18. நட்பெனும் பூங்காற்றே

 


அழுது கொண்டிருந்த அனு அஷ்வினை அதிர்ந்த படி பார்க்க,

நண்பனை அறிந்து வைத்த சந்தோஷ் சிரித்தான்.

“ ஏன் மச்சி, ஏதும் டேங்க் ஓபன் பண்ண போறியா?” என்று கேட்டான்.

அஷ்வினும் உடன் சிரிக்க இருவரையும் புரியாமல் பார்த்தனர் மற்ற இருவர்.

“ அனு, இப்டி நடந்துருச்சேன்னு பீல் பண்ணிக்கிட்டு இருக்கிறத விட இதை எப்டி சரி பண்ணலாம்னு யோசிக்குறது புத்திசாலி தனம்.

அதனால தாரணி விஷயத்துல இப்டி ஆகிருச்சேன்னு நீ அழுறதா இருந்தா…

இன்னைக்கே அழுது முடிச்சுடு.

அப்புறம் என்ன செய்யலாம்னு யோசி?” என்று கூறினான்.

நீண்ட இடைவெளிக்கு பின் அவனே தொடர்ந்தான்.

“ கெட்டதுல எப்போவும் ஒரு நல்லது இருக்க தான்டா செய்யும்.

தாரணி, உன்னை பிரிஞ்சதால தான் தர்ஷினி அவளுக்கு கிடைச்சா…

இல்லைனா தர்ஷி அன்பு அவளுக்கு கடைசி வரை தெரியாம போயிருக்கும்.

அதனால ரெண்டு பேரும் இனியும் நடந்த கசப்பை மறந்துட்டு நல்லதை யோசிங்க” என்று முடித்தான்.

“ ஆமா அப்படியே அடுத்த மாசம் 16 எனக்கும் தர்ஷிக்கும் நிச்சயதார்த்தம்.

மறக்காம கலந்துக்கணும்.” என்று சந்தோஷ் அழைப்பு விடுக்க இருவரும் புன்னகையோடு வருவதாய் ஒப்புக்கொண்டனர்.

இங்கு அஷ்வினின் அலுவலகத்தில் சிந்தையை எங்கோ வைத்தபடி அமர்ந்திருந்தாள் தாரணி.

நேற்றைய இரவில் தர்ஷினி வந்து கூறியவையே மனதில் படமானது.

நேற்று இரவு:

“தரூ என்ன பண்ணிட்டு இருக்க?” என்றபடி அறையுள் வந்தாள் தர்ஷினி.

“ சும்மா டிசைன் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் தர்ஷி.

என்ன விஷயம் உன் முகம் இப்டி ஜொலிக்குது?” என்று சிரித்தபடி தாரணி கேட்க

அதிசயத்திலும் அதிசயமாக தர்ஷினிக்கு வெட்கம் வந்தது.

“ அடடா வெட்கம் வருது. அப்போ விஷயம் சந்தோஷ் அண்ணா பத்தி நினைக்குறேன் சரியா?” என கேட்க, ‘ ஆம்’ என்று தலையசைத்தாள்.

“ ஆமா தரூ, அடுத்த மாசம் 16 நிச்சயம்னு அப்பா மாமா சொன்னாங்க” என்று வெட்கத்தோடு கூறியவள்,

“ இதை சொல்லத்தான் சந்தோஷ்க்கு கால் பண்ணேன்.

லூசு இப்போ சென்னையில இருக்காம். அஷ்வின் கூப்டுச்சாம். இது பின்னடியே போச்சாம்… கதை சொல்லுது” என்று சிடுசிடுத்தாள்.

“ ஏதாவது வேலை விஷயமா இருக்கும் தர்ஷி” என்று கூறினாலும்

அவளுக்குள்ளே ஒரு குழப்பம்.

அன்று அவனிடம் குழைந்த தன் மனம்,

சடுதியில் அவனை காயப்படுத்தி விட்டு இவள் நகர…

அப்போது அவன் முகம் கொண்ட ஏமாற்றம். அதை கண்டவளுக்கு மனம் வலித்தது.

‘இவ்வளவுக்கும் இவள் இங்கே இருப்பது தானே பிரச்சனை. தான் சென்று விடலாம் என்றால்?

தர்ஷினி என்றவளின் அன்பு அவளை நகரவிடாமல் செய்தது.

‘ எனக்கு தான் இவ்வளவு கஷ்டம்.. அவனும் ஏன் அதை அனுபவிக்க வேண்டும்?’ என்று எண்ணியவளுக்கு

‘ அவனும் உன்னை விரும்புபவன் ஆயிற்றே. ஆக அவனும் அதை அனுபவிக்க தான் வேண்டும்’ என்று மனம் குரல் கொடுத்தது.

‘ இல்லை, அவனுக்கு அப்படி ஒரு கஷ்டமும் கூடாது. அவன் என்னை சந்திக்கா விட்டாலே பாதி சுமை தீர்ந்தது.’ என்று மனதை அடக்கி வைத்து இருந்தாள்.

தொடர்ந்து வந்த நாட்களில் அவன் அவசர வேலையாக சென்று இருப்பதாய் தகவல் வர

‘அவனும் தன்னை தவிர்க்கிறானோ' என்று எண்ணிய மனம் கனக்க,

காதல் மனம் கவனமாய் தானும் அதை செய்ய தான் நினைத்திருந்தாள் என்பதை மறந்துவிட செய்தது.

ஆனால் இந்த கொஞ்ச நாட்களில் அவனை காணாமல் அவளுக்குள் வந்து போன ஏமாற்றம் தந்த வலி அவனை ஒருமுறை காண வேண்டும் என்று இருந்தது.

“ ஒரு முறை வந்து பார்தாயா??

நீ ஒரு வந்து பார்த்தாயா???

என் மனம் நீ அறிந்தாயோ???

திருமகள் துன்பம் தீர்த்தாயா?

அன்புடன் கை அணைத்தாயோ?

உன் பெயர் நித்தம் இங்கு அன்பே…

அன்பே நான் தான்…

உன் பெயர் நித்தம் இங்கு

ஓதிய மங்கை என்று…

உனது மனம் உணர்ந்திருந்தும்…

எனது மனம் உனை தேட…

ஒரு முறை வந்து பார்த்தாயா??

மௌனமாக அவள் மனம் பாடியது.

“ தாரணி, என்ன ஆச்சு திடீர்னு அமைதியாகிட்ட?”

“ ஹான் ஒன்னும் இல்ல...”

“ சரி அப்போ நீ நாளைக்கு ரெடியா இரு…” என்று அவள் கூற

“ எங்க தர்ஷினி?” என்று கேட்டாள்.

‘இவ்வளவு நேரம் இவள் சிந்தனை எங்கு இருந்தது?’ என்று எண்ணியபடி

“ திலகா அத்தையை பார்க்க தாரணி. கூப்டுட்டே இருக்காங்க.

அதான் நாளைக்கு வரேன்னு சொன்னேன். நீயும் ரெடியா இரு’ என்று கூறினாள்.

“ நானுமா?” என்று இவள் தயங்க…

“ ஆமா நீயும் தான். நாளைக்கு நீ ஒர்க் முடிச்சுட்டு அங்கேயே இரு.

நான் வந்து கூட்டிட்டு போறேன்” என்று கூறி இருந்தாள்.

அந்த சிந்தனையில் தான் மூழ்கி கொண்டிருந்தாள் தாரணி.

தற்போது:

“ம்க்கும்” தொண்டை செருமலில் நிகழ் மீண்டவள் எதிரில் இருந்த அஷ்வினை கண்டு

கவலை மறந்து அத்தனை நாளும் விழியும் மனமும் தேடிய தேடலை போக்கி கொண்டிருந்தாள்.

அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.

காதலர் இருவரும் தேடிய தேடலை விழியின் வழி போக்கி கொண்டிருக்க

எவ்வளவு நேரம் கடந்ததோ?

அவர்கள் மட்டுமே இருந்த அறைக்குள் ஒருவர் பின் ஒருவராக வர இருவருக்குமான தனிமை பறி போனதில் ஏற்பட்ட ஏமாற்றத்தோடு வேலையை செய்தனர்.

அவளை பிரிந்து இருந்த இந்த சில நாட்களில் மனம் வெகுவாய் அவளை தேட…

சென்ற வேலையை விரைவிலேயே முடித்து கொண்டு அவசரமாக வந்திறங்கினான்.

வீட்டிற்கு வர சொன்ன சந்தோஷின் பேச்சை சட்டை பண்ணாமல் நேராக இங்கு தான் வந்தான்.

ஆனால், தன்னை போலவே அவளுக்குள்ளும் பிரிவின் வாட்டம் முகத்தில் தெரிய வானில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

‘ அட செல்ல கட்டி… மாமாவை பிரிஞ்சு வாடுனியா??’ என்று மனக்கண்ணில் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான்.

‘நேரில் வைத்தால் தான் தள்ளி விடுறாளே’ என்று எண்ணியபடி.

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிக கூட்டமும் இல்லை. அதிக வேலையும் இல்லை.

அதனால் பதினோரு மணிக்கு வந்த தர்ஷினி தாரணியை அழைத்து சந்தோஷ் வீட்டிற்கு சென்றாள்.

அஷ்வின் காரில் வந்திறங்கிய மூவரும் உள்ளே நுழைய…

முன்னாடியே திலகாவை கண்ட தர்ஷினி ஓடி போய் அவரின் கழுத்தை கட்டி கொண்டாள்.

பின்னால் தயங்கியபடி தாரணியும்… அவளை தொடர்ந்து சற்று இடைவெளி விட்டபடி அஷ்வினும் ஒன்றாய் வீட்டினுள் விஜயமாகினர்.

அஷ்வின் தாரணி இருவரையும் கண்ட திலகா,

‘ பரவாயில்ல, பய நல்ல பொருத்தமான ஜோடியை தான் பிடிச்சு இருக்கான்’ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டார்.

விடுவிடுவென படியேறி சென்ற அஷ்வினை தொடர்ந்தது தாரணியின் பார்வை.

அவள் பார்வை திக்கை கண்ட திலகாவின் சிரிப்பு இப்போது நன்றாக விரிய

அப்போது தான் அவரை பார்த்தாள் தாரணி.

‘ கண்டிருப்பாரோ?’ என்று எண்ணினாலும் அவரிடம் இயல் புன்னகையை வீசிட அவரும் அவளை அழகாய் வரவேற்றார்.


Post a Comment

0 Comments