அந்த வீடே கலகலப்பும் சுறுசுறுப்பும் துருதுருப்புமாய் இயங்கி கொண்டிருந்தது .
ஆம் அந்த வீட்டில் விஷேசம்.
திருமண வைபவம்.
சென்ற வாரங்களில் எல்லாம் யாராவது,
''இன்னும் ஒரு வாரத்தில் உன் வீடு இப்படி கலை கட்டும் '' என்று சொன்னால் நிச்சயம் அந்த வீட்டில் உள்ளவர்கள் கை கொட்டி சிரித்து இருப்பார்கள்.
அன்று,
“எதுக்கு மச்சான் காதலு…
வேனா வேனா மோதலு..”
என்ற பாடலை ஹம்மிங் செய்தவாறு வீட்டினுள் நுழைந்தாள் அவள் திவ்யா.
வாசலில் புதிய செருப்பை கண்டவள் ‘ எதோ ஒரு புயல் வந்திருக்கு' என்று எண்ணி கொண்டே நுழைந்தாள் .
ஓஓ........
ஒரு தென்றல்..
புயலாகி வருதே ....
அடுத்ததோர் பாடல் வாயில் நர்த்தனம் ஆடியது.
(நொடிக்கு நொடி பாட்ட மாத்துர திறமைய நாம இவ கிட்ட தான் கத்துக்கணும் )
சிறிது நேரத்தில் அது புயல் அல்ல பூகம்பம் என்று அவளுக்கு தெரிந்து விட்டது .
“மதினி, என்னைய தெரியுதுகளா” என்று பவ்யமாய் ஒரு குரல்.
நெற்றி பொட்டை சுருக்கி வலக்கையை அதன் மேல் கொடுத்து, ' யாராய் இருக்கும்' என்று யோசிக்க தொடங்கினாள் அந்த 'மதினி'
ச்ச.. 'ரஞ்சிதம்'. அது தானே அவர் பெயர்.
“அட, நான்தான் கீழ வீதி ரங்கன் மகள் சுந்தரி” என்று தன்னை நினைவு படுத்த உதவினாள்.
“அட ஆமாம், பாத்து எம்பூட்டு வருஷம் ஆச்சு? எப்டி இருக்க சுந்தரி? என்ன இங்கிட்டு இந்த பக்கம்? ஏதானும் சோழியா வந்தியா?”
இது தான் ரஞ்சிதம் வளவளா கொலகொலா இல்லாமல் பட்டென்று விசயத்திற்கு வருபவள்.
(ஆமாம், அவங்களுக்கு அவங்க சீரியல் மிஸ் ஆகுதேன்னு கவலை)
“அட என்ன மதினி, உம்ம பாக்க நா வர கூடாதா? அது சரி…
இந்த வீட்ல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்காமே... போன வாரம் தான் என் தம்பி பொண்டாட்டி வந்து பாத்தாளாமே,
நீங்க கூட இப்போ வேண்டான்னு சொல்லிட்டதா, அவ வந்து போலம்புனா…
அதான் ஒரு எட்டு பாத்து புட்டு..
பையன பத்தி ஒரு நாலு வார்த்த நல்லதா சொல்லலாம்னு இவங்கள அழைச்சிட்டு வந்தா…
இங்க நீங்க இருக்கீங்க, அது சரி சந்தியா யாரு உன் பேத்தியா?” என்று கூற
அதற்குள் திவ்யாவின் தாய் அடுக்களைக்குள் ஓடி சூடாக டீயும் கொறிக்க பலகாரமும் எடுத்து வந்தாள் .
அவளை கண்டு சிநேகமாய் புன்னகைத்த சுந்தரி,
“மதினி, உன்ன என் அஞ்சு தம்பிகள்ள ஒருத்தனுக்கு எடுக்கணும்னு எங்க அம்மாக்கு ஆசை”
“அட கூறு கெட்டவளே!! ஏன் இன்னும் ஒரு பத்து வருசத்துக்கு அப்புறம் வந்து சொல்லேன் இதை” என்று பாட்டி நொடிக்க,
ஹாலில் இருந்த திவ்யாவும் அவள் அன்னை மேகலாவும் வாய் மூடி சிரித்தனர்.
அவர்களை திரும்பி பார்த்த வாசுகி பார்வையில் அடங்கினர்.
“அப்புறம் எம்மவள, உன் மவனுக்கோ இல்ல... உங்க அக்கா தங்கச்சி மகன்களுக்கோ கட்டி கொடுக்கணும்னு நெனச்சேன் , எங்க இந்த மனுஷன் விட்டா தானே” காலம் சென்ற தன் கணவரை அப்போது வெறித்தாள்.
இதை கேட்டதும் மேகலாவின் சிரிப்பு சுவிட்ச் போட்டதை போல சட்டென்று நிற்க,
இப்போது திவ்யாவும் பாட்டியும் சிரித்தனர்.
“அது கெடக்கட்டும் கழுத.. நீ என்ன சோழியா வந்த?” பாட்டி தான் நிலை மாறாமல் நின்றாள்.
“போன வாரம் என் இன்னொரு தம்பி பொண்டாடி சரசு வந்தாளாமே” என்று சுந்தரி எடுத்து கொடுக்க மேகலாவின் முகத்தில் பல்ப் எறிந்தது .
'அட நாம கூட நம்ம கணவர்ட்ட நல்ல இடம் விட வேண்டாம்னு சொன்னோமே... இவங்களும் அந்த இடத்த பத்தி தான் பேசறாங்களா' என்று எண்ணி கொண்டே அதி விரைவாக அடுக்களைக்குள் சென்றாள் பாயாசம் செய்ய.
போகும் வழியில் திவ்யாவிடம் சந்தியாவை ரெடியாகி வர சொல்லவும் அவர் மறக்கவில்லை. ( நீங்க அக்மார்க் அம்மானு ப்ரூப் பண்றிங்கமா)
'இந்த அம்மாக்கு மொத்தம் எத்தனை தம்பி எத்தனை தம்பி பொண்டாட்டி ' என்று எண்ணி கொண்டிருந்த திவ்யா தாயின் கொட்டில் தலையை தேய்த்து கொண்டே அக்காவை காண சென்றாள்.
“ஆனா என் தம்பி மவனுக்கு தான் உன் பேத்தினு கடவுள் முடிவு பண்ணிட்டார். இனி பேச என்ன இருக்கு? சட்டு புட்டுனு கல்யாண வேலைய பாக்க வேண்டிதான்…” என்று சுந்தரி கறாராக முடித்துவிட்டார்.
“இந்தம்மா பாட்டுக்கு வந்து… ஆதிகால கதைய பேசி இப்போ உனக்கு ஆப்பு வச்சதும் இல்லாம… ஆடர் போடறத பாத்தியா சந்து” திவ்யா அக்காவின் காதை கடித்தாள்.
அவளை “ஸ்ஸ்ஸ்” என்று அடக்கிய சந்தியா பதுமையாக அவர்கள் முன் மிளிர்ந்தாள்.
(சுந்தரிமா பேசுனதையே கவனிச்சிட்டு இருந்த நான் மத்தவங்கள இன்ட்ரோ பண்ணாம விட்டுட்டேன். சோ வந்தவங்கள அந்த சுந்தரியம்மாவே அறிமுக படுத்தாட்டும்)
“இவன் என் கடைசி தம்பி மனோ…
இவ அவன் பொண்டாட்டி அமிர்தம்... பேர போல குணம்.
ரெண்டு பசங்க மூத்தவனுக்கு தான் இப்போ இனம் பேசறோம்.
சின்னவன் வேலைல நல்ல முன்னுக்கு வந்தப்றம்தான் கல்யாணம்னு சொல்லிட்டான்” என்று அவர் பேசிக்கொண்டே போக இருக்கையில் இருந்து எழுந்த அமிர்தம் மேகலாவிடம் ,
“சரசு சொன்னா... நீங்க ரெண்டு பெரும் பால்ய சிநேகிதமாமே, அவ உங்க பொண்ண பத்தி சொன்னத வச்சு எங்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சி போச்சு நீங்க என்ன சொல்றிங்க…?”
“அத்தை தி கிரேட் . கரக்ட்டா கேக்க வேண்டிய இடத்துல கேட்டுடாங்க...” என்று சந்தியாவின் காதில் முணுமுணுத்தாள் திவ்யா.
“எங்களுக்கும் உங்க மேல நல்ல அபிப்ராயம் தாங்க… இருந்தாலும் பொண்ணு இப்போ தான் படிப்ப முடிச்சிருக்கா… அதான் அவங்க அப்பா கொஞ்சம் தயங்குறாங்க. அதோட இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்னா என்ன பண்றதுன்னு தெரில அதான்..” என்று மேகலா இழுத்தார் .
(என்ன ஒரு வாரத்துலயா)
“அதுகென்னங்க, கல்யாணத்துக்கு அப்புறம் கூட வேலைக்கு போகலாம். எங்க சைடுல ஒன்னும் பிரச்சன இல்ல...
எனக்கு ரெண்டு பசங்க, மூத்தவன் ஃபாரின் போய் வேலை கன்ஃபாம் ஆனதும்,
கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம்.
சின்னவன் இப்போ தான் ஃபாரின் போனான். அவனுக்கு இப்போ வேலை கன்ஃபாம் ஆகுற ஸ்டேஜ்... இப்போ போனா திரும்ப ரெண்டு இல்ல நாலு வருஷம் கழிச்சு தான் வர சான்ஸ் கிடைக்கும்.
ரெண்டு பேருக்கும் ஒன்னா எடுக்கலாம்னா…
சரோ, இப்போ வேண்டாம்னு சொல்றான்…
சந்திரனுக்கு வயசு ஏறிட்டே போது, ரெண்டு பேரும் ஊர்ல இருக்குறதோட இவனுக்காச்சும் கல்யாணம் பண்ணிடலாம்னு தான்.
உங்கள இப்படி இக்கட்டுல மாட்டி விட்றோமேனு எங்களுக்கும் வருத்தம் தான்… ஆனா என்ன பண்றது வர ஞாயிறு போய் அடுத்த ஞாயிறு நல்ல நாள்... அதோட மறு நாள் திங்கள் சரோ புறப்புடுற நாள்… என்ன செய்றதுன்னு தெரியல?” என்று சொல்லும் போதே அந்த தாயின் கண்களில் நீர் சேர தொடங்கியது .
அவரின் தோளில், சமாதானப்படுத்தும் விதமாக அவரின் கணவர் மனோவும் கை வைக்க அதன் பிறகே அவர் ஓரளவு சமாதானம் அடைந்தார்.
“இத பாருமா, புதன் கிழமை அதுவும்மா பொட்ட புள்ள இப்டி கண்ண கசக்க கூடாது” பாட்டி அதட்டினார் (அப்போ சனி கிழமை ஓகேவா பாட்டி)
“கண்ண தொடச்சிக்கோ.. இப்போ என் பிள்ள வர நேரம் தான் அவன் வந்ததும் எல்லாரும் பேசி ஒரு முடிவெடுப்போம்” மீண்டும் பாட்டி கூறினார்.
“வாழ்த்துக்கள்டி சந்து கல்யாண புதை குழில விழ போறதுக்கு” மீண்டும் தன் அக்காவின் காதை திவ்யா கடிக்க… அவள் முறைத்தாள்.
அதன் பின் நேரம் கரைய சந்தியாவின் அப்பா நாகேந்திரன் வீட்டினுள் நுழைந்தார் .
முகம் தெரியா நபர்களை கண்டவர் பொதுவாக அவர்களை வரவேற்று பின் மனைவியிடம் கண்களால் வினவினார் .
அவரும் சைகையாலே எதோ கூற,
மீண்டும் சுந்தரியே பழைய பல்லவியை பாடினார்.
(அத மறுபடியும் எழுதுனா என் கை இல்ல விரல் தான் வலிக்கும் அதான் இந்த இரத்தின சுருக்கம்)
அவரின் அந்த உறவு முறை பாலத்தை கேட்டவருக்கோ,
கழுத்திலிருந்து தலை கழண்டு தன் கையில் விழுவது போல் ஒரு பிரமை…
சட்டென்று தன் தலையை குலுக்கி சோதனை செய்து கொண்டார் அவசரமாக....(அப்பா பாவம்)
அவரின் செய்கையை கண்ட மகள்களோ வாய் மூடி சிரித்தனர்.
“கொஞ்சம் இருங்க முகம் கழுவிட்டு வந்துடறேன்” என்று அவர் தன் அறையை நோக்கி விரைந்தார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் மேகலாவும் எதோ வேலை போல அங்கு வந்து சேர, அவர்களின் நயன லீலைகளை கண்டும் காணாது ரஞ்சிதம் மௌனமாய் சிரித்தார்.
“என்ன அம்மு , என்ன இதெல்லாம்?”
“என்னங்க… என் ப்ரண்ட் கூட சொன்னாளே நல்ல இடம்னு இப்போ இவங்கள்ட்ட பேசுனத வச்சி, இவங்க குணம் எப்படின்னு ஓரளவுக்கு ஊகிக்க முடியுது . நம்ம பொண்ணுக்கு இது போல ஒரு இடம் அமைஞ்சா நல்ல இருக்கும் நீங்க என்ன சொல்றிங்க?”
“ம்ம்ம் , நான் கூட இத பத்தி பேசணும்னு தான் இருந்தேன்… நீ சொன்னதுலே இருந்து வெளிய விசாரிச்சிட்டு தான் இருந்தேன். எல்லாம் நல்ல பதிலா தான் வருது . சரி இத பத்தி மேல பேசலாம்னு … வீட்டுக்கு வந்தா இங்க நிச்சயமே முடிஞ்சிடும் போல எனக்கு தெரியாம!!!”
“என்னங்க, இப்டி சொல்லிட்டீங்க” என்றவர் குரல் வேணா அழுதுடுவேன்… என்பது போல் இருக்க,
அவரின் தலையில் வலிக்காமல் கொட்டு வைத்தார்.
“உன்ன கல்யாணம் பண்ணி கூட்டி வந்த நாள்ல இருந்து இன்னக்கி வரை நீ மாறவே இல்ல..
உன்ன போலவே உன் பிள்ளையையும் வளர்த்து வச்சிருக்க…
நாளைக்கு இந்த மாப்பிள்ளையும் என்னை போல ரொம்பவே கஷ்ட படனும் போல” அவர் கிண்டலாக கூற,
“ஆமா, கஷ்ட பட்டுட்டாலும்…. அட!!!
அப்போ நீங்க இந்த இடத்தையே” மேகலா இழுத்தார்.
அவர் புன்னகையோடு மேலும் கீழும் தலை அசைத்தார் தனக்கும் சம்மதம் என்பது போல்.
“சரி, வா கீழ போய் நம்ம சம்மதத்த சொல்லிடுவோம்.”
“ம்ம்ம், சரிங்க” என்று அவர் செல்ல போக அவர் கையை பற்றி தடுத்தவர்,
“ஆமாம், அது யார்டி மாப்பிள்ளைக்கு அத்தை முறை வருமே… அவங்க எதோ புரிஞ்சும் புரியாம எதோ சொன்னாங்களே அது என்ன உறவு முறை?? எனக்கு கொஞ்சமும் விளங்கலை…”
“ம்ம்ம், அது என்னனு உங்க அம்மாட்ட தான் கேக்கனும். சரி வாங்க அவங்களுக்கு நல்ல பதில சொல்லிட்டு அது என்னனு அப்புறமா பேசி தீர்த்துபோம்.”
சந்தோஷத்தோடு அவர்கள் விடை பெற்று சென்ற பின் அந்த வீட்டில் அப்படி ஓர் அமைதி.
0 Comments