19. நட்பெனும் பூங்காற்றே



சந்தோஷ் வீட்டில்:

சிறிது நேரத்தில் பனியனும் நைட் பேண்டுமாய் கீழே இறங்கி வந்த அஷ்வின் நேராக சமையல் அறையை நோக்கி நடந்தான்.

அவனையே புரியாமல் பார்த்த தாரணியின் பார்வையை உணர்ந்த திலகா

“ இன்னைக்கு சண்டேலமா அதான்” என்றார்.

அப்போதும் அவள் புரியாமல் விழிக்க

“ ஹாஹா தாரணி, இங்க அப்டி தான் எவ்ரி சண்டே பெண்களுக்கு லீவ். அவங்க தான் விருந்து ரெடி பண்ணுவாங்க” என்றாள்.

“ ஓ..” என்றபடி அவள் மீண்டும் சமையல் கட்டை ஒரு பார்வை பார்த்தாள்.

அங்கு சந்தோஷ் கணேஷ் இருவரும் புகை மூட்டில் நின்று கொண்டிருந்தனர்.

“ ஹாய் தாரணி… வா… வீடு எப்டி இருக்கு உனக்கு பிடிச்சு இருக்கா??” என்று கேட்டபடி சந்தோஷ் வர,

“ நாங்களும் வந்து இருக்கோம்” என்று தர்ஷினி கூற

“ வழக்கமா வரவங்களுக்கு எல்லாம் விருந்தோம்பல் கிடையாது” என்று பதில் இவன் கூறினான்.

“சரி சரி.. கோச்சுக்க கூடாது. சூடா என்ன சாப்பிடுற? ஆப்பிள் ஜூஸா? ஆரஞ்சு ஜூஸா?” என்று கேட்க

“ டேய், அடுப்பறை ஹீட்ல மூளை மெல்ட் ஆகிடுச்சா?” என்று கேட்டாள் தர்ஷினி.

“ ஹிஹி, நோ டார்லிங்… உன்னை பார்த்ததும் ஹார்ட் மெல்ட் ஆகிடுச்சு.

அதான் ஒழுங்கா பேச வரல” என்று சமாளித்தான்.

“ சகிக்கலை உன் சமாளிப்பு… போய் வேலைய பாரு” என்று தர்ஷினி கூற அவளை முறைத்து விட்டு அவன் அங்கிருந்து நகரவும் அஷ்வின் மூவருக்குமாய் லைம் ஜூஸ் கொண்டு வந்தான்.

அன்று அவளை ரெஸ்டாரண்டில் அனுவுடன் பார்த்த போது லைம் ஜூஸை இவள் ரசித்து குடித்தது கண்டதால்…

‘அவளுக்கு அது மிகவும் இஷ்டமோ’ என்று எண்ணியிருந்தான்.

ஆம், அவளுக்கு அது மிகவும் பிடிக்கும்.

அவன் கொண்டு வந்து வைக்கவும் புருவத்தை ஆச்சரியமாய் தூக்கினாள்.

மூவரும் தங்களுக்கு எடுத்து கொண்டனர்.

திலகா அவளிடம் பேச்சை ஆரம்பித்தார்.

“ எப்டிமா இருக்க தாரணி? உன்ன பத்தி தர்ஷினி நிறைய சொல்லிட்டே இருப்பா..”

மெல்லியதாக புன்னகைத்து கொண்டவள்,

“நல்ல இருக்கேன் ஆன்ட்டி… நீங்க எப்டி இருக்கீங்க?” என்று கேட்க

அவரின் முகம் மெலிதாய் சுணங்கியது.

“ம்ம், நல்ல இருக்கோம்டா… அப்புறம் நீ எனக்கு ஒரு உதவி செய்யணுமே?” என்று அவர் இழுக்க,

இவள் புரியாமல்,

“ என்ன ஆன்ட்டி?” என்று கேட்டாள்.

“ அதான், நீ என்னை இப்டி ஆன்ட்டினு கூப்பிடாம அழகா அம்மான்னு கூப்டேன்?”என்று பார்வையில் கெஞ்சலை தாங்கி அவர் கேட்கவும் மறுக்க தோன்றாமல்

“ சரிமா” என்றாள் புன்னகைத்து கொண்டே.

‘அவளும் அப்படி ஒரு அழைப்பை மஞ்சுவை தவிர வேறு யாரிடமும் அழைத்ததில்லை.

மஞ்சு கூட இவளை தன் சொந்த மகளாக தான் பார்த்து கொண்டார்.

இனி அவரை அப்படி அழைக்க தனக்கு கொடுப்பனை இல்லையே’ என்று ஏங்கி கொண்டிருந்தவளுக்கு திலகா அப்படி கேட்கவும் மறுக்க மனமில்லை.

‘ என்ன தான் ஆண் மகனை பெற்று எடுத்தாலும்..

அது பெண் இல்லையே!! என்ற மன சுணக்கம் லேசாய் அவருக்கு இருக்க தான் செய்தது.

தவிர, இனி குழந்தை பெறுவது உடல் நிலைக்கு சாத்தியமாகாது

என்று டாக்டர் கூறிவிட மனதில் தோன்றிய வலியை மனதிலேயே மறைத்தார்.

சரி வரும் மருமகளை தன் மகளாய் எண்ணலாம்’ என்று எண்ணி கொண்டிருக்க

தர்ஷினியிடம் எத்தனையோ முறை தன்னை ‘அம்மா’ என்று அழைக்க சொல்லி கேட்டு பார்த்தார்.

அவளோ,

செல்லமாய் அவரின் கழுத்தை கட்டி கொண்டு சிரித்தபடி மறுத்து விட்டாள்.

“ இவ கிட்ட ரொம்ப நாளா என்னை அம்மான்னு சொல்ல சொல்லி கேட்டு பார்த்தேன் தாரணி.

ம்ஹூம், மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டா…

அதனால தான்….” என்று ஏதோ கூற வந்தவர்

தாரணியின் சோபாவின் பின்னே நின்று கொண்டு,

‘வேண்டாம்’ என்பதை போல் சைகை செய்த அஷ்வினை கண்டு

சிரித்து கொண்டே,

“ உன்ன பார்த்ததும் என் மனசுக்குள்ள ஒரு உணர்வு… அதை எப்டி சொல்லனு தெரியல. அதான் டக்குனு அப்டி கேட்டுட்டேன்” என்று விளக்கம் கொடுத்தார்.

“ இருக்கட்டுமா…” என்று கூறி புன்னகைத்து கொண்டே தர்ஷினியை முறைத்தாள்.

‘ அவரின் அந்த ஆசையை நிறைவேற்றி வைத்தாலென்ன?’ என்று பார்வையில் அவள் கேட்க,

“ தரூ, எப்டி சொல்லி உனக்கு புரிய வைக்க…

என்னை பொறுத்தவரை….

உறவுகளை அதற்கான அழகான பேர் கொண்டு அழைத்து திருப்தி படுத்தனும்.

அதான், அத்தை எத்தனை முறை கேட்டும் மாட்டேன்னு சொல்லிட்டேன்.

அதும் ஒரு வகையில நல்லது தான்.

அதான் அவங்களுக்கு மகளா நீ வந்துடியே” என்று சமாதானம் செய்தாலும் தாரணி கேட்பதாய் இல்லை.

முகத்தை திருப்பி கொண்டவளை திலகா தான் சமாதானம் செய்தார்.

“ பரவாயில்ல விடுடா.. பாவம் சின்ன பொண்ணு…”

என்று கூறி சிரித்து கொண்டவர்,

“ ஆனா தரூ, இவ அதுக்கு ஒரு காரணம் சொன்னா பாரு… அதான் என்னால ஜீரணிக்க முடியல” எனவும்

தாரணி, ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.

“ ஹாஹா, இவளுக்கு நான் அம்மா ஆகிட்டா… சந்தோஷ், இவளுக்கு என்ன முறையாகும்னு?? சொல்லி மாட்டேன்ன்னு சொல்லிட்டா” கூறி திலகா சிரிக்க கூடவே தாரணியும் சிரித்தாள்.

“அப்டியா தர்ஷி, இது தான் உன் மனக்கவலையா?” என்று தாரணி கேட்க,

“ ச்சு, போங்கப்பா” என்று வெட்கியபடி சிணுங்கினாள்.

திடீரென தாரணியின் மூளையில் ஒரு எண்ணம்,

‘ இவர் எனக்கு அம்மா!! என்றால் அஷ்வின் எனக்கு என்னவாகும்???’

கேள்வி கேட்ட காதல் மனதை வம்படியாய் துரத்தி விட்டு

‘ அவன் எனக்கு எதுவும் ஆக வேணாம்’ என்று இடித்து கூறி கொண்டாள்.

அவளின் எண்ண போக்கை அவளின் முக மாறுதல்களை வைத்து கணக்கிட்டு கொண்டிருந்த அஷ்வின் மனதில் சிரித்து கொண்டான்.

சற்று நேரத்தில் சண்முகமும் வர அரட்டையோடு கூடிய சிறு விருந்தொன்று தயாராகியது.

விருந்து உண்ட களைப்பில் பெரியவர்கள் தோட்டத்தில் அமர்ந்து கதையளக்க…

அஷ்வினும் சந்தோஷும் அடித்து போட்டதை போல் உறங்கினர்.

அவர்கள் உறங்குவதை பார்த்த தாரணி,

“ நேத்து ராத்திரி தான ஊர்ல இருந்து வந்து இருக்காங்க. அவங்கள போய் சமைக்க சொல்லிட்டு… பேசாம வெளிய ஆர்டர் பண்ணி இருக்கலாம். பாவம் ரொம்ப களைப்பு போல!!” என்று வருந்தினாள்.

“ அட நீ வேற தரூ, இவனுங்க சண்டே ஆனாலே மதியம் தூங்காம இருக்க மாட்டாங்க. அவங்க டிசைன் அப்டி..” என்று சிரித்தாள்.

தோட்டத்தில்…

சுற்றி போடப்பட்டிருந்த மர நாற்காலியில் ஆளுக்கொன்றாய் சண்முகம், கணேஷ், திலகா அமர்ந்து கொண்டிருக்க முதலில் திலகா தான் பேச்சை எடுத்தார்.

“ அண்ணா அடுத்த மாசம் நிச்சயம் வச்சிட்டோம்… கல்யாணத்துக்கு நிறைய உறவு சேர வரும் அதனால இப்போ நெருங்கிய சொந்தம் மட்டும் சேர்த்து சிம்பிளா வச்சிடலாம் நினைக்கிறேன்ணா… இவர் வேணாம் சொல்றாங்க… நீங்க என்ன நினைக்கிறீங்க?” சண்முகத்திடம் கேட்க அவர்,

“ உன் யோசனை படியே செய்வோம் திலகா… கல்யாணத்தை அடுத்த முகூர்த்தத்தில் வச்சி இருக்கிற மாதிரி பாத்துக்குவோம். முடிஞ்ச வரை நம்ம பக்கம் எந்த தவறும் நடக்காம பாத்துக்குவோம். நீ என்னடா சொல்ற? இது தான் நமக்கு வசதினு படுது… உனக்கு?”

“ நான் என்ன சொல்லடா? சில பேரு சண்டைக்கு வரக்கூடாதுன்னு நினைச்சேன்…அதான் கல்யாணம் சீக்கிரம் பண்ணுறோமே… அதோட நீ பொண்ணு வீடு நாங்க பையன் வீடு நாமளே ஒன்னா இருக்கும் போது சரி என்ன வந்தாலும் பாத்துக்கலாம்” என்று அவரும் கூறிவிடவே மூவரும் நிம்மதியாக மூச்சு விட்டபடி அடுத்த அடுத்த வேலைகளை பற்றி பேச தொடங்கினர்.

திலகா தான் முதலில் தொடங்கினார்.

“ அண்ணா, அஷ்வின்க்கும் பொண்ணு பார்த்து இருந்தா ரெண்டு விசேஷத்தையும் ஒன்னா பண்ணி இருக்கலாம்ல” என்று.

மனைவியின் எண்ணப்போக்கை புரிந்த கணேஷும்,

‘ ஆஹா, நடிகையர் திலகா தன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க…’ என்று நண்பனை ஏறிட்டார்.

“ அந்த எண்ணம் இருக்கு தான் ஆனா… இவ்வளோ சீக்கிரம் பொண்ணுக்கு நாம எங்க போக முடியும் சொல்லு? அதனால அவனுக்கு பொறுமையா பாத்துக்கலாம்மா” என்று சண்முக கூறினார் பொருள் பொதிந்த பார்வையுடன்.

ஓர் நிமிடம் மௌனமாக இருந்த திலகா பின்,

“ அண்ணா, உங்களுக்கே தெரியும்… நான் அடிக்கடி சொல்றது தான் எனக்கு பொண்ணு இருந்திருந்தா நம்ம அஷ்வினுக்கு தான் கட்டி வச்சு இருப்பேன். அதையே இப்போவும் கேட்கறேன். இப்போ என் மகளா நான் நினைக்கிற தாரணியை அஷ்வினுக்கு கட்டி கொடுக்க சம்மதமா?” என்று அவர் கேட்டு வைக்க கணேஷ் மனதில் ‘ சபாஷ் பொண்டாட்டி’ என்று கூறி சிரிக்க சண்முகம் சத்தமாக சிரித்தார்.

“ ஹாஹா… நல்ல பண்றிங்கமா எல்லாரும். எனக்கு என்னவோ விஷயம் தெரியாத மாதிரி?” என்று கூற இப்போது கணேஷ் அவரோடு சேர்ந்து சிரித்தார்.

“ ஆமாடா, என்னா நடிப்பு சாமி உன்னோடது? என்னால கூட கண்ட்ரோல் பண்ண முடியல” என்று.

இருவரையும் புரியாமல் ஒரு நிமிடம் பார்த்த திலகா பின் கணவரை முறைத்தார்.

“ ஓட்ட வாய்… ஒலறியாச்சா.. நான் தான் அண்ணண்ட்ட சொல்வேன்னு சொன்னேனே” என்று கூற சண்முகம்,

“ அவன் என் நண்பன்மா… பொண்டாடிக்கிட்ட மறைக்கிற விஷயம் கூட நட்புக்கிட்ட சொல்லிடுவோம்… எங்களுக்குள்ள எப்போவுமே ரகசியம் இருந்தது இல்லை.” என்றார்.

“ அப்போ அஷ்வினை அவங்க விஷயம் தெரிஞ்சதும் தான் இங்கே அனுப்பி வச்சிங்களா?” என்று திலகா கேட்க

“ அதுக்கும் கூட சொல்லலாம்… ஆனா முன்னாடியே அப்டி தான் முடிவு பண்ணேன். தர்ஷி சொன்னதை வச்சி அந்த பொண்ணுக்கு நாம தான் எல்லாமா இருந்து நல்லது நடத்தி வைக்கணும் தோணுச்சி… அவளை ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுக்கிற வர இங்கயே தங்க வைக்கலாம்னு தான் என் முதல் எண்ணம்…

ஆனா மறுநாளே அஷ்வின் சந்தோஷ் தர்ஷினி பேசுறத கேட்டேன். அந்த பொண்ணு தான் என் வீட்டு மருமகள்னு அப்போவே முடிவு பண்ணிட்டேன். அதுக்கு அப்புறம் அஷ்வின் பயந்த மாதிரி எதுவும் நடக்குதானு பாக்க ஆரம்பிச்சேன்.

அவன் நினைச்ச மாதிரி அந்த பொண்ணு எங்க தன் மனசுல இருக்கற காதலால்

மறுபடியும் தர்ஷினியை இழந்துடுவோம்னு அஷ்வினை ஒதுக்க ஆரம்பிச்சா… இப்போவரை அவ அவனை நெருங்க பயப்படுற ஒரே காரணம்…

இப்போ அவளுக்கு கிடைச்சி இருக்க தர்ஷினியோட நட்பு.

பாப்பு மேல அவ வச்சி இருக்கிற பாசம் தான் அவளை தடுக்குது” என்று நீண்டதாய் அவர் பேச திலகா வாய் பிளந்து அமர்ந்திருந்தார்.

“ அஷ்வின் தாரணியை விரும்புறது உங்களுக்கு எப்டி அண்ணா தெரிய வந்தது?” என்று கேட்க

“ அதான் சொன்னேனேமா அன்னைக்கு நைட் கார்மெண்ட்ல இருந்து வீட்டுக்கு வரும் போது அவங்க பேசுறத கேட்டேன். மறுநாள் அஷ்வின் அந்த பொண்ணை பார்த்த பார்வையிலே கூட உரிமை இருந்தது. நானும் அவன் வயசை கடந்து வந்தவன் தானேமா.. அதுக்கு அப்புறம் தான் அஷ்வினை இங்க அனுப்பி வச்சேன். அவங்க மேல எனக்கு நம்பிகை இருந்தாலும் கால நேரம்னு ஒன்னு இருக்கே… எல்லாம் கூடி வரட்டும்னு காத்து இருக்கேன்..” என்று அவர் கூற

இருவரும் சம்மதமாக தலையசைத்தனர்.

இங்கு இவர்கள் பேச்சை தொடங்கும் முன்னே அந்த இடத்தை அடைந்திருந்த தாரணியும் தர்ஷினியும் வர அவர்கள் பேச்சை முழுதாய் கேட்க நேரிட்டது.

திலகாவின் பேச்சிலேயே சிலையாகி விட்ட தாரணியை தர்ஷி கை பிடித்து அழைத்து வந்து இருந்தாள்.


Post a Comment

0 Comments