை பார்த்ததை தான்டா சொன்னேன்”

“அப்படினா?”

இருவரின் பேச்சையும் கேட்டு கொண்டிருந்த அஷ்வின் சிரிக்க…

“ அது வேற ஒன்னுமில்ல… இளங்கோ,

தாரணி அவ விரும்புற ‘அந்த பெயர் தெரியாத ஆசாமி’

அனுவோட முறை பையன்னு நினைச்சு…

தோழிக்காக காதலை தியாகம் பண்ணிட்டா” என்று பின்னால் ஒரு குரல்.

இருவரும் திரும்ப அங்கு நம் சந்தோஷ் முகத்தில் அஷ்வினின் அதே சிரிப்புடன்.

“ வாடா நல்லவனே…

இளங்கோ, அனு இது சந்தோஷ்…

என்னோடைய ஆஸ்தான நண்பன்…

தர்ஷினியை கட்டிக்க போறவன்” என்று அறிமுக படுத்தி வைத்தான்.

“ ஏன்டா இவ்ளோ நேரம்?”

“ நல்லவனே, நீ பாட்டுக்கு என்னை இழுத்துட்டு வந்துட்ட…

அங்க உன் தங்கை, என் கிட்ட சொல்லாம எப்டி போகலாம்னு போன்ல சிலுப்பிட்டு நின்னா அவளை சமாதான படுத்திட்டு வர லேட் ஆகிட்டு” என்று கூற மற்றவர்கள் முகத்தில் புன்னகை.

அன்று தாரணியும் அஷ்வினும் சந்தித்து கொண்ட அந்த மாலின் எதிர்புற கடையில் இருந்த இளங்கோவிற்கு ,

குழந்தையோடு குழந்தையாக மாறி முகத்தை விரித்தும் சுருக்கியும் பாவனை செய்த

அந்த பெண்ணின் மேல் கவனம் சென்றது.

நேரம் கடப்பதையும் அறியாமல் அவன் அவளை பார்வையிட…

அவனோடு வந்தவரே அவனின் சிந்தையை கலைத்தார்.

அவரிடம் பேசிவிட்டு மீண்டும் அவளை தேட கண்ணில் அகப்படாமல் மறைந்து போனாள்.

“ அப்போ தான் நீ எனக்கு போன் பண்ண அனு!!

உன் கிட்ட பேசிட்டு திரும்பவும் அவளை தேடுனேன் கிடைக்கல.

சரி, சந்தர்ப்பம் இருந்தா மறுபடியும் சந்திக்கலாம்ன்னு நினைச்சு வந்துட்டேன்.” இளங்கோ கூற,

அன்றைய அவர்களின் சந்திப்பை எடுத்து கூறினான் அஷ்வின்.

‘இதை கூறும் இவன் கண்ணில் தான் எத்தனை போதை??

சற்று முன்.. நான் கூறும்போது எனக்குள் ஏற்படாத ஒரு உணர்விதுவோ?’ என்று இளங்கோ எண்ணினான்.

நம் மனதினில் நீங்கா இடம் பெறும் எந்த ஒரு இனிப்பான நிகழ்வுகளும்… எந்த சமயம் தோண்டி எடுக்கப்பட்டாலும்…

அது அப்போது நிகழும் நிகழ்வாகவே நமக்குள் வந்து போகுமே அப்படி ஓர் உணர்வது.

அவன் கண்ணில் தெரிந்த அந்த காதலை… கண்ட மூவருமே அமைதியாக அவனை அந்த சுகிப்பை உணர செய்தனர்.

“அப்புறம், அந்த பார்க்…

அங்க நான் தாரணியை பார்த்தது உன் கூட வெளியே வரும் போது தான் அனு.

‘ இந்த பொண்ணை தானே அன்னிக்கு பார்த்தோம்’னு பக்கத்துல வர ட்ரை பண்ணேன். ஆனா அதுக்குள்ள வேலை விஷயமா கால் வரவும் கிளம்ப வேண்டியதா போச்சு..

சரி, உன் கூட தான போறா.. உன் கிட்ட விசாரிச்சுக்கலாம்னு போய்ட்டேன்.

அதுக்கப்புறம் தான்,

நான் உன் கிட்ட சொன்னது…”

அவன் கூறுவது புரிய அனு அமைதியானாள்.

அஷ்வினிடம், ‘ என்ன செய்ய?’ என்று பார்வையால் இளங்கோ வினவ..

‘பொறுமை’ என்று அவனும் சைகை செய்தான்.

அன்றைய அவர்களின் சந்திப்பை அஷ்வினும் விளக்க கேட்டு கொண்டிருந்த அனுவோ

சுற்றமும் மறந்து கேவினாள்.

“ தாரணி… என்னை மன்னிச்சுடு தாரணி…

இல்ல அந்த வார்த்தையை கேட்க எனக்கு தகுதியில்லை…

ஆனா, என்னால கேக்காம இருக்க முடியலடி..

நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். இதை பத்தி உன் கிட்ட தெளிவா பேசி இருக்கணுமோ?

கண் கெட்டதுக்கு அப்புறம் கடவுளை வேண்டுறவளா ஆகிட்டேனே…

அய்யோ!! நானே உன்னை என் வாழ்க்கையில வரக்கூடாதுனு சொல்லிட்டேனே…

வரமாட்டியாடி???

என்னை உன் வாழ்க்கையில சேர்த்துக்க மாட்டியாடி???”

இன்னும் என்னென்னவோ பிதற்ற… அவளை தோளோடு சேர்த்து அணைத்தான் இளங்கோ.

அவனுக்குள்ளும் பெரும் பிரளயம்…

‘நடந்த பிளவுக்கு முழு காரணமும் தான் மட்டுமே’ என்று தோன்ற அவளை சமாளிக்கும் வழி தெரியாமல் முழித்தான்.

ஆனால் அஷ்வினோ,

“அழு… நல்ல அழு…” என்று கூற இருவருமே ஒருசேர அவனை அதிர்ந்து பார்த்தனர்.


Post a Comment

0 Comments