வெளியே சென்று வந்த கார்த்திக்கின் கண்ணில் தன் தந்தை சிவராமனிடம் அடி பட்ட காட்சி பட அவன் கத்தினான்.
“மாப்பிள்ளை… அது வந்து…”
“நீங்க எதுவும் சொல்ல தேவையில்லை. முதல்ல என் அப்பா கிட்ட மன்னிப்பு கேளுங்க” என கூற ,
“மாப்பிள்ளை….” என்று அவரும் “டேய்….” என்று சாவித்திரியும் ஒரு சேர அதிர்ந்தனர்.
“யாரும் எதுவும் சொல்ல தேவை இல்லை. மன்னிப்பு கேளுங்க மாமா” என்றான் பிடிவாதமாய்.
“ கேட்கலைனா” என்று ஒரு குரல்,
குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்ப கூட்டத்தை விலக்கி , கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வைத்து விட்டு கீர்த்தனா வந்து கொண்டிருந்தாள்.
“ரோஜா நீ சும்மா இரு”
“முடியாது மாமா”
“இங்க என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியுமா ரோஜா”
“உங்களுக்கு தெரியுமா மாமா….”
கேள்வி அவனிடம், ஆனால் அவள் பார்வை சுற்றி உள்ளவர்களை துளைத்தது.
“ப்ச், இப்போ என்ன சொல்ல வர உன் அப்பா என் அப்பாவ அடிச்சது சரினு சொல்றியா”
கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான்.
“அதிகமா அவமான படுத்தப்படுற ஒரு மனுசன் அது அளவுக்கு மீறும் போது கை ஓங்குறது தப்பில்லைன்னு சொல்றேன்”
“இந்த விளக்கமெல்லம் எனக்கு தேவை இல்லை. உன் அப்பா என் அப்பா கிட்ட மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்”
“அய்யோ மாப்பிள்ளை என்னை….” என்று சிவராமன் ஏதோ கூற வர,
“அப்பா….” என்று அவரை அதட்டியவள்
“ இல்லைனா என்ன பண்ணுவீங்க கார்த்திக்….”
அவள் விளித்ததை அவனும் அறியாமல் இல்லை. பல்லை கடித்து கோபத்தை அடக்கியவன்,
“ முடிவாக என்ன தான் சொல்ற”
“முடியாதுன்னு சொல்றேன்”
“அப்போ என்னாலயும் முடியாது”
“என்ன முடியாது?”
“ என் குடும்பத்தை மதிக்காத எந்த ஒரு உறவையும் என்னாலும் ஏத்துக்க முடியாது”
“ மாப்பிள்ளை…. அப்டிலாம் பேசாதீங்க” சிவராமன் கை எடுத்து கும்பிட முனைய அதை தடுத்தவள்,
“ போகலாம்ப்பா” என்றாள். ஒரு வார்த்தையில் அவனை தூர பார்வை பார்த்த வண்ணம்.
“அம்மாடி நீ கொஞ்சம் பேசாம இருமா”
“இல்லைப்பா, என்னோட உணர்வுகளையும் என் உறவுகளோட உணர்வுகளையும் மதிக்காத, புரிஞ்சுக்காத , புரிய முயற்சி கூட செய்யாத எந்த ஒரு உறவும் எனக்கும் வேணாம்ப்பா” என்றவளின் கண்கள் ஒரு சொட்டு கண்ணீரை சிந்த அதை கண்மூடி கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
“இதுக்கு மேலயும் இது பற்றி யாரும் என் சார்பா இறங்கி பேசினாலும் அது நான் செத்ததுக்கு சமம். இந்த வீட்டோட வாசல்லயே இந்த நாளையும் இன்று நடந்த நிகழ்வுகளையும் தோண்டி புதைச்சுட்டு வீட்டுக்கு வாங்க …போகலாம்” என்றவள் திரும்பியும் அவனை பாராது சென்று விட்டாள்.
அங்கிருந்த அனைவருக்குமே அது அதிர்ச்சி தான்.
சதா சிவதிற்கும் இது பெரிய அதிர்ச்சி தான் . மச்சினரை காய படுத்த வேண்டும் என்ற தன் எண்ணம் இப்போது தன் மகனை குத்தி காயப் படுத்தி விட்டு சென்று விட்டதோ….
இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை.
சிறு சலசலப்புடன் அங்கிருந்தவர்கள் கலைந்தனர்.
மூன்று நாட்கள் ஆகியும் கீர்த்தனாவின் வீடு கலையிழந்து காணப்பட்டது.
இந்த திருமணம் நின்று விடுமோ என்று பெரிதும் பயந்த கீர்த்தனாவின் அமைதி பெற்றவர்களுக்கு பயத்தை கொடுத்தது.
அவளிடம் வந்தவர்கள்,
“அழுதுடுமா கீர்த்து.. மனசுலே வச்சு புளுங்காத”
“நான் ஏன்பா அழனும். நான் என்ன தப்பு செஞ்சேன் அழுறதுக்கு?”
துளிர்க்க பார்த்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டாள்.
தன்னை பெற்றவர்களின் வாடிய முகம் கண்டு மெதுவாய்,
“ அப்பா எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமாப்பா”
“ என்னமா நீ .. என்ன செய்யனும் சொல்லுமா”
அவருக்கு தன் மகள் கவலை மறந்தால் சரி.
“நாம இந்த ஊர விட்டு போயிடலாம்ப்பா” என்றாள்.
அதிர்ந்து போய் இருவரும் பார்க்க,
“என்னால தாங்க முடியலப்பா.
ஊர்காரங்க ஏதோ துக்கம் போல விசாரிக்க வரதும் நீங்க ஏதோ தப்பு செஞ்சவங்க போல அவங்க முன்னாடி தலையை தொங்கப் போட்டபடி இருக்கிறதும்… அதான்ப்பா சொல்றேன் நாம இந்த ஊர விட்டு போய் விடலாம்.”
மகளின் இந்த காரணத்தை கேட்டு கொண்டாலும் அவளின் உண்மை காரணம் அவர்கள் அறியாமல் இல்லை.
இந்த ஊரின் எல்லா இடங்களிலும் கார்த்திக்குடன் அவள் பழகிய கடந்த கால நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும். அது தாங்க முடியாமல் மனதிற்குள் மருகுகிற தன் மகளின் எண்ணம் அறியா சிறு பாலகர் இல்லையே அவர்கள்.
“சரிம்மா ஒரு வாரம் டைம் கொடு நாம போகலாம்…”
அவளை சமாதானம் செய்து விட்டு சென்றனர்.
அதன் படி ஊரில் உள்ள நிலங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வரும் பணத்தை நம்ப தகுந்த ஒருவரிடம் தன் வங்கி கணக்கில் மாதா மாதம் போட சொல்லி விட்டார்.
ஊரில் தற்போது இருக்கும் வீட்டையும் வாடகைக்கு கொடுத்து விட்டு அந்த பணமும் அதே வங்கி கணக்கில் சேர…
கையில் இருந்த இருப்பு பணத்தை கொண்டு திருநெல்வேலியில் தமக்கு தெரிந்த நண்பர் மூலம் வீடு பிடித்து பின் ஒரு சிறு கடையும் வைத்து என்று ஒருவாறாக எல்லாவற்றையும் முடித்து இருந்தார்.
***
கார்த்திக்கின் வீட்டில்..
அண்ணனின் நிச்சயதார்த்தம் அன்று விடுமுறை கிடைக்காததால் ஒரு வாரம் கழித்து வந்த விக்கிக்கு சாவித்திரி சொன்ன செய்தி பெரிய அதிர்ச்சி.
கார்த்தியும் கீர்த்தியும் எந்த அளவுக்கு ஒருத்தரை ஒருத்தர் விரும்பினார்கள் என்பதை விக்கி நன்கு அறிவான். அப்படி பட்டவர்கள் பிரிந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சி தராமல் இருந்தால் தான் அதிசயம்.
“ நான் இப்போவே போய் கீர்த்துவ பாத்துட்டு வரேன் மா” என்று கிளம்பியவனை சாவித்திரி தடுத்து விட்டார்.
“என் அண்ணா குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க விக்னேஷ். நம்மள யார பார்த்தாலும் அது அவங்களுக்கு இன்னும் கஷ்டத்த தான் கொடுக்கும். இப்போதைக்கு போகாதே. கொஞ்ச நாள் கழித்து செல்லலாம்”.
அவனுக்கும் அது சரியென்று பட அமைதியாகி விட்டான்.
ஆனால் பாவம், அவன் சிறிது நாட்கள் கழித்து சென்று பார்த்த போது அவர்கள் ஊரை விட்டே சென்று இருந்தனர். விபரம் கேட்ட போதும் தெரியாது… என்றே பதில் வந்தது.
இதை அறிந்த சாவித்திரி தான் அதிர்ந்து விட்டார்.
அவரிடம் பேச கார்த்திக் முனைய
“ விக்னேஷ்…” என்று அவர் போட்ட அதட்டலில் கார்த்திக் மிரள, அவசரமாய் அங்கு வந்தான் விக்கி.
“ என்ன ஆச்சுமா?”
“என் கிட்ட யாரையும் பேச கூடாதுனு சொல்லிடு . எனக்கு யார் கூடவும் பேச பிடிக்கல. மீறி பேசுனா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.”
விக்கிக்கு வாடிய முகத்துடன் நகர்ந்த கார்த்திக்கை பார்க்கவே பாவமாய் இருந்தது.
ஒரே நேரத்தில் அவனின் மனதிற்கு மிக நெருங்கிய இரு உயிர்களும் அவனை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டதை நினைக்க நினைக்க மனம் வலித்தது.
சாவித்திரி, கார்த்திக்கிடமாவது தன் எதிர்ப்பை காட்டினார். ஆனால் சதா சிவத்திற்கும் வாசுகிக்கும் அது கூட கிட்டவில்லை.
மதுரையில் இருக்கும் சமயம் சாவித்திரி அவரின் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. விக்கி தான் அவருக்கு வேலா வேலைக்கு சாப்பாடு கொண்டு செல்வான்.
மீண்டும் சென்னைக்கு வந்த பின், தன் விடுமுறை முடிந்து விக்கி பெங்களூர் திரும்ப சாவித்திரி தன் கூட்டிற்குள் புகுந்து கொண்டார்.
சதா சிவம் இருக்கும் நேரங்களில் அவர் தன் அறையை விட்டு வெளியே வர மாட்டார்.
இது அவருக்கு புரிய வரும் போது அவர் மனம்,
“ இது தனக்கு தேவை தான் “
என்றே எண்ணி கொண்டார்.
அதனாலோ என்னவோ காலையில் வெகு சீக்கிரமே வெளியே செல்பவர் , இரவு சாவித்திரி தன் அறைக்கு திரும்பிய சமயம் வருவார்.
வாசுகிக்கு வீட்டை விட்டு அப்படி செல்லும் வாய்ப்பு அதிகம் இல்லை என்பதால் , ஒரு முறை அவரே வலிய சென்று சமையலறையில் இருந்த சாவித்திரியிடம் பேச்சு கொடுத்தார்.
அடுத்த கணம், சாவித்திரியின் கையில் இருக்கும் பாத்திரம் தரையில் “ டமால் “ என புரளும்.
அதிர்ந்த வாசுகி அவரிடம் பேசுவதை விட்டு விட்டார்.
கார்த்திக்கோ ஒரு படி மேல்,
தன் இருப்பிடத்தை வேறு ஒரு இடத்தில் அமைத்து கொண்டான்.
அவ்வப்போது சதா சிவம் மட்டும் அவனிடம் பேச்சு கொடுப்பார்.
அவன் “ஆம் இல்லை” என்பதோடு நிறுத்தி கொள்வான்.
வாசுகி அவனிடம் பேச முற்பட்ட சமயம்
“வேணாம் பாட்டி, தப்பா எடுத்துக்காதீங்க. என் மனசுல ஒரு ஓரத்தில் உங்க மேல கோவம் இருக்கு”
அதிர்ந்த வாசுகியோ,
“நான் என்னப்பா செஞ்சேன்?” என வினவ,
“தெரியல பாட்டி, அப்பாக்கும் மாமாக்கும் மன கசப்பு இருக்கிறது உங்களுக்கு தெரியும். நாங்க தான் அதில் தலையிட முடியாது. ஆனா வயசுல பெரியவங்க நீங்க …. நினைச்சு இருந்தா அப்பாக்கு எடுத்து சொல்லி இருக்கலாம். ஒரு வகையில் நான் இப்படி இருக்கிறதுக்கு நீங்களும் ஒரு காரணமோ என்று எனக்கு எண்ண தோணுது. இப்படி பேசுறதுக்கு மன்னிசுடுங்க பாட்டி. என் மன காயம் ஆறும் போது நானே உங்க கிட்ட வந்து பேசுவேன். . .”
இப்படி சொல்பவனிடம் என்ன சொல்வார். அமைதியாகி விட்டார். பேரன் கூறிய வார்த்தை உண்மை தானே .
தான் தன் மகனுக்கு எடுத்து சொல்லி இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா…? அதனால்
“ தனக்கு இது தேவை தான்” என்று எண்ணி கொண்டார்.
0 Comments