அன்றைய பொழுது கீர்த்தனாவுக்கு வித்தியாசமாய் விடிந்தது.
காலையில் மித்ராவுடன் சேர்ந்து காபியையும் உணவையும் முடித்தவள், வெட்டியாய் பொழுதை போக்க பிடிக்காமல் சீக்கிரமே அலுவலகம் கிளம்பினாள்.
தெரு முனையில் இருந்த ஆட்டோ சாப்பில் சேர் ஆட்டோவில் ஏறி இரண்டு நிறுத்தங்கள் கழித்து இறங்கியவள், தன் அலுவலகம் வந்தடைந்தாள்.
யாரும் வந்திராததால் அங்கு தோட்டத்தில் போட்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.
சுற்றிலும் இருந்த ரம்யமான சூழ்நிலை அவளை கவர தோட்டத்தை சுற்றி பார்வையை ஓட விட்டாள்.
அப்போது தான் தண்ணீர் பாய்ச்சி இருப்பார்கள் போல அங்குள்ள ரோஜாவின் மேல் தண்ணீர் திட்டு திட்டாக இருந்தது. அதிலேயே அவள் பார்வை நிலைக்க அவளின் நினைவுகள் விரிந்தது.
தோப்பு வீட்டில் உள்ள தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா. அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் அது.
பார்த்து பார்த்து செடிகளை வளர்த்து வருகிறாள். அவற்றிற்கு தினமும் தண்ணீர் ஊற்றும் வேலையும் அவளது தான்.
தன் வேலையை முடித்து விட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து இருந்தவளின் பார்வை அங்குள்ள ரோஜா செடியின் மேல்.
அழகான அந்த பூவின் இதழ்களில் தண்ணீர் முத்துக்கள் …
ரசனையோடு பார்த்து கொண்டிருந்தவள் அருகில் வந்து அமர்ந்தான் கார்த்திக்.
“என்ன ரோஜா ? இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”
அவளின் கை சுட்டி காட்டிய திசையில் பார்த்தான்.
அவனுக்கும் அது பிடித்து இருந்தது போல அவன் பார்வையும் ரசனையாய் அதை வருடியது.
“அழகா இருக்குல மாமா..”
சில நொடிகள் கடந்தும் அவனிடம் பதில் இல்லாது போக அவனை திரும்பி பார்த்தாள்.
அவன் இப்போது அவளையே ரசனையோடு பார்த்து கொண்டிருந்தான்.
“என்ன மாமா?”
“ஒன்னுமில்ல”
“ஒன்னுமில்லையா…..”
அப்பட்டமாய் அவள் குரலில் ஏமாற்றம் தெரிய அவனை பார்த்தாள்.
மெல்ல சிரித்தவன்,
“எனக்கு இத பாக்கும் போது நீ திருவிழா அப்போ நம்ம ஊர் வாயக்க்கால்ல குளிச்சுட்டு தலைய துவட்டாம வந்தியே அந்த ஞாபகம் வந்துடுச்சு …”
அவன் சொன்ன தினுசில் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“அய்யோ போ மாமா…”என்று ஓடி விட்டாள்.
துளிர்க்க பார்த்த கண்ணீரை உள்ளே இழுத்து கொண்டவள் ஒரு பெரிய மூச்சை வெளியே விட்டாள்.
தன் பின்னால் கேட்ட காலடி ஓசையில் திரும்பி பார்க்க கார்த்திக் வந்து கொண்டிருந்தான் இவளை நோக்கி.
0 Comments