தாய் தந்தை ஒரு புறம் எதோ யோசனையில் இருக்க திவ்யாவிற்க்கு தான் அது மிகவும் கஷ்டமாக இருந்தது.
“ச்ச.. ஏன் இப்படி எல்லாரும் ஒரே சோக வயலின் வாசிக்கிறாங்க... எனக்கு இது பிடிக்கவே இல்லையே”.(அதானே நீயெல்லாம் லொடலொட கேஸாச்சே....)
வேறு வழி இல்லாமல், அவள் தன் தமக்கையை நாடி சென்றாள்.
அங்கு அவளோ, கன்னத்தில் கை ஊன்றி தீவிரமான சிந்தனையில் இருந்தாள்.
'போச்சு.. இவ சும்மாவே அமைதியின் சிகரம்.. இதுல இது வேறயா...’ தலையில் அடித்து கொண்டாள்.
“சந்து.... அடி, ச.....ந்......தி.... யா...”
அவள் போட்ட சத்தத்தில், பச்சிளம் குழந்தையே பதறி இருக்கும்.. சந்தியாவை பற்றி கேக்கவா வேண்டும்.
அலறி அடித்து கொண்டு திவ்யாவை நோக்கினாள்.
“ம்ம் அது.. அந்த பயம் இருகட்டும் . ஏன்டீ உனக்கு தேவை இல்லாத வேலை எல்லாம் செய்ற?”
“என்ன நானா!!”
“பின்ன நானா?”
“நான் என்னடி பண்ணேன்?”
“பின்ன… மூளை இருக்குறவங்க தானே யோசிக்கனும். நீ ஏன் இதை எல்லாம் பண்ற?”
“போடி, நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற கடுப்பேத்திட்டு இருக்க...”
“ஏன்? என்ன குழப்பம்.. சந்து இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா? எதாச்சும்... லவ்….”
“ச்ச்சீ, போடி அசிங்கமா பேசாதே..”
“அதானே பார்த்தேன்.. நீயாவது லவ் பண்றதாவது... உனக்கும் அதுக்கும் ஏணி வச்சா கூட எட்டாதே…”
“ஏன்டி உனக்கு ஒழுங்கா பேசவே வராதா.. பர்ஸ்ட் என்ன பேச விடு . அது எப்படி தான் அடுத்தவங்கள பேசவே விடாம நான் ஸ்டாப்பா பேசிட்டே போறியோ”
“அதுவா.. கடவுள் பேசுற சக்தியையும் மூளையையும் உன்ன விட எனக்கு கொஞ்சம் அதிகமாவே கொடுத்ததுல யார் மேல தப்பு சொல்ல ? ( யாரயும் சொல்ல தேவை இல்ல கேக்ற எங்கள தான் சொல்லனும்..)
இன்னும் வாயை மூடாமல் வளவளக்கும் தன் தங்கையை 'என்ன செய்தால் தேவலாம்' என்று யோசிக்க தொடங்கி விட்டாள் மூத்த சகோதரி..
“சரி… சரி.. இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நான் கப்சிப்.. நீ சொல்லு நடுவுல எதுவும் பேசாம கேட்டுக்கிறேன்.
(சரினு ஒரு வார்த்தைல முடிக்க வேண்டியதையே இவ்வளோ இழுத்து சொல்ற நீயா எதும் பேச மாட்ட... நம்பமுடியலையே..)
வாயில் கை வைத்து சிறு குழந்தையை போலமர்ந்து இருக்கும் தன் தங்கையின் நிலையை பார்த்த பின்புதான் ' இவளை இப்போதைக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் ' என்று தன் யோசனையை கைவிட்டாள்.
“அது பெருசா ஒன்னும் இல்லடி”
ஏதோ கூற வந்த திவ்யா, அக்காவின் அனல் பார்வையில் அடங்கிவிட்டாள். ( நான் சொல்லல)
“அந்த சுந்தரிமா, சொன்னத வச்சி பார்த்தா.. எனக்கு என்னமோ இந்த மாப்பிள்ளைக்கு என்ன விட வயசு கூட இருக்குமோனு தோணுதுடி”
'இப்போ பேசலாமா ' என்று வாயில் தன் கையை வைத்து திவ்யா கேட்க,
“பேசித்தொலைடி” என்று பல்லை கடித்தாள் சந்தியா ( அய்யோ வேணாம் அக்கா )
“சந்து... நீ கவனிச்சியானு தெரில.. அந்த மாப்பிளையோட அப்பா செம ஹாண்ட்சமா இருந்தாங்க..” கண்ணடித்து கூறியவளை முறைத்தாள்.
“நான் என்ன சொல்றேன் ? நீ என்ன பேசுற? போடி…” எழுந்து நகர போனவள் கையை பிடித்து உட்கார வைத்தாள் திவ்யா ( அவ சின்ன பிள்ளைனு அடிக்கடி ப்ரூஃப் பண்றா சந்தியா அக்கா)
“நான் ஒன்னும் புரியாம பேசல பொதுவா பசங்க எல்லாரும் அப்பாவ போல.. பொண்ணுங்க அம்மாவ போல அத வச்சி பார்த்தா உன் மாமனாரே இவ்ளோ சின்ன பையன் போல இருக்கும் போது, உன் வருங்கால கணவர பத்தி கேட்கவே வேண்டாம்...” இவளின் புதிதான விளக்கத்தில் சந்தியா கொஞ்சம் மனம் தெளிந்தலோ என்னவோ?
“அப்படியா, அப்போ நீ மட்டும் ஏன்டி நம்ம அம்மா போல இல்லாம, ஏன் அப்பாவ போலவும் இல்லாம... இப்படி ரெண்டும் கெட்டானா இருக்க?”
வாய்க்குள் சிரிப்பை மறைத்து இவள் கேட்டாள்.
“அந்த டவுட் ரொம்ப நாளா எனக்கும் இருக்கு சந்தியா” என்று அங்கு வந்தார் மேகலா.
“என்ன டவுட்மா” தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் கேட்க ஆசை சந்தியாவிற்கு அதனாலே மீண்டும் கேட்டாள்.
“சந்து....” பல்லை கடித்தாள் திவ்யா.
இவளுக்கு எப்போதும் அம்மா அப்படி சொல்வது கோவத்தை கிளப்பும். இப்போதும் அப்படியே.
“அதுவா , ஹாஸ்பிட்டல்ல எனக்கு பிறந்த குழந்தையை யாரும் மாத்தி வச்சிட்டாங்களானு… எங்க ரெண்டு பேரு போலயும் இல்லாம… இவ மட்டும் எப்படி இப்படி இருக்கானு? எனக்கும் ரொம்ப நாளாவே சந்தேகமா இருக்கு!!”
அவர் கூறவும் சந்தியா விழுந்து விழுந்து சிரிக்க, இவள் வாய்க்குள் பற்கள் அரை பட்டது.
“அதுவா குடும்பத்துல எல்லாரும் கிறுக்காவே இருந்தா நல்ல இருக்காதுல்ல... அதான் நான் மட்டும் தெளிவா இருக்கட்டும்ன்னு இறைவன் நினைச்சுட்டு என்னை இப்டி படைச்சிருக்கான்.”
அம்மாவுக்கு பதில் கூறியவாறு அக்காவிடம் திரும்பி,
“ஏன்டி, சந்து உன் குழப்பத்த தீர்த்து வைக்க நா ஒரு புது தியரி கண்டு பிடிச்சி சொன்னா… நீ என்னையே கால் வாரி விடுறியா.... இருடி உனக்கு இருக்கு ஒரு நாள்....”
வில்லனை போல் உறுமியவளை கண்ட மேகலாவும் சந்தியாவும் வாய் விட்டு சிரிக்க அவளோ,
“இங்க ஒருத்தி வெறப்பா நிக்றேன்... நீங்க ரெண்டு பேரும் சிரிக்கிரிங்களா”
“உன்ன பாத்தா சிரிப்பு போலிஸ் மாறி இருக்கு திவ்யா” என்று சந்தியா மேலும் அவளை கடுப்படித்தாள்.
“சிரிப்பு போலிஸா ? என்ன பாத்தா அப்படி சொன்ன? சந்து உன்ன….”
“ஆமாம்டி, உன்ன குறு குறுன்னு உத்து பாத்தா ஒரு மணி நேரத்துக்கு விடாம சிரிக்கலாமே” மேகலாவும் சந்தியாவோடு சேர்ந்து கொள்ள,
“மம்மி யூ டூ.... போங்க நா உங்க யார் கூடயும் பேச மாட்டேன்... இன்னைல இருந்து நான் உண்ணா விரதம்...”
“ஹிஹிஹி, திவ்யா அது மௌன விரதம்டி… அது கூட தெரியாம நீ என்ன தான் எக்ஸாம் எழுதுனியோ ஹாஹாஹா…”
வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தவளை முறைக்க தான் முடிந்தது.
‘அய்யையோ, கோவத்துல டங்க் சிலிப் ஆய்டுச்சே...சரி, சமாளிப்போம்.’
“இத பார் சந்து.. நா மௌன விரதம்… உண்ணா விரதம் ரெண்டும் தான்...”
“ம்ஹ்ம்... நம்பிட்டோம்.” இருவரும் கோரசாக நகைத்தனர்.
ஹாலில் சோபாவில் ஆயாசமாக வந்து அமர்ந்த நாகுவை கண்டவர்கள் அவரிடம் சென்றனர்.
“என்னங்க”
“ம்ம்… சொல்லு அம்மு” தயங்கிய படியே தன் அத்தையை பார்த்தவள்,
“அத்தை...”
“ம்ம் சொல்லுமா..”
“அது வந்து..”
“என்ன தயக்கம் சொல்லு? அந்த சுந்தரி பேசுனது தானே… நானே சொல்லனும்னு நினச்சேன். வா இப்படி உட்கார்.”
அமைதியாய் அவரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.
அவருக்கும் சந்தியாவின் குழப்பம் போல தான்.
'மாப்பிள்ளைக்கு வயசு அதிகமாக இருக்குமோ ' என்று.
“ஆமாம்மா நா கூட இத பத்தி பேசனும்னு நினச்சேன்.. அவங்க பேசுறத வச்சி பார்த்தா மாப்பிள்ளைக்கும் நம்ம பொண்ணுக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப இருக்கும் போலயே”
நாகேந்திரன் தன் ஒட்டு மொத்த குடும்பத்தின் குழப்பத்தையும் தன் தாய் முன் வைத்தார். அவருக்கு மனதில் தோன்றியது இது தான்.
'தன் அம்மாவிடம் இதற்கான விடை இருக்குமோ ' என்று.
“அட நீ வேற ஏன்டா? தப்பு தப்பா நினச்சிட்டு.”
பாட்டியும் தன் குடும்ப குழப்பத்தை தீர்த்து கொண்டிருந்தார்.
“ ஒரு வயசு வித்யாசமும் இருக்காது மாப்பிள்ளைக்கு 27 ல இருந்து 28 தான் இருக்கும் என் கணிப்பு படி..”
“ அது எப்படி பாட்டி .. நீ என்ன ஜோசியரா? உன் கணிப்பை நாங்க எப்படி நம்புறது?” தானும் அங்கு இருப்பதை உணர்த்துவது போல திவ்யா கேட்க,
அவள் தலைக்கு நங்கென்ற ஒரு கொட்டு பரிசாக கிடைத்தது அவள் தாயிடம் இருந்து.
நாகேந்திரன் தன் அம்மாவிடம் திரும்பி,
“ஓஹ்.. சரிமா, அது இப்போ பெரிய விஷயம் இல்ல. ஆனா??”
அவர் இழுப்பது எதற்கு என்று புரிய மெல்ல சிரித்தார் ரஞ்சிதம்.
“ ம்ம்ம், புரியுது. நாம நம்ம சொந்த கிராமத்த விட்டு இங்க வந்து ரொம்ப வருசம் ஆச்சு நாகு... உனக்கு கல்யாணம் ஆன புதுசுல இங்க வந்தது.
சந்தியா பொறந்ததே இங்க தான்னு நா சொல்ல தேவையே இல்ல.. ஆனா அப்பப்போ நாம நம்ம ஊருக்கு போய்ட்டு தானே இருக்கோம்.”
அவர் நீண்ட விளக்கம் கொடுக்க வந்த கொட்டாவியை வாய்க்குள் அமர்த்தினாள் திவ்யா.
' அய்யோ பாட்டி மறுபடியும் தன் ஊர் புராணத்த ஆரம்பிச்சுட்டா… இனி நைட் தூங்கினாப்ல தான் ' ( உன் கஷ்டம் உனக்கு )
“ ஆமா அம்மா, ஆனா அதுக்கும்...”
“ இல்லடா கிராமத்தானுக்கு ஒரு குணம் இருக்கு.. அதை நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா?? அவன் ஊரான் எல்லாரயுமே முறை வச்சி தான் கூப்பிடுவான். அண்ணா, அக்கா, அண்ணி, மதினி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா…
இப்படி தான் இருக்கும். நம்மோட ரத்த சொந்தம்னு இல்லாம… எல்லாருமே நம்ம உறவு காரங்களாதான் நினைப்போம்.
வெளியாட்கள் யாராவது போற வீட்டுக்கு வழி தெரியாம நின்னா அவங்கள பத்திரமா அவங்க தேடி வந்த வீட்டுக்கு கூட்டிட்டு போறது தான் நம்ம பழக்கம்.
இங்க அப்படியா?
உன் அடுத்த வீட்டுல இருக்குறவனுக்கே உன் பேர் தெரியாது.
அது தான் கிராமத்துக்கும் சிட்டிக்கும் உள்ள வித்யாசம்”
ரஞ்சிதம் புலம்ப,
“ டப்டப்டப்டப்” கை தட்டி ஆர்பரித்தனர் பேத்திகள்.
“ சூப்பர் பாட்டி, சுருக்கமா சொல்லனும்னா,
*** சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா***
“அப்படி தானே” திவ்யா கேட்க புன்னகைத்த பாட்டி,
“ ம்ம்ம் ஆமா” அவளுக்கு பதில் சொல்லிவிட்டு தன் மகனை ஏறிட்டார்.
“ உன் பெரிய தாத்தா... அதான் என் பெரியப்பா அவங்களும் சுந்தரி அப்பா ரங்கனும் ஒன்னா தொழில் பார்த்தவங்க... ரங்கன் மாமாக்கு ரொம்ப வருசம் கழிச்சி பொறந்தவங்க தான் .. அவங்க பெரிய பையன் கதிரேசன்.
ரங்கன் மாமாக்கு ஒரு ஆசை என் பெரியப்பா கூட நெருங்குன சொந்தமாகனும்னு ,
அதனால இந்த சுந்தரிய எங்க பெரியண்ணாக்கு கட்டி கொடுத்தா நல்லா இருக்கும்னு நினைச்சாங்க.. ஆனா எங்க பெரியம்மா அவங்களோட தம்பி மக தான் தன் வீட்டு மருமகளா வரணும்னு முடிவா சொல்லவே,
பெரியப்பாவாலயும் மாமாவாலயும் ஒன்னும் பேச முடியல...
அது தான் முடிவாகலையே சரி,
தம்பி பொண்ண ரங்கன் பையன் கதிரேசனுக்கு கொடுப்போம்னு பெரியப்பா நினைக்க..
கதிர் அண்ணாக்கு அவங்க மாமன் மகளோட திருமணம் முடிவாய்டுச்சு..
சரி ரெண்டு குடும்பத்துக்கும் தொழில் பந்தம் தான் கடைசி வரைன்றது விதி போல. அதுக்கு அப்புறம் அந்த பேச்சே எடுக்கல.
அதுக்கு அப்புறம் எனக்கும், உன் சின்னம்மாக்கும் கல்யாணம் ஆகி அவங்க அவங்க ஊருக்கு போக…
நா என் பிறந்த வீட்டு பக்கம் போயே ரொம்ப நாள் ஆச்சு ..
எதாவது திருவிழானா போறது அதும் உன் அப்பா கையோட கூட்டிட்டு வந்துருவாங்க.
பெரியப்பா இறப்புக்கு ஊருக்கு போனப்ப…
நீ வயித்துல எட்டாம் மாசம். அப்போ எதைச்சையா ரங்கன் மாமா குடும்பத்த விசாரிச்சப்ப,
தொழில்ல நட்டம் ஆகி பெரும் தோல்வி வர முன்னமே… அவங்க அவங்க பங்க பிரிச்சிட்டதாவும்,
அதோட மாமா ஊர விட்டு குடும்பத்தோட பட்டணத்துல செட்டில் ஆய்ட்டதாவும் கேள்வி பட்டேன்.
அதுக்கு அப்புறம் நீ பொறந்தப்றம் எதைச்சையா கதிர் அண்ணாவ ஒரு நாள் பார்த்தப்போ ,
" ‘ அப்பா தவறிட்டாங்க கடைசி தம்பிக்கு ஆறு மாசம். அவன தூக்கி வச்சி கொஞ்சிட்டு நைட் படுத்தவர் தான் காலைல எழுந்திரிக்கவே இல்ல' சொல்லி அழுதவங்கள பாக்கும் போது ரொம்ப வருத்தமா போயிடுச்சு..”
சொல்லும் போதே பாட்டியின் கண்ங்களில் நீர் முட்ட அருகில் இருந்த சந்தியா தான் அவரை ஆசுவாச படுத்தினாள்.
என்ன சொல்லி அவரை சமாதான படுத்துவது என்று அங்குள்ள யாருக்கும் தெரியாததால் அமைதியாகவே சென்றது சில நிமிடங்கள்.
சிறிது நேரத்தில் தன்னிலைக்கு வந்த பாட்டி சந்தியாவிடம்,
“ இதோ பார் சந்தியா உன் மாமனாருக்கும் என் மகன் வயசு தான் ஆகும். அதோட அவன நீ உனக்கு இன்னொரு அப்பாவாவும் அத்தைய ஒரு நல்ல அம்மாவாவும் தான் பார்க்கனும்… இது இந்த பாட்டி உனக்கு சொல்றது சரியாமா..”
“ ம்ம்ம் சரி பாட்டி” என்றவளின் தலையை அன்பாய் வருடி கொடுத்தார்.
“ டேய், நாகு அந்த தம்பி போகும் போது உன் கிட்ட மாப்பிள்ளை போட்டோ கொடுத்துச்சே அத எல்லார்ட்டயும் காட்டு…”
“ அப்பா பையன் போட்டோவ வைச்சிக்கிட்டே தான் இவ்ளோ நேரமும் கதை கேட்டிங்களாபா வொய் பா வொய்..” திவ்யா பல்லை கடித்தாள்.
“ பர்ஸ்ட் நீங்க இத தானே சபைல சொல்லிருக்கனும்.
மேகலா.. என்ன புருஷன வளர்த்து வச்சிருக்க நீ?
கூறு இல்லாம... ச்சே ச்சே இப்டியே போனா இந்த பேமிலிய எப்படி முன்னுக்கு கொண்டு வரது. ம்ம்ம்…” தலையில் அடித்து கொண்டாள்.
“ அடி கழுத அப்பாவ பேர் சொல்லி கூப்ட்ற நீ..” என்று அவளை அடிக்க துரத்த அவளோ அங்கிருந்து ஓடி விட்டாள். ( அப்பாவ மட்டும் இல்லை அம்மா உங்க பேரையும் தான் சொன்னா… ஏதோ நம்மளால முடிஞ்சது)
வளர்ந்தும் இன்னும் குழந்தையாகவே இருக்கும் தன் இளைய மகளை கண்ட மேகலா,
‘ இவளுக்கும் இது போல் ஒரு நல்ல வரன் அமைய வேண்டும்' என்ற சட்டென்று கடவுளுக்கு ஒரு அவசர அப்பிளிகேசனை போடார். ( அதுக்கு தானே நான் இருக்கேன்…. ச்ச, நாம என்ன வேலை பாக்குற மாதிரி இருக்கு)
தூரத்தில் இருந்து ஒரு அசரீரி…
“ ஆஹான், அதுக்கு நீ இன்னும் நாலு வருசம் காத்திருக்கணும் மேகலா. அப்போ தானே நான் வெல் செட்டில்ட்”
வேறு யார் திவ்யா தான். தாயின் வேண்டுதல் அவள் செவியை எட்டிவிட்டது போல (நீங்க மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டீங்க போல)
அதன் பின்னர் வேலைகள் மும்முரமாய் நடை பெற்று கொண்டிருந்தன.
நெருங்கிய உறவினர்கள் முன்னமே வந்து விட அதனால் தான் இந்த வீடு இவ்வளவு ஜகஜோதியாக காட்சியளிக்கிறது.
0 Comments